Published : 02 Apr 2025 01:56 PM
Last Updated : 02 Apr 2025 01:56 PM
முகலாயர்களால் சர்பத் ரகங்கள் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தாலும், அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்வேறு நாடுகளில் பிரபலமாக இருந்திருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிறகு வெப்ப மண்டலப் பகுதியான நம் நாட்டில் பிரபலம் அடைந்தன சர்பத் ரகங்கள்.
பன்னாட்டுக் குளிர்பானங்களின் ஆதிக்கம் தொடங்காத காலம்வரை, ஊர் முழுவதும் சர்பத் கடைகள் நிறைந்திருந்தன. தாகத்தில் இருக்கும்போது எலுமிச்சையும் நன்னாரியும் சேர்த்த சர்பத் அனைவருக்கும் விருப்பமானது.கேரளத்தின் கொல்லம் பகுதியில் தனித்துவமான ’குலுக்கி சர்பத்’ பிரபலமாக இருந்தது. மண் பானைகளும் மண் டம்ளர்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நயம் கடைக்குப் பாரம்பரிய அமைப்பைக் கொடுத்தன. அந்தக் கடை வைத்திருந்த பெண்மணியிடம் விசாரித்தோம்.
”உடலுக்கு நல்ல குளிர்ச்சிங்க... இஞ்சி, காந்தாரி மிளகாய், சப்ஜா விதை போட்டுக் கொடுப்போம். சுவைல எங்க குலுக்கி சர்பத்தை அடிச்சிக்கவே முடியாது” என மலையாளம் இழையோடும் தமிழில் அறிமுகத்தைக் கொடுத்தார்.
ஒரு கண்ணாடி டம்ளருக்குள் பாதி எலுமிச்சையைச் சாறுப் பிழிந்து, அந்த எலுமிச்சையையும் போட்டு, இஞ்சி விழுது இரண்டு ஸ்பூன் சேர்த்து, அந்தப் பகுதியில் பிரபலமான நறுக்கி வைத்த காந்தாரி மிளகாயைச் சேர்த்தார். மூன்று கரண்டி சர்க்கரை கரைத்த நீர் கலந்து, சப்ஜா விதைகளைத் தூவினார். அதில் ஸ்ட்ராபெர்ரி, பிஸ்தா சுவையைக் கொடுக்கும் செயற்கைச் சாரங்களைச் சேர்க்கலாமா என அவர் கேட்க, ‘இல்லை எதுவும் சேர்க்காத குலுக்கி சர்பத்தையே கொடுங்கள்’ என்றோம்.
அருகில் இருந்த சோடா பாட்டில் ஒன்றை எடுத்து, குப்புறக் கவிழ்த்து, கட்டையில் இருந்த ஆணியில் மூடியை நச்’சென்று அடித்தார். சீறிய சோடாவை, கண்ணாடி டம்ளருக்குள் செலுத்தினார். சோடா பாட்டிலைக் கைகளால் மேலும் கீழும் சுழற்றி டம்ப்ளருக்குள் செலுத்திய அந்தப் பெண்மணியின் வித்தையைப் பார்த்ததும் சுற்றி நின்றவர்கள் கைதட்டினர்.
சோடா டம்ளருக்குள் நுழைந்த பிறகு மிளகாய், இஞ்சி, சப்ஜா விதைகள், சர்க்கரை நீர்… என அனைத்தும் மேலும் கீழும் குலுங்கின! டம்ளருக்கு மேல் சிறிய தட்டை வைத்து கைகளால் அணைத்து, தலைகீழாகக் கவிழ்த்து ஒரு குலுக்குக் குலுக்கியதும் உள்ளிருந்த பொருள்கள் அனைத்தும் நன்றாகக் கலந்தன. டம்ளரின் ஓரத்தில் பாதி எலுமிச்சையைச் செருகி, சர்பத்தைக் கையில் கொடுத்தார். தாகத்தோடு குலுக்கி சர்பத்தைப் பருகியபோது, பானத்தின் சுவை பேரானந்தத்தைக் கொடுத்தது. சர்க்கரையின் இனிப்பும், காந்தாரி மிளகாயின் காரமும், எலுமிச்சையின் புளிப்பும் புதுமையான சுவையை உணரச் செய்தது.
குலுக்கி சர்பத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்துக்கும் மருத்துவக் குணங்கள் அதிகம். குறிப்பாக, பயணம் செய்யும்போது வாந்தி உணர்வால் அவதிப்படுபவர்கள் இந்தப் பானத்தை முயற்சி செய்யலாம். கப்பல் பயணம் மேற்கொள்வோருக்கு உண்டாகும் வாந்தி உணர்வைத் தடுக்கப் பயன்பட்ட பொருள் இஞ்சி.
மேலும் இஞ்சி, காந்தாரி மிளகாய்க்குச் செரிமான சுரப்புகளைத் துரிதப்படுத்தும் சக்தி இருக்கிறது. வேனில் காலத்தில் உண்டாகும் நீரிழிப்பைத் தடுக்கவும் குலுக்கி சர்பத் பேருதவி புரியும். பழங்களின் செயற்கை சாரங்கள் (எஸன்ஸ்) சேர்க்கப்பட்ட குலுக்கி சர்பத்துக்குப் பதில், சாதாரண குலுக்கி சர்பத் உடலுக்கு நல்லது. சர்க்கரைக்கு மாற்றாகப் பனைவெல்ல நீரும் சிறந்ததாக இருக்கும். ஒரு டம்ப்ளர் குலுக்கி சர்பத்தின் விலை 30 ரூபாய். யாரும் ஒரு டம்ளரோடு நிறுத்திக்கொள்வதில்லை!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT