Published : 21 Jul 2025 03:25 PM
Last Updated : 21 Jul 2025 03:25 PM
அமெரிக்க சமையல் உலகின் உயரிய விருதான ‘ஜேம்ஸ் பியர்டு’ விருதை மதுரையைச் சேர்ந்த விஜயகுமார் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
சமையல் உலகின் 'ஆஸ்கர் விருது' என்றுகூட சொல்லப்படுகின்ற ஜேம்ஸ் பியர்டு விருதானது, ஜேம்ஸ் பியர்டு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் 1991-ம் ஆண்டு முதல் சிறந்த உணவகம் மற்றும் சமையல்காரர் விருது, ஊடக விருது, சாதனை விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சிறந்த உணவகம் மற்றும் சமையல்காரர் விருதை, மதுரையைச் சேர்ந்த விஜயகுமார் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியரும் இவரே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, நியூயார்க் கிரீன்விச்சில் உள்ள 'செம்மா' எனும் தென்னிந்திய உணவகத்தின் தலைமை பொறுப்பு வகித்து வரும் விஜயகுமார், தமிழ்நாட்டின் கிராமப்புற சுவைகளை சர்வதேச அளவில் கொண்டு சென்றதற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். குறிப்பாக, திண்டுக்கல் பிரியாணி மற்றும் நத்தை பிரட்டல் போன்ற உணவு வகைகளை அவர் சிறப்பாக செய்து வழங்கியுள்ளார்.
இந்த விருதை பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சென்று பெற்றுக்கொண்ட விஜயகுமார், அந்த மேடையில் பேசியதாவது: மதுரைக்கு அருகிலுள்ள அரசம்பட்டி என்ற கிராமத்தில் நத்தைகள் போன்ற உணவுகள் எளிய விவசாயிகளின் உணவாகக் கருதப்பட்டன. சமையல் பள்ளியில் எஸ்கர்காட் (நத்தை உணவு) ஒரு பிரெஞ்சு சுவையாகக் கொண்டாடப்படுவதைக் கண்டபோது, எனது பார்வை மாறியது. உலகம் இன்னும் தனது சொந்த கலாச்சாரத்தின் உணவு வகைகளின் செழுமையை ருசிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.
தமிழ்நாட்டில் இருந்து வரும் என்னால் இந்த விருதை பெறமுடியும் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. நான் வளரும் போது உண்ட உணவுகள் எல்லாம் அன்பினால், ஆத்மார்த்தமாக செய்யப்பட்டவை. உணவு என்று கூறும்போது ஏழைகளுக்கான உணவு, பணக்காரர்களுக்கான உணவு என எதுவும் இல்லை எனப் பேசியுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள இவரது செம்மா உணவகத்தில் நத்தை பிரட்டை, இரால் தொக்கு, நரிவால் தினை கிச்சடி ஆகியவை பிரபலமான உணவு வகைகளாகும். அங்கு மண் பானைகளிலும், வாழை இலையிலும் உணவு பரிமாறப்படுவதும், அந்த உணவகத்தில் கரண்டி (ஸ்பூன்) இல்லாமல் கைகளில்தான் உண்ண வேண்டும் என்பதும் கூடுதல் சிறப்பாகும்.
பொறியாளர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர், பண வசதி இல்லாததால் சமையல் கலைஞராக மாறியுள்ளார். இந்த விருதின் மூலம் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள மதுரைக்கார் விஜயகுமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT