Last Updated : 12 Jul, 2025 01:25 PM

2  

Published : 12 Jul 2025 01:25 PM
Last Updated : 12 Jul 2025 01:25 PM

கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!

‘ஒரு திரைப்படம் என்ன செய்யும்... பொழுதுபோக்க வைப்பதைத் தாண்டி’ என்று கேட்போர் அதிகம். ஆனால், அவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை, பல நேரங்களில் அது சொல்லாமல் பல மாற்றங்களைச் செய்து செல்லும் என்பதை. சில நேரங்களில் அவர்களைப் போன்றோர் அறிந்து கொள்ளவே பட்டவர்த்தமான மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தும். அப்படியான ஒரு மாற்றம்தான், குழந்தைகளுக்கான ஒரு திரைப்படத்தால் கேரள பள்ளிகளில் தொடங்கி பஞ்சாப் பள்ளி வரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டு மூன்று வரிசைகளாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த இருக்கை வரிசைகளில் முதல் வரிசையில் அமரும் மாணவர்களை படிப்பாளி என்றும், கடைசி வரிசைகளில் அமரும் மாணவர்களை சேட்டைக்காரர்கள், மாணவிகளாக இருந்தால் திருமணம் வரை பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்லும் ‘மாப்பிள்ளை பெஞ்ச்காரிகள்’ என்றும் விமர்சிக்கப்பட்டே, அது பொதுபுத்தியில் உண்மை எனப் பதிந்துவிட்டது.

வகுப்பாசிரியர் என்னவோ நடுவில் நின்றுதான் பாடம் எடுக்கிறார். முதல் வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பாளிகளாகிறார்களா? அல்லது கடைசி வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார்களா என்பது, ‘கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?” போன்றதொரு விடுகதை போல் நீடிக்கிறது.

இந்நிலையில், ஓடிடி தளத்தில் வெளியான ஒரு மலையாளத் திரைப்படம் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்’ (Sthanarthi Sreekuttan) என்ற அந்தத் திரைப்படத்தின் தாக்கத்தால் கேரளாவின் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக இல்லாமல், அரைவட்ட வடிவமாக மாற்றப்பட்டுள்ளது. இது பள்ளி மாணாக்கர் மத்தியில் உளவியல் ரீதியாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாக, பல்வேறு பள்ளிகளிலும் இது ட்ரெண்டாகிறது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் கூட இதை தனது வகுப்பறையில் அமல்படுத்தியுள்ளது.

‘ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்’ - ஒரு விரைவுப் பார்வை: 2024 டிசம்பரில் ஓடிடியில் வெளியான இப்படத்தை இயக்கியிருந்தார் வினேஷ் விஸ்வநாத். அவருக்கு இது முதல் படம். திருவனந்தபுரத்தில் ஒரு முதன்மைப் பள்ளியில் நடக்கும் கதையே படம். ஒரு ‘கம்மிங் ஆஃப் ஏஜ்’ கதை வகையறாதான் இதுவும்.

கதைக்களம் திருவனந்தபுரம், கேஆர் நாராயணன் நினைவு தொடக்கப் பள்ளி. அங்கே 7-ம் வகுப்பு சி பிரிவில் படிக்கும் ‘கடைசி பெஞ்சர்’ ஸ்ரீகுட்டன் தான் கதாநாயகன். படிக்கமாட்டான், நண்பர்கள் குழு சேர்த்து சேட்டை செய்வான், வம்பிழுப்பான் இப்படி எக்கச்சக்க புகார்களுக்கு சொந்தக்காரன். அதே வகுப்பில் உள்ள இன்னொரு மாணவன் அம்பாடி. ‘முதல் பெஞ்சர்’, படிப்பாளி. அம்பாடிக்கும் - ஸ்ரீகுட்டன் கேங்குக்கும் முட்டல்கள், மோதல்கள்தான் படம்.

அடங்காத ஸ்ரீகுட்டனுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார் ஆசிரியர் சக்கரபாணி. சிகே என்றழைக்கப்படும் அவருக்கு எல்லோர் மீதும் வெறுப்புதான், அவர் மீதும் எல்லோருக்கும் வெறுப்பே!. வகுப்பு லீடராக அம்பாடியை ஆக்க நினைக்கிறார் சிகே, எப்படியாவது லீடராகிவிட துடிக்கிறான் ஸ்ரீகுட்டன். தேர்தலில் நின்று, ஜெயிக்க அவன் எடுக்கும் முயற்சிகளும் அதனை சுற்றிய நிகழ்வுகளுமாக நீளும் படத்தில் பிரச்சார நெடி சிறிதும் இல்லாமல் ஜனநாயகம், சமூ நீதி, சமத்துவம், சாதிய பாகுபாடுகளை ஒழித்தல் எனப் பல பிரச்சினைகளையும் தொட்டுச் செல்கின்றன.

தொட்டு என்றால் சும்மா தொட்டு அல்ல, ஆழமாக மனதைத் தொடுதல். அதனால் தான் படத்தில் இருந்த காட்சி சமூகத்தில் பிரதிபலித்துள்ளது. பள்ளி இருக்கையில் முதல் பெஞ்ச், கடைசி பெஞ்ச் என்ற பிரிவினை எத்தனை மோசமாக பாகுபாடு, உளவியல் ரீதியான குழந்தைகளுக்கு எத்தனை சுமை என்பதைச் சொல்லியுள்ளது.

நெகிழ்ந்துபோகும் இயக்குநர்! - இது குறித்து இயக்குநர் வினேஷ் அளித்தப் பேட்டியொன்றில், “நான் திருவனந்தபுரம் எல்பி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றபோது வகுப்பறையில் இருக்கைகள் இந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதை நான் சினிமாவில் காட்சியப்படுத்தியதற்குப் பின்னர் இத்தகைய நேர்மறை தாக்கம் ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் பல்வேறு பள்ளிகளும் தங்கள் வகுப்பறைகளில் இருக்கை வரிசை மாற்றப்பட்டுள்ளதை படமெடுத்து அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன. இயக்குநரையும் டேக் செய்து பகிரப்படுகின்றன.

அதேபோல் பஞ்சாபில் உள்ள புனித ஜோசப் பள்ளியிலும் இதே முறை பின்பற்றப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், மாணவர்களுக்கு சரிசமமான கற்றலை உறுதி செய்யும் விதமாக பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் அமைக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஒரு திரைப்படம் என்ன செய்துவிடும் என்பதற்கு இதைவிட என்ன சாட்சியிருக்க முடியும்?!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x