Published : 30 Apr 2025 02:07 PM
Last Updated : 30 Apr 2025 02:07 PM
இட்லியைப் பிடிக்காதவர்கள் உண்டா! காஞ்சிபுரம் இட்லி, மினி இட்லி, வெந்தய இட்லி, ரவா இட்லி, சாம்பார் இட்லி, சிறுதானிய இட்லி, பொடி இட்லி… என இட்லியில்தான் எவ்வளவு வகைகள்!
உணவகத்துக்குச் சென்றவுடன் பலரது உதடுகள் தன்னிச்சையாக உச்சரிக்கும் முதல் உணவு வகை இட்லி! அதிகம் செலவு பிடிக்காமல் குறைந்த விலையில் பசியாற்றும் அற்புத உணவு இட்லி!
செரிமானத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுத்தாத உணவு இட்லி. நொதிக்க வைத்து ஆவியில் வேகவைக்கப்பட்டு, தயாரிக்கப்படுவதால் பாலர் முதல் முதியவர் வரை அனைவருக்குமான ஆரோக்கிய உணவாக இருக்கிறது இட்லி.
வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போதும் இட்லி குறித்து ஏகப்பட்ட பதிவுகள் இருக்கின்றன. தென்னிந்தியர்களின் உணவியலில் முக்கிய அங்கம் வகிக்கும் இட்லியின் அருமை பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு பெருமை வாய்ந்த இட்லியின் மற்றொரு வடிவம் கர்நாடகா தட்டு இட்லி.
பெங்களூரு வழியாக வயநாடு மலைப் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தோம். பசி மிகுந்த காலை வேளையில், ‘கர்நாடகா தட்டு இட்லி கிடைக்கும்’ என்கிற போர்டு தொங்கிக்கொண்டிருந்த உணவகம் கண்ணில் பட்டது.
தட்டு இட்லியை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க, ஐந்தாவது நிமிடத்தில் சுடச்சுட வந்தது! இட்லிக்கும் தட்டு இட்லிக்கும் உள்ள வித்தியாசம் வடிவமும் அளவும்தான்! ஊறவைத்த அரிசி, உளுந்தை அரைத்து நொதிக்க வைத்து, தட்டையான ஒரு குழியில் மாவை ஊற்றி, இருபது நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்தால் தட்டு இட்லி தயார். நாம் இட்லி வேக வைக்கப் பயன்படுத்தும் தட்டின் வடிவம் மட்டுமே மாறுதல்!
மூன்று இட்லிகளை ஒன்று சேர்த்தால் ஒரு தட்டு இட்லிக்குச் சமம். இரண்டு தட்டு இட்லிகளைச் சாப்பிட்டாலே பசி அடங்கும். பலருக்கோ ஒரு தட்டு இட்லியே நிறைவாகத் தெரியும்.
தொடுகையின் சுவை
தட்டு இட்லியை மேலும் சிறப்பாக்குவது தேங்காய்ச் சட்னியும் இனிப்புச் சாம்பாரும்தான். கர்நாடகத்தின் புகழ்பெற்ற இனிப்புச் சாம்பாரைத் தட்டு இட்லியில் ஊற்றி, ஊறவைத்துச் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். தட்டு இட்லியில் நெய் அல்லது வெண்ணெய்த் தடவி தேங்காய்ச் சட்னியில் தொட்டுச் சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். சில உணவகங்களில் காரச் சட்னியும் வெண்ணெய்யும் கொடுக்கிறார்கள்.
வீட்டிலேயே தட்டு இட்லி தயாரிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான கருவி ஆன்லைனில் கிடைக்கிறது. குழந்தைகளை குஷிப்படுத்த வழக்கமான இட்லிக்கு மாற்றாக மெகா சைஸ் தட்டு இட்லியைத் தயாரித்துக் கொடுக்கலாம்.
கர்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தட்டு இட்லி கிடைக்கும் என்றாலும், ராம்நகர் மாவட்டம் பிடாடியின் (Bidadi) தட்டு இட்லிக்குக் கூடுதல் மவுசு! ஆரம்பத்தில் மூங்கில் குடுவைகளைப் பயன்படுத்தி தட்டு இட்லிகளைத் தயாரித்து இருக்கிறார்கள். பிடாடியில் பாரம்பரியமிக்கப் பல்வேறு தட்டு இட்லிக் கடைகள் இருக்கின்றன. அடுத்த முறை கர்நாடகாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது தட்டு இட்லியைச் சுவைக்க மறவாதீர்கள்!
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT