Published : 15 Jul 2025 11:43 AM
Last Updated : 15 Jul 2025 11:43 AM
காமராஜர் மிகப் பெரிய அரசியல் தலைவராக, ஆட்சியாளராக மட்டுமல்ல, இக்கட்டான தருணங்களில் இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்ததால் ‘கிங் மேக்கர்’ என்றும் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டவர்.
பதவியே பிரதானம் எனப் பல தலைவர்கள் இயங்கிக்கொண்டிருந்த போது, காங்கிரஸ் இயக்கம்தான் முக்கியம் என முடிவெடுத்து, 1963இல் தமிழக முதல்வர் பதவியிலிருந்து விலகினார் காமராஜர். அதனாலேயே, அவர் மீது நேரு மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அதனால்தான் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியைக் காமராஜருக்கு வழங்க நேரு முன்வந்தார்.
1964இல் உடல்நலக் குறைவால் நேரு மறைந்தபோது அடுத்த பிரதமர் யார் என்னும் கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. அண்டை நாடான பாகிஸ்தான், தனது ராணுவத்தைப் பலப்படுத்திக்கொண்டிருந்த தருணம்; நேருவின் தலைமையை உலகமே உற்றுநோக்கிக்கொண்டிருந்த நேரம். அவரது மறைவால் இந்தியாவே ஸ்தம்பித்து நின்றது.
தற்காலிகப் பிரதமராக குல்ஸாரி லால் நந்தா பொறுப்பேற்றாலும், நாட்டுக்கு ஓர் உறுதியான தலைவர் தேவை என்பதை நன்கு உணர்ந்திருந்தார் காமராஜர்; தனக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக வேண்டும் என்று நேரு விரும்பியதையும் நினைவில் கொண்டிருந்தார்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் மொரார்ஜி தேசாய் இறங்க முடிவெடுத்த நிலையில், அந்தச் சூழலை மாற்றத் தன்னாலான முயற்சிகளை காமராஜர் எடுத்தார். லால் பகதூர் சாஸ்திரியைப் போட்டியின்றிப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார். காந்தியவாதியான லால் பகதூர் சாஸ்திரியும் நேருவுக்குப் பிறகு ஒரு சிறந்த பிரதமராகச் செயலாற்றினார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் உச்சத்தில் இருந்த நேரத்தில், ரஷ்யாவின் அழைப்பை ஏற்று போர் ஒப்பந்தத்துக்காக 1966இல் தாஷ்கண்ட் சென்றிருந்த லால் பகதூர் சாஸ்திரி, உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். மீண்டும் ஒரு வெற்றிடம் உருவானது. அப்போது பலரும் காமராஜரே பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று கருதினர். ஆனால், பதவிக்கு ஆசைப்படாத காமராஜர், சிறந்த ராஜதந்திரியாகத் தான் கருதிய இந்திரா காந்தியையே பிரதமராக்கத் திட்டமிட்டார்.
இந்த முறையும், பிரதமர் பதவியை அடைய மொரார்ஜி தேசாய் விரும்பினார். ஆனால், நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்திரா காந்தியே பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் சூத்திரதாரி காமராஜர்தான். 1967 பொதுத் தேர்தலில் 283 இடங்களில் வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தபோது, இந்திரா காந்தியை மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்ததும் காமராஜர்தான்! -
ஜூலை 15 - காமராஜர் பிறந்தநாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT