Published : 15 Jul 2025 12:17 PM
Last Updated : 15 Jul 2025 12:17 PM

காமராஜர் படிக்காத மேதையா?

படிக்காத மேதை என்கிற அடைமொழி காமராஜருக்கு நிலைத்துவிட்டது. ஆனால், முழுமையான படிப்பறிவு கொண்டவர்கள் கூடச் சிந்திக்க முடியாத அளவுக்கு காமராஜரின் திட்டமிடலும் நடவடிக்கையும் இருந்தன. தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தினாலும், நாளிதழ்களையும் பத்திரிகைகளையும் வாசிக்கும் பழக்கத்தை இளம்பருவத்திலேயே வளர்த்துக்கொண்டார்.

அனுபவம் உள்ளவர்கள் பேசுவதை ஆழ்ந்து கவனித்து, அடிப்படையான செய்திகளை உள்வாங்கிக்கொள்ளும் கேள்வி அறிவும் காமராஜருக்கு இருந்தது. விருதுநகரில் இருந்த ஒரு பெட்டிக்கடைதான் காமராஜரை, தன் குடும்பத்தினர் வழிகாட்டிய துணிக்கடை வணிகத்திலிருந்து விடுதலைப் போராட்டத்துக்குத் திருப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் விடுதலையில் நாட்டம் கொண்ட மூத்தவர்கள் சிலர், பெட்டிக்கடையில் கூடி அரசியல் நடப்புகளைப் பேசுவது காமராஜரின் ஆர்வத்தைத் தூண்டியது. காலப்போக்கில் அவரும் அந்தக் கூட்டத்தில் ஒருவர் ஆகிப்போனார். பின்னாட்களில் அவர் சந்தித்த தீரர் சத்தியமூர்த்தி, பெரியார், ராஜாஜி உள்ளிட்ட பலர் அவரைவிட, வயதில் மூத்தவர்கள். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டைத் தாண்டி அறிமுகமான நேரு முதலிய தலைவர்களிடம் பழக வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

இவர்கள் அனைவருடனும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் இணைந்து சுமுகமாகப் பணியாற்றும் அளவுக்கு காமராஜரின் செயல்பாடுகளும் தகவல்தொடர்புத் திறனும் இருந்தன. மொழியும் அவருக்கு ஒரு தடையாக இல்லை. தேவைப்பட்ட சூழல்களில் ஆங்கிலத்தில் கச்சிதமாகப் பேசக்கூடியவராகவே காமராஜர் இருந்ததை அவர் குறித்து எழுதப்பட்ட நூல்கள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

இது காந்தியடிகள் 1946இல் வந்தபோது ஏற்பட்ட சம்பவம். அது குறித்து அரிஜன் பத்திரிகையில் எழுதினார். தமிழக காங்கிரஸில் சிலர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த காந்தியடிகள் தனது ஆங்கில மொழிக் கடிதத்தில் குறிப்பிட்ட சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்.

அதாவது, தமிழக காங்கிரஸ் குறித்து அதிருப்தி தெரிவித்த காந்தி ‘clique’ என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். ஓர் அமைப்பில் தங்களுக்கிடையே நெருக்கமாக இருந்துகொண்டு, பிறர் சேர்வதைத் தடுக்கிற சிறு குழுவை இச்சொல் குறிக்கும். அப்போது காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

காந்தியின் விமர்சனங்கள் தனது தலைமையையே குறிப்பதால், காமராஜர் கடிதம் எழுதி உரிய பதில் அளித்தார். ‘clique’ என்கிற சொல் தன்னை வேதனைப்படுத்துவதாகவும் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அதில் கூறினார். ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை.

காந்தி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இந்திரா காந்தியின் போக்கைக் கண்டித்து காமராஜர் தலைமையில் காங்கிரஸ் சிண்டிகேட் என்னும் பெயரில் அணி செயல்பட்டு வந்தது. காங்கிரஸும் சிண்டிகேட் காங்கிரஸும் சேர்வதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, இதை ‘மெர்ஜ்’ (merge) எனச் சிலர் குறிப்பிட்டனர்.

அந்தச் சொல் காமராஜருக்குத் தவறாகப் பட்டது. ‘ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இரண்டு அமைப்புகள் சேர்வதைத்தான் ‘மெர்ஜ்’ என்கிற சொல் குறிக்கும். ஒரே அமைப்பின் இரு பிரிவுகள் சேர்ந்து ஒன்றாவதை ‘ரீ யூனியன்’ என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் அவர்.

பாமரருக்குப் புரிய வேண்டும் என்கிற கவனத்துடன் மேடையில் பேசக்கூடியவர்தான் காமராஜர். ‘ஆகட்டும் பார்க்கலாம்... ஆமான்னேன்... சரிதான்னேன்” இப்படியான வட்டார வழக்கு சார்ந்த சொற்கள் அவரது பேச்சின் அடையாளமாகியிருக்கலாம். ஆனால், படிக்காத மேதை என்று காமராஜருக்கு முத்திரை குத்திவிட முடியாது. ஏனெனில், அவர் மேதை என்பது மட்டுமே உண்மை. - ஆனந்த்

ஜூலை 15 - காமராஜர் பிறந்தநாள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x