Published : 15 May 2025 08:16 PM
Last Updated : 15 May 2025 08:16 PM
கோடை வந்துவிட்டாலே வானிலை ஆய்வு மையம், வெயில் சதமடித்த ஊர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். கூடவே, வெப்ப அலை பற்றிய எச்சரிக்கைகளும் வரும். ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டுவிடாமல் இருக்க ஹெல்த் டிப்ஸ்கள்கூட ஏராளமாகக் குவியும். ஆனால், வீட்டினுள் இருக்கும் அடுக்களையில் இருந்து வரும் வெப்ப அலை பற்றியோ, அதனால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் பற்றியோ யாரும் அக்கறை கொள்வதில்லை. ‘கிச்சனில் ஹீட் ஸ்ட்ரோக்கா? கேள்விப்பட்டதே இல்லையே!’ என்று சொல்வோர் தான் அதிகமாக இருப்பர்.
சமையலறை வெக்கையால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, தலைவலி, குமட்டல், தலைசுற்றல், கால்களில் தசைவலி, ஹீட் ஸ்ட்ரோக் எனப் பல்வேறு பாதிப்புகளுக்கு பெண்கள் ஆளாகக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமையலறை சுறண்டல்: சமையலறை என்பது பெண்கள் மீதான எண்ணற்ற சுறண்டல்களில் ஒன்று. அம்மா கைப்பக்குவம், மனைவி கைமணம் என்று அடைமொழிகளை அடுக்கி அடுக்கி அடிமையாக்கி, இன்றளவும் தம் சமையலுக்கு பரிசாக கைவளை வேண்டாம் ஒரு கண் அசைவில் அங்கீகாரமாவது கிடைக்காதா என்று பெண் சமூகத்தை ஏங்க பழக்கப்படுத்தியிருக்கிறது இச்சமூகம். அதனாலேயே அதை சுமையாகக் கருதாமல் தனது இலாகாவாக நினைத்து இழுத்துப் போட்டு 70 வயது வரை கட்டிக் காப்பவர்களும் இருக்கிறார்கள்.
காலம் மாறிப்போச்சு.... - ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக காலம் மாறிவருகிறது. ஷிஃப்ட் போட்டு சமையலறை தொடங்கி அனைத்து வீட்டு வேலைகளையும் பிரித்துக் கொள்ளும் தம்பதிகள் இருக்கின்றன. ‘உன் சமையலறையில் நான் உப்பா, சர்க்கரையா?’ என்ற பாடல்கல் எல்லாம் மழுங்கிப் போய், நீ என்னை சமையலறை இயந்திரமாக நினைத்தால் நான் உன் முகத்தில் கசடு நீரை வாரி இரைத்துவிட்டு வெளியேறுவேன் என்ற கருத்தை முன்வைக்கும் கிரேட் இண்டியன் கிச்சன் வரை சினிமா தன் பார்வையை மாற்றிக் கொண்டுள்ளது. ஆனாலும், அன்றாடம் பசிக்கும்தானே, சமைக்க வேண்டும்தானே என்ற யதார்த்தம் முகத்தில் அறையும்போது பெண் தான் கறண்டியுடம் புறப்பட வேண்டியிருக்கிறது.
அதுவும் வெயில் சதமடிக்கும்போது அடுக்களையில் பூரி சுட்டு அடுக்குவதும், மெல்லிய, முறுகலான, பொன்னிறத்திலான தோசையை வார்த்தெடுப்பதும், கூட்டு, பொரியல், அவியல் என மெனு நீள்வதும், சண்டே ஸ்பெஷல் ஆர்டர் வருவதும், கோடை விடுமுறைக்காக வீட்டுக்கு வரும் விருந்தினருக்கான உபசரிப்புகளுக்காக சமைப்பதும் பெண்களுக்கு நரக வேதனைதான். ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டில், எனக்கு சுடச்சுட சாப்பாடு கொடு என்று கேட்கும் நபராக இருந்து, இந்தக் கட்டுரையை வாசிக்க நேர்ந்தால் இனியாவது கரிசனம் காட்டி ஓவர் தி டேபிள் ஆர்டர் போடாமல், ஒருமுறையாவது வெக்கையில் நின்று சமைத்துப் பாருங்கள்.
சரி, என்ன செய்யலாம்? வெயில் காலம் தான், அடுக்களை வெக்கை போலத்தான், கானல் நீர் பாயும் சாலைகளில் பயணித்து வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுவதும் கொடுமை என்று சிலர் வரிந்துகட்டி வரலாம். அடுக்களையில் வெந்துவிட்டு வேலைக்கும் செல்லும் பெண்கள் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.
>> மீல் ப்ளானிங் செய்யலாம்: முதலில் கோடை சீசன் ஆரம்பிக்கும் முன்னரே அடுத்த சில மாதங்களுக்கு இதுதான் மீல் ப்ளான் என்று திட்டமிட்டுக் கொள்ளலாம். இப்போது இணைய உலகில் இதெல்லாம் ரெடிமேடாகவே கிடைக்கிறது. அடுப்பில் வெந்து தணியாமல் சமைக்கக் கூடிய உணவு வகைகள் என்று ஏஐ-யிடம் கேட்டால் ஊர் வாரியாக மெனுவை அள்ளித் தெளிக்கும். அதனால் அதற்கேற்ப ஒன்பாட் குக்கிங் முறையை தேர்வு செய்யலாம். தென்னிந்திய உணவில் இது ஏற்கெனவே வழக்கத்தில் உள்ளதுதான், உப்புமா, பொங்கல், கிச்சடி வகையறாக்கள் செய்யலாம். இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உணவுக்கு செலவிட முடியுமென்றால் இவற்றை சிறுதானியங்களில் செய்யலாம். மதியத்துக்கு வெரைட்டி ரைஸ், காலைக்கு பழங்கஞ்சி, இரவுக்கு வேகவைத்த உணவு வகைகள் என்று வகுத்துக் கொள்ளலாம்.
இன்னும் எளிமைப்படுத்த வேண்டுமென்றால் ஃப்ரூட் சாலட், வெஜ் சேலட், சர்க்கரை சேர்க்காத பழச்சாறுடன் நட்ஸ் வகைகள், முட்டை, வேகவைத்த இறைச்சி, பயறு வகைகள் என்றெல்லாம் திட்டமிடலாம். இவையெல்லாமே நுண் ஊட்டச்சத்து நிறைந்த உணவும் கூட. மேலும் வெயிலும் நம் உடலைப் பதம்பார்க்காத உணவும் கூட. கொளுத்தும் கோடையில் எப்பவும் போல் பூரியும், சப்பாத்தியும், விதவிதமாக குழம்பு வகைகளும் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஊட்டச்சத்து குறைபாடு வந்துவிடாது. ஒவ்வொன்றாக செய்வதற்குப் பதிலாக ஒன்பாட் முறையில் செய்யப்போகிறோம். அவ்வளவுதான் என்கிறார் ஊட்டச்சத்துவியல் மாணவி ஒருவர்.
ரூட்டை மாத்து... - மீள் ப்ளானா நம்ம நாக்குக்கு இது செட்டாகாது என்ற குடும்பங்கள் இருந்தால், பாரபட்சமின்றி வீட்டில் அனைவருக்கும் சமையல் வேலையை பிரித்துக் கொடுத்துவிடலாம். இன்று பூரியே தான் வேண்டுமென்றால், இந்தந்த வேலைகள் எல்லாம் உங்களுடையது என்று ஒவ்வொருவருக்கு பிரித்துக் கொடுத்தால், பூரிக்கு ஏங்கும் நாவுக்காக பழகிக் கொள்ளலாம், இல்லை மீல் ப்ளானே ஓகே என்று வழிக்கு வரலாம் என்று யோசனை சொல்கிறார் இளம் பெண் ஒருவர்.
‘க்ளவுட் கிச்சன் நல்ல ஆப்ஷன்’ - இளம் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், “சமூக வலைதளத்தில் பதிவொன்றில், “எப்போதும் சமையலறை என்றே கிடக்கும் பெண்களின் அதிகபட்ச சாதனை வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கில் தோசை சுட்டதாகவே இருக்கும். அதையெல்லாம் சந்ததிகள் விதந்தோத மாட்டார்கள். மாறாக வீட்டு வேலைகளை எல்லோருக்கும் பகிர்ந்தளித்துவிட்டு தனக்கான தொழில் / வேலை என்று பொருளாதார சுதந்திரத்தை கட்டியெழுப்ப வேண்டும்” என்று யாரோ கூறக் கேட்டேன்.
எவ்வளவு நிதரசனமான உண்மை. சமைக்கத் தெரியுமா? வாய்க்கு ருசியாக சமைக்கும் பெண் தான் குடும்பத்தை சிக்கணமாக நடத்துவாள் என்றெல்லாம் கதைகட்டி பழக்கிவிட்டனர். பெண்கள் படித்தால் மட்டும் போதாது, இன்னும் கொஞ்சம் பரந்துபட்ட சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். க்ளவுட் கிச்சன் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து சேவையைப் பெறலாம். அது ஒருவேளை பட்ஜெட்டில் வரவில்லை என்றால் இதுபோன்ற கோடை வெப்ப நெருக்கடி காலங்களில் மட்டுமாவது பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற காலங்களில் குடும்பமாக இணைந்து அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
சமுதாய சமையலறைகள்... - கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தின் சந்தன்கி (chandanki) கிராமம் தேசிய அளவில் கவனம் பெற்றது. வயதானோர் அதிகம் நிறைந்த இந்த ஊர் மொத்தத்துக்கும் ஒரே சமையலறைதான். வயதானவர்கள் தனித்தனியாக சமைப்பதில் செலவும் அதிகம், சமையலர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது என்பதால் ஒரே சமையலறை உருவாக்கி, எல்லோரும் பணம் கொடுத்து தேவைக்கேற்ப மெனு கொடுத்து சமைத்து வாங்கிக் கொண்டனர். பணமும் மிச்சமானது, வேலையும் சுலபமானது என்று அவர்கள் ஊடகப் பேட்டிகளில் கூறினர். அப்போதே அதுபற்றிய பல விவாதங்கள் எழுந்தன. இதற்கு பரவலாக ஆதரவு இருந்தாலும், அதெப்படி எல்லோருக்கும் ஒரே சமையலறை என்று பிரிவினையை கருத்துகளை புகுத்தியவர்களும் இருந்தனர்.
க்ளவுட் கிச்சனுக்கு மாறுவது, சமுதாய சமையலறைகள் அமைவது எல்லாம் இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்றாலும் கூட ஒவ்வொரு வீட்டிலும் தன் அன்னைக்கோ, மனைவிக்கோ, அன்புக்குரிய பெண்ணுக்கோ கோடை விடுமுறை கொடுப்பது வீட்டில் இருப்பவர்களுக்கு சாத்தியமே. சேர்ந்து சமையுங்கள்; ஒருவரை மட்டும் வதைத்து உண்ணாதீர்கள். முடிந்தால், திரைப்படம் ஒன்றில் சாமி உனக்கு ஒரு வரம் கொடுக்கும், உனக்கு என்ன வேணுமோ பெருசா கேளு என்று சொல்லும் அண்ணனிடம், ‘எனக்கு ஒருநாள் இந்த கிச்சன்ல இருந்து லீவு வேணும்’ என்று கேட்கும் தங்கையின் முகத்தை நினைத்துப் பாருங்கள்.
அட, இவ்ளோ எல்லாம் கூட எழுதிச் சொல்ல வேண்டாம்.. 'முடியலங்க.. வியர்வை, எரிச்சல், தாங்கலங்க! வியர்த்து, வியர்த்து ஜலதோஷம் வேற. என் நைட்டியெல்லாம் நனைந்துவிடுகிறது சமைத்தெடுப்பதற்குள், சும்மாசும்மா காபி கொடு, சாம்பாரை சுடவை, மீனை வறுத்திடு, வடை சுட்டுடு என்று சொல்லும்போது ஆத்திரம் வருகிறது’ என்று தான் நான் பேசிய அத்தனை பெண்களும் அங்கலாய்த்துக் கொண்டார்கள். எனக்கும் அதே உணர்வுதான்.
இப்போதைக்கு இதுதான் நிலை என இருக்கும் சூழலில் சமைக்கும்போது பருத்தியிலான தளர்வான ஆடைகள், காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்தல், தண்ணீர் அருந்துதல், முக்கியமாக கோடையை சமாளிக்கும் சத்தான உணவை முதலில் நாம் உட்கொள்ளுதல், வேலையைப் பகிர்ந்தளித்தல் என்று ஆரம்பிப்போம். கோடை முடியும்வரை அவன், க்ரில், ஸ்க்யூர்ஸ், பார்பிக்யூ போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தவே முடியாது என்று எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT