Published : 26 Feb 2025 04:00 PM
Last Updated : 26 Feb 2025 04:00 PM

உணவு சுற்றுலா: பூமிசர்க்கரைக் கிழங்கு

சாலையோரத்தில் செட்டிநாடு மரத்தூண் போல மிகப்பெரிய உணவுப் பொருள் ஒன்றை வைத்துக்கொண்டு, அதைப் பதமாகச் சீவிக்கொண்டிருக்கும் வியாபாரிகளைப் பார்த்திருக்கலாம். அந்த உணவுப் பொருளின் பெயர் பூமிசர்க்கரைக் கிழங்கு.

இரண்டு சக்கர வாகனத்திலோ தள்ளுவண்டியிலோ விற்பனை செய்வார்கள். அதன் பலன்களையும் குறிப்பிட்டிருப்பார்கள்.யானையின் கால் போன்ற தடித்த உருளை வடிவம் அதுக்கு! மரப்பட்டை நிறத்திலான தோல், பூமிசர்க்கரைக் கிழங்குக்குக் கவசமாக அமைந்திருக்கும். தடிமனான வேர்க்கிழங்கின் சுவை இளநீருக்குள் இருக்கும் வழுக்கையின் சுவையை ஒத்திருக்கும்.

பூமிசர்க்கரைக் கிழங்கின் தாவரவியல் பெயர் Maerua oblongifolia. Capparidaceae என்கிற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மழைக் காடுகளில் அதிகம் விளைகிற பூமிசர்க்கரைக் கிழங்கை மலைவாழ் மக்கள் சேகரித்து மொத்தமாக விற்பனை செய்கிறார்கள்.

தின்பண்டமாகப் பரிமாறும் கலை: உளி கொண்டு சிற்பம் செதுக்குவதைப் போல, சிரத்தைக் கொண்டு கிழங்கின் மேல் பகுதியைச் செதுக்கி விற்பனை செய்வார்கள். செதுக்கப்பட்ட கிழங்கைத் தொட்டுப் பார்த்தால் தடிமனான காகிதம் போலிருக்கும். சிலர் கிழங்கை வாழை இலையில் வைத்துக் கொடுக்கிறார்கள். செதுக்கப்பட்ட கிழங்கின் மீது பாதி எலுமிச்சையை முதலில் தேய்க்கிறார்கள். பின் இனிப்புப் பிரியர்களுக்கு நாட்டுச் சர்க்கரையைத் தூவியும், கார விரும்பிகளுக்குப் பொடித்த மிளகுத் தூளைத் தூவியும் கொடுக்கிறார்கள். அப்படியே சாப்பிட வேண்டியதுதான்!

ருசிக்கும்போது பூமிசர்க்கரைக் கிழங்கின் துவர்ப்பு, எலுமிச்சையின் புளிப்பு, நாட்டுச் சர்க்கரையின் இனிப்பு, மிளகின் கார்ப்பு என அனைத்தும் ஒன்றிணைந்து புதுமையான சுவையை வழங்குகிறது. பனை வெல்லம் சேர்த்துச் சுவைத்தாலும் சரி, மிளகின் சேர்மானத்தோடு ருசித்தாலும் சரி, சுவை பிரமாதம்! எதையும் சேர்க்காமல் கிழங்கைச் சாப்பிடவும் முடியும்.

மலைவாழ் மக்களின் முக்கிய மருத்துவ ஆயுதமாக பூமிசர்க்கரைக் கிழங்கு நெடுங்காலமாக இருந்து வருகிறது. உடலுக்குத் தெம்பூட்டும் மருந்தாகவும் பசியைப் போக்கும் உணவாகவும் பயன்படுத்துகின்றனர். சுரம், மூலம், வயிற்றுப் புண் மற்றும் தோல் நோய்களுக்கான மருந்தாகக் கிழங்கை உபயோகிக்கின்றனர். கிழங்கை அரைத்து தோல் நோய்களுக்கான வெளிப்பூச்சாகவும் பயன்படுத்துகின்றனர். உடலுக்குக் குளிர்ச்சியை வழங்கும் இந்தக் கிழங்கிற்கு வலி நிவாரணி செய்கையும் உண்டு. துவர்ப்புச் சுவை இருப்பதால் புண்களை விரைந்து குணமாக்கும் தன்மையும் இருக்கிறது.

மாவுச்சத்து நிறைந்த பொருள் என்பதால் உடனடி ஆற்றலை இயற்கையாக வழங்கும். ஒரு கிழங்குத் துண்டின் விலை 40 ரூபாய். ஒரு கிலோ கிழங்கின் விலை 800 ரூபாய் என்று குறிப்பிட்டார் வியாபாரி. பூமிசர்க்கரைக் கிழங்கு… பூமிக்குள் மறைந்திருக்கும் உணவுப் புதையல்!

கட்டுரையாளர், சித்த மருத்துவர். | தொடர்புக்கு: drvikramkumarsiddha@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x