Published : 02 Jul 2025 01:46 PM
Last Updated : 02 Jul 2025 01:46 PM

உணவு சுற்றுலா: காவேரிப்பட்டணம் நிப்பட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது காவேரிப்பட்டணம் எனும் அழகிய கிராமம். ஊருக்கு நடுவிலே தென்பெண்ணை ஆறு பயணிக்கச் செழிப்பாக இருக்கின்றன விவசாய நிலங்கள். அருகிலிருக்கும் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கமோ கண்களுக்கும் மனதுக்கும் இதமளிக்கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் காவேரிப்பட்டணத்துக்கு நிறையவே பெருமைகள் இருக்கின்றன. கிருஷ்ணகிரிக்கு உரித்தான சுவைமிகுந்த மாம்பழங்களை வைத்துத் தயாரிக்கப்படும் மாம்பழக்கூழ் இந்தப் பகுதியில் பிரசித்தம். மல்லிகைப்பூ மனமும் காவேரிப்பட்டணத்தின் தனித்துவம். பால் சார்ந்த வேளாண்மையும் அங்கு செழிந்தோங்குவதால் பால்கோவாவும் அங்கு ஸ்பெஷல். இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட காவேரிப்பட்டணத்தில் கிடைக்கும் ‘நிப்பட்’ எனும் தின்பண்டமோ ஆரோக்கியத்தைப் பரிசளிக்கக் கூடியது.

அதென்ன நிப்பட்? - நிப்பட் எனும் பெயர் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றலாம். தட்டுவடை, தட்டை, தட்டை வடை, அரிசித் தட்டு… இதன் வரிசையில் வருவதுதான் நிப்பட். அருகிலேயே கர்நாடக மாநிலம் இருப்பதால், கன்னட மொழியின் தாக்கத்தால் நிப்பட் எனும் பெயர் உருவாகி இருக்கிறது. நிப்பட் என்றால் கன்னடத்தில் ’வடை’ என்று பொருள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகிலிருக்கும் பல்வேறு மாவட்டங்களிலும் நிப்பட் எனும் பெயர் விரவி இருக்கிறது. நிப்பட், நிப்பட்டு, நிப்பெட்டு என அவரவர் உச்சரிப்புக்கு ஏற்ப இந்தச் சிற்றுண்டியின் பெயர் பரவலாகி இருக்கிறது. காவேரிப்பட்டணம் முழுவதும் நிப்பட் தயாரிப்பு சிறுதொழிலாக நடைபெறுகிறது. நிப்பட் தயாரிக்கும் வீடுகளும் அவற்றை விற்பனை செய்யும் கடைகளும் காவேரிப்பட்டணத்தில் அதிகம் இருக்கின்றன. அப்பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளுக்கும் நிப்பட் அனுப்பப்படுகிறது.

அரிசிமாவு, கடலைப் பருப்பு, பொட்டுக்கடலை ஆகியவற்றை இயந்திரங்களின் மூலம் மாவாக அரைத்துக்கொள்கிறார்கள். மையாக அரைத்துக் கொள்வது தரமான நிப்பட்டுக்கான பதம். பின்னர் நீர்விட்டும் எண்ணெய் விட்டும் நன்றாகக் கலக்குகிறார்கள். பொடித்த வேர்க்கடலை, லேசாக வறுத்த கறிவேப்பிலை, அரைத்து வைத்த மிளகாய், இஞ்சி - பூண்டு கலவை, உப்பு… போன்றவை மாவோடு சேர்த்துக் கலக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட பதம் வந்ததும் மாவை அச்சுகளில் இட்டு தட்டையாகத் தட்டுகின்றனர். சமீபகாலம் வரை மாவைத் தட்டையாகச் செய்யும் பணியை ஊழியர்களே மேற்கொண்டிருந்தார்கள். எரிந்துகொண்டிருக்கும் விறகடுப்பின் பெரிய வாணலியில் தட்டப்பட்ட மாவைப் போட்டுப் பொரித்து எடுக்கிறார்கள். மாவின் பதத்தையும் அவ்வப்போது சோதித்துக்கொள்கிறார்கள். பொன்னிறமாக நிப்பட் உருவெடுத்ததும் வெளியே எடுக்கிறார்கள்.

உள்ளங்கை அளவு இருக்கும் நிப்பட்களைச் சுவைத்துப் பார்க்க நொறுவைத் தன்மையோடு லேசான காரம் தட்டுப்படுகிறது. நிலக்கடலை, கறிவேப்பிலை, மிளகாய், கடலை மாவு, பொட்டுக்கடலை… இவற்றின் கலவையான சுவை புதுமையான அனுபவத்தைக் கொடுக்கிறது. ஒவ்வோர் ஊரில் தயாரிக்கப்படும் தட்டைகளுக்கும் வெவ்வேறு சுவை இருக்கும். அவ்வகையில் இந்தக் காவேரிப்பட்டண நிப்பட் மெலிதாக நாவூறும் காரத்தைப் படரச் செய்கிறது.
பொட்டுக் கடலை, வேர்க்கடலை வழங்கும் புரதமும், கறிவேப்பிலை கொடுக்கும் இரும்புச் சத்தும் உடலுக்கு ஊட்டத்தைப் பரிசளிக்கும். அரிசிமாவின் மாவுச் சத்து வலுவூட்டும். நிப்பட்டில் சேரும் அஞ்சறைப் பெட்டிப் பொருட்களால் செரிமானத்துக்கும் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை. நிப்பட் பாக்கெட் ஒன்றின் விலை ஐம்பது முதல் அறுபது ரூபாயில் கிடைக்கிறது.

உணவுகளுக்கான தொடுகைப் பொருளாகவும், மாலை நேரத்தில் சிறு பசியாற்றும் சிற்றுண்டியாகவும் இந்த நிப்பட் உதவும். நிப்பட்களை ஒன்றிரண்டாக இடித்து, அதில் சீவிய தக்காளி, கேரட், வெங்காயம் போட்டுச் சிற்றுண்டியாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சமீபமாகச் சேலம் தட்டுவடை செட் போல, காவேரிப்பட்டணம் நிப்பட்களை வைத்துத் தயாரிக்கப்படும் நிப்பட் செட்களும் மற்ற மாவட்டங்களில் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன.

பெங்களூரு நோக்கி, கிருஷ்ணகிரி வழியே பயணம் செல்கிறீர்கள் என்றால் காவேரிப்பட்டணம் எனும் அழகிய ஊருக்குள் சென்று நிப்பட்களைச் சாப்பிடத் தவறாதீர்கள்.

கட்டுரையாளர், சித்த மருத்துவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x