Published : 02 Apr 2025 11:46 PM
Last Updated : 02 Apr 2025 11:46 PM
சேலம்: தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவமனைகளில் 50 இடங்களில், முடக்கு வாதம், மூட்டு வலி, தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு பாரம்பரிய தசைக்கூட்டு மற்றும் எலும்புக்கூட்டு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், வீடு மற்றும் பள்ளிகளுக்கு நேரில் சென்று முதியோர், மாணவர் உள்ளிட்டோருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1,700 இடங்களில் அரசு சித்த மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் ஆயுஷ் மருத்துவத் துறை மூலம் 50 சித்த மருத்துவமனைகளில், பாரம்பரிய முறையில் சிகிச்சை அளிக்கும் பிரிவு தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வாதநோய்களுக்கு சிகிச்சை: இது குறித்து சித்த மருத்துவத் துறை அலுவலர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, வாழவந்தி, கபிலர் மலை (நாமக்கல்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), புஞ்சை புளியம்பட்டி (ஈரோடு), குட்டக்குழி (கன்னியாகுமரி) உள்பட தமிழகத்தில் 50 சித்த மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மருத்துவர், ஒரு தெரபிஸ்ட் என இருவரை கொண்ட தசைக்கூட்டு மற்றும் எலும்புக்கூட்டு (மஸ்குலோ ஸ்கெலிடல்) சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
முடக்கு வாதம், பக்கவாதம், மூட்டு வலி, தூக்கமின்மை, மன அழுத்தம், உடல் பருமன், குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசம் உள்பட பல்வேறு பாதிப்புகளுக்கு தொக்கணம், யோகா, வர்மம் என சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பக்கவாதம், முகவாதம், பல்வேறு வாதநோய்கள், முதுகு தண்டுவட கோளாறுகள், முதுமையில் ஏற்படும் பலகீனம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு எண்ணெய், தைலம் போன்ற மருந்துகளை பயன்படுத்தி நீவுதல், ஒத்தடம் கொடுத்தல், மூலிகைக் கட்டு போடுதல் என பாரம்பரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. படிப்படியாக, தமிழகத்தின் 1,700 சித்த மருத்துவமனைகளிலும், சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி: சிகிச்சை குறித்து கபிலர்மலை உதவி சித்த மருத்துவ அலுவலர் எஸ்.சித்ரா கூறியதாவது: அரசு சித்த மருத்துவனையில் செயல்பட்டு வரும் பாரம்பரிய சிகிச்சை பிரிவில், வாரந்தோறும் திங்கள் கிழமையில், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொக்கணம், மூலிகைக் கட்டு உள்பட சிகிச்சை அளிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமைகளில் கர்ப்பிணிகளுக்கு, சுகப் பிரசவத்துக்கான யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. புதன்கிழமைதோறும் துணை சுகாதார நிலையங்களுக்குச் சென்று, அங்கு நீண்ட காலமாக மூட நீக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, தொக்கணம் உள்பட தேவைப்படும் பாரம்பரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வியாழக்கிழமைகளில், துணை சுகாதார நிலையங்களில் கிராம செவிலியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட முடக்கு வாதம், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, மன அழுத்த பாதிப்பு, சீரற்ற மாதவிடாய், உடல் பருமன் உள்பட பாதிப்பு கொண்ட மாணவ, மாணவிகளை கண்டறிந்து, அவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சி, மனதை ஒருநிலைப்படுத்துதல், உடற்பயிற்சி உள்ளிட்டவை மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சனிக்கிழமைகளில் அங்கன்வாடி மையங்களில், ஆட்டிசம், அதிக செயல்பாடு பாதிப்பு அறிகுறி கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு செயல்திறன் சார்ந்த பயிற்சி அளிப்பது என வாரம் முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதுமை காரணமாக முடக்கு வாதம், பக்கவாதம், மூட்டுவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவத்தின் சிறப்பு சிகிச்சைகளில் ஒன்றான தொக்கணம் உள்ளிட்டவற்றால் அளிக்கப்படும் சிகிச்சைகள் நிவாரணம் அளிக்கிறது. அரசு மருத்துவமனையில் கட்டணமின்றி அளிக்கப்படும் பாரம்பரிய சிகிச்சைக்கு மக்களிடையே வரவேற்பு பெருகி வருகிறது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT