Last Updated : 25 Jul, 2025 03:51 PM

 

Published : 25 Jul 2025 03:51 PM
Last Updated : 25 Jul 2025 03:51 PM

கலாமின் கடைசித் தருணமும் நினைவகமும்!

இந்தியக் குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை பதவி வகித்த அப்துல் கலாம், பதவி ஓய்வுக்குப் பிறகு ஆசிரியர் பணிக்குத் திரும்பினார். இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு வருகைப் பேராசிரியராகச் சென்று மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்தார். மாணவர்களைச் சந்தித்தபோதெல்லாம் கனவு, லட்சியத்தை வென்றெடுப்பது பற்றியும் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் பேசினார். எப்போதும் மாணவர்களுடன் உரையாடுவதை ஒரு வழக்கமாகவே அப்துல் கலாம் மாற்றிக் கொண்டிருந்தார்.

அதனால்தானோ என்னவோ, நூற்றுக் கணக்கான மாணவர்கள் முன்பு உரை யாற்றிக் கொண்டிருந்தபோதுதான் அவரை மரணம் தழுவியது. 2015 ஜூலை 27 அன்று வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாத் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐஎம்எம்) ‘வாழக்கூடிய புவியை உருவாக்குதல்' என்கிற தலைப்பில் உரை நிகழ்த்த கலாம் சென்றிருந்தார்.

மாலை 6.35 மணி அளவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது, திடீரென கலாம் மயங்கிச் சரிந்து விழுந்தார். மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் இதயச் செயலிழப்பால் இரவு 7.45 மணியளவில் கலாம் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள கலாம் இல்லத்தில் அவருடைய பூத உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிறகு அவருடைய சொந்த ஊரான தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்துக்கு பூத உடல் கொண்டு வரப்பட்டு, பேக்கரும்பு என்கிற இடத்தில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அங்கு கலாம் நினைவாக மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் ‘அப்துல் கலாம் தேசிய நினைவகம்’ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நினைவகம் கலாமின் இரண்டாவது நினைவு தினமான 2017, ஜூலை 27 அன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவகத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தவாறு அமர்ந் திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன் படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக் கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலக்கட்ட ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

இங்குள்ள காட்சிக் கூடங் களில் கலாமின் மாணவப் பருவம், விஞ் ஞானியாகப் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் அரிய ஒளிப்பட ஓவியங்கள், உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

| ஜூலை 27: கலாமின் 10-ம் ஆண்டு நினைவு நாள் |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x