Published : 11 Jul 2025 03:42 PM
Last Updated : 11 Jul 2025 03:42 PM

இரவு விருந்துக்கு வராததால் உயிர் தப்பிய கர்னல் கில்லெஸ்பி - வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் சுவாரசிய தகவல்

படங்கள்: வி.எம்.மணிநாதன்

வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற சிப்பாய் புரட்சியை 7 மணி நேரத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவந்த சர் ராபர்ட் ரோலோ கில்லெஸ்பி, ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 1799-ல் நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள், அனைவரும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப் பட்டனர். வேலூர் கோட்டை பாதுகாப்பு பணியில் 4-வது படை பிரிவின் 2-வது இந்திய காலாட்படை வீரர்கள் இருந்தனர். 1806-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆங்கிலேய ராணுவத்தில் பணியாற்றிய இந்திய வீரர்களுக்கான புதிய சீருடை திருத்த விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதை ஏற்காத இந்து மற்றும் இஸ்லாமிய வீரர்கள், ஆங்கிலேயர்கள் தங்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக கருதினர்.

இந்திய காலாட்படை வீரர்கள் மத்தியில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான எதிர்ப்பு மெல்ல, மெல்ல அதிகரிக்க தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட ஆங்கிலேயர்கள் படை ஒழுங்கீன நடவடிக்கை என்ற பெயரில் 21 வீரர்களை கட்டம் கட்டினர். ராணுவ நீதிமன்றத்தில் வி்சாரணைக்கு ஆஜர்படுத்திய 21 பேருக்கும் 500 சவுக்கடிகளை தண்டனையாக வழங்கினர். இது மற்ற இந்திய காலாட்படை வீரர்களுக்கு படிப்பினையாக இருக்கும் என கருதினர்.

ஆனால், வேலூர் கோட்டையில் இருந்த இந்திய காலாட்படை வீரர்கள் மத்தியில் நிலைமை வேறு விதமாக மாறிக்கொண்டிருந்தது. இந்திய வீரர்கள் நாள் குறித்து புரட்சியில் ஈடுபட திட்டங்களை தீட்ட தொடங்கினர். மே மாதம் காலக்கட்டத்தில் வேலூர் கோட்டையின் பாதுகாப்பு பணியில் இருந்த 2-ம் பிரிவு வீரர்கள் நீக்கப்பட்டு வாலாஜாபாத்தில் இருந்த 23-ம் படை பிரிவின் 2-வது பிரிவு காலாட்படை வீரர்கள் பாதுகாப்புக் காக நிறுத்தப்பட்டனர். ஏறக்குறைய 1,700 பேர் கோட்டையின் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இனி எந்த பிரச்சினையும் இல்லை என நம்பியிருந்த நிலையில் 1806, ஜூலை 10-ம் தேதி அதிகாலை மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.

இரவை கிழித்த தோட்டாக்கள்: ஆங்கிலேயர்களுக்கு எதிராக நள்ளிரவில் திரண்ட இந்திய வீரர்கள் கோட்டையின் ஆயுத கிடங்கை கைப்பற்றி தங்களுக்கு தேவையான துப்பாக்கிகளையும், வெடி மருந்துகளையும் எடுத்துக்கொண்டனர். ஆங்கிலேயர்கள் தங்கிருந்த கட்டிடத்துக்கு விரைந்த ஒரு கும்பல் உறங்கிக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். இருட்டை வெளிச்சமாக்கிய துப்பாக்கி தோட்டாக்களுக்கு ஆங்கிலேயர்கள் மடிந்தனர். சிக்கியவர்கள் உடலில் தோட்டாக்கள் பாய, தப்பியவர்கள் இருட்டில் பதுங்கி உயிர் பிழைத்தனர். மற்றொரு கும்பல் ஆங்கிலேய அதிகாரிகள் தங்கியிருந்த வீடுகளை சுற்றிவளைத்தனர்.

புரட்சிக்காரர்களின் இலக்கு வேலூர் கோட்டை தலைமை தளபதியாக இருந்த கர்னல் பேன்கோர்ட்டின் வீட்டை நோக்கி சென்றது. இரவு நேரத்தில் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தத்தால் தூக்கம் கலைந்த பேன்கோர்ட் வீட்டின் முன்பகுதிக்கு வந்து பார்த்தபோது இந்திய வீரரின் துப்பாக்கி குண்டு இரையானார். இந்திய வீரர்களின் வேட்டைக்கு பயந்து ஆங்கிலேய அதிகாரிகள் பலர் கோட்டையின் மறைவிடங்களில் பதுங்கினர். பொழுது விடிந்தபோது கோட்டை கொத்தளத்தில் ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடியை அகற்றிய இந்திய வீரர்கள் திப்பு சுல்தானின் புலி்க்கொடியை பறக்க விட்டனர்.

குதிரையில் விரைந்த கில்லெஸ்பி: கோட்டையின் பிரதான முன்புற கதவு பூட்டிய நிலையில் கோட்டைக்குள் அவ்வப்போது எழுந்த துப்பாக்கி சத்தமும் வெளியில் இருப்பவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. நேரம் கடந்து செல்லச்செல்ல கோட்டைக்கு வெளியே இருந்த சில வீரர்களுக்கு நிலமை புரிய தொடங்கியது. ஆற்காட்டில் இருந்த ஆங்கிலேய படைகளுக்கு தகவல் பறக்க 19-வது ‘லைட் டிரகூன்’ படையை திரட்டிக்கொண்டு குதிரையில் விரைந்தார் கர்னல் கில்லெஸ்பி. டிரகூன் ரக பீரங்கள் வந்து சேர தாமதமானாலும் தனியாக வேலூர் கோட்டையை அடைந்த கில்லெஸ்பி, கோட்டைக்குள் நுழைவதற்கான வழியை தேடினார்.

கோட்டையின் தெற்கு பகுதியில் இருந்த திட்டி வாசல் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கில்லெஸ்பி, கயிற்றுக்கு பதிலாக ஆங்கிலேய வீரர்களின் பெல்டுகளை கயிறாக பயன்படுத்தி கோட்டையின் மதில் சுவர் மீது ஏறினார். சிறிது நேரத்தில் முழு படைகளுடன் திட்டிவாசல் வழியாக கோட்டைக்குள் நுழைந்தவர் கண்ணில் கண்ட இந்திய வீரர்களை சுட்டுத்தள்ளினார். ஏறக்குறைய 7 மணி நேரத்துக்குள் வேலூர் கோட்டையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். கோட்டையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த ஆங்கிலேயர்களின் உடல்களை பார்த்து கில்லெஸ்பியின் கண்கள் குளமானது.

கொல்லப்பட்ட இந்தியர்கள்: கோட்டையை வசப்படுத்திய கில்லெஸ்பி பதுங்கிய இந்திய வீரர்களை தேட தொடங்கினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பிடித்து கோட்டையின் சுவற்றில் நிற்கவைத்து ஒவ்வொருவரும் உயிரிழக்கும் வரை சுட்டுத்தள்ளினார். இதில், பீரங்கியின் வாயில் கட்டி வைத்து வெடிவைத்து கொல்லப்பட்டவர்கள் இரண்டு பேர். வேலூர் கோட்டைக்கு வெளியே உள்ள மரத்தில் பொது மக்கள் பார்வையில் 8 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

வேலூர் கோட்டையில் இந்திய வீரர்களின் புரட்சி ஆங்கிலேயர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்தது. கோட்டை மதில் சுவரை பெல்டுகளை பயன்படுத்தி ஏறிய நிகழ்வு கில்லெஸ்பியின் வீரத்தை பறைசாற்றும் வகையில் 33 வரிகள் கொண்ட பாடலாக ஆங்கிலேயர்களின் பாட புத்தகங்களில் இடம்பெற்றன.

சர் ராபர்ட் ரோலோ கில்லெஸ்பி (1814-ல் வரையப்பட்ட ஓவியம்)

கில்லெஸ்பியின் அதிர்ஷ்டம்: வேலூர் கோட்டையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கில்லெஸ்பி, கர்னல் பேன்கோர்ட்டின் உடலை பார்த்து கதறி அழ தொடங்கினர். காரணம், இருவரும் பழைய நண்பர்கள். வேலூர் கோட்டையில் ஏற்பட்ட புரட்சி ஏற்பட்ட ஜூலை 10-ம் தேதிக்கு முன்தினம் இரவு அதாவது ஜூலை 9-ம் தேதி இரவு விருந்துக்கு கில்லெஸ்பியை அழைத்திருந்தார் கர்னல் பேன்கோர்ட்.

கடைசி நேரத்தில் கில்லெஸ்பியால் விருந்துக்கு வர முடியவில்லை. ஜூலை 10-ம் தேதி காலை உணவுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தார். ஒரு வேளை அவர் வேலூர் கோட்டையில் இரவு விருந்தில் பங்கேற்றிருந்தால் கர்னல் பேன்கோர்டுடன் அவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x