Published : 31 Mar 2025 05:01 PM
Last Updated : 31 Mar 2025 05:01 PM
உடுமலை: பறவைகளின் இறகுகளை தூரிகைகளாக பயன்படுத்தி ஓவியம் வரைவது எளிது, ஆனால் இறகுகளைக் கொண்டே ஓவியம் வரைவது என்பது அழகான, கடினமான கலையாகும். உடுமலை ராமசாமி நகரில் வசிக்கும் சசிக்குமார் (28) என்பவர் இறகுகளை பயன்படுத்தி அற்புதமான ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: வெவ்வேறு நிறங்களில், வடிவங்களில் மற்றும் அளவுகளில் பறவைகளின் இறகுகள் சுற்றுப்புறங்களில் கிடக்கும். உதாரணமாக மயிலின் இறகுகள் பிரகாசமான வண்ணங்களையும், கழுகின் இறகுகள் வலிமையான அமைப்பையும் கொண்டிருக்கும். பறவைகளின் இறகுகளைக் கொண்டு வரையப்படும் ஓவியங்களுக்கு வண்ணத்தாள் அல்லது கேன்வாஸ், பசை, கத்தரிக்கோல், கத்தி உள்ளிட்டவை மூலப்பொருட்களாக பயன்படுகின்றன.
பறவைகளின் இறகுகளை சேகரிக்கவும், அவற்றை ஓவியமாக வரையவும் மிகுந்த பொறுமையும், கவனமும் தேவைப்படுகிறது. சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். எஸ்எஸ்எல்சி வரை படித்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை கைவிட வேண்டிய சூழல் நேர்ந்தது. தற்போது எலெக்ட்ரீசியனாக உள்ளேன்.
கடந்த 2 மாதங்களாக மயில் மற்றும் சேவல் ஆகியவற்றின் இறகுகளை சேகரித்து, பழநி முருகக் கடவுளை ஓவியமாக உருவாக்கி உள்ளேன். இதில், மஞ்சள், நீலம், சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஓவியத்தை உருவாக்க தினமும் 2 மணி நேரம் செலவிட்டேன். 70 மணி நேரத்தில் இந்த ஓவியத்தை உருவாக்கிவிட்டேன்.
விவசாய நிலங்களில் இரைக்காக வந்து செல்லும் மயில்கள் உதிர்த்துச் செல்லும் இறகுகள், குளக்கரைகளுக்கு வந்து செல்லும் பல்வேறு வகையான பறவைகள், கிளிகள், வீட்டில் அழகுக்கு வளர்க்கப்படும் பறவைகள் மூலம் இறகுகளை சேகரித்து, பல்வேறு ஓவியங்களை உருவாக்கியுள்ளேன்.
முருகக் கடவுளின் ஓவியம் என்பதால், முருகனுடன் இணைந்திருக்கும் மயில் மற்றும் சேவலின் இறகுகளை மட்டுமே பயன்படுத்தி முருகனின் ஓவியத்தை உருவாக்கினேன். என்னைப் போன்ற கலைஞர்களுக்கு அரசும், தன்னார்வ அமைப்புகளும் ஊக்கமும், உதவியும் அளித்தால் இக்கலை மேலும் வளர்ச்சி பெறும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT