Published : 20 Feb 2025 06:13 PM
Last Updated : 20 Feb 2025 06:13 PM
மதுரை: மதுரையில் சிந்தாமணி, தங்கத்தை தொடர்ந்து அம்பிகா தியேட்டரும் வர்த்தக மைய கட்டிடமாகிறது. இதனால் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று தியேட்டர்கள். ஒரு காலத்தில் மதுரைக்காரர்களுக்கு பொழுது போக்கே சினிமா பார்ப்பதாகவே இருந்திருக்கிறது. இதுவே மதுரையில் அதிகமான தியேட்டர்கள் உருவாக காரணமாக இருந்துள்ளது. கால ஓட்டத்தில் மதுரை சிந்தாமணி, தங்கம் தியேட்டர்கள் வர்த்தக ஜவுளி கடைகளாகவும், தேவி தியேட்டர் குடியிருப்பாகவும், சென்டர் தியேட்டர் பார்க்கிங் பகுதியாகவும் தற்போது மாறிபோகின.
மீனாட்சி, கல்பனா, அலங்கார், நியூசினிமா போன்ற பெரிய தியேட்டர்களும் மறைந்து போனது. அந்த வரிசையில் மதுரை அண்ணா நகரில் செயல்படும் அம்பிகா தியேட்டரும் விரைவில் இடிக்கப்படுகிறது. சுமார் சுமார் 40 ஆண்டுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரால் அம்பிகா என்ற பெயரில் கல்லூரி, தியேட்டர் தொடங்கப்பட்டது. சில ஆண்டுக்கு முன்பு தியேட்டர் நிர்வாகம் வேறொரு நபரின் கைக்கு மாறிய நிலையில் தொடர்ந்து செயல்பட்டது.
இந்நிலையில், பழமையான தியேட்டர்கள் வர்த்தக நிறுவனங்களாக மாறும் நிலையில், ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த பிரபல அம்பிகா தியேட்டரும் இடிக்கப்பட்டு வர்த்தக மையமாக மாறுகிறது என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் முதன்முறையாக இத்தியேட்டரில் தான் பல்வேறு தொழில் நுட்பம் அடங்கிய டிடிஎஸ் சவுண்ட் எபைக்ட்டில் ரட்சகன் என்ற திரைப்படம் மற்றும் 2 கே, 3கே, 4 கே முறையில் திரையிடப்பட்டது. தொடர்ந்து ரஜினியின் பாட்ஷா,வாலி, கில்லி, கஜினி, ஆளவந்தான், தூள், ரன், அலைபாயுதே போன்ற படங்கள் நூறு நாளுக்கு மேலாக ஓடி இருக்கின்றன.
மதுரையிலுள்ள பிரபல தியேட்டர்களில் இதுவும் ஒன்றாக இருந்தபோதிலும் இதுவும் இடிக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இங்குள்ள கேண்டீனில் பிற தியேட்டர்களைவிட குறைந்த விலையில் கோன் ஐஸ் கிரீம் போன்ற ஸ்நாக்ஸ்கள் விற்கப்படும் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அம்பிகா தியேட்டர் உரிமையாளர் ஆனந்த் கூறும்போது, “அம்பிகா திரையரங்க வளாகம் முழுவதும் இடித்து பெரிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளோம். இத்தியேட்டர் வளாகத்தில் சுமார் ஒரு லட்சம் சதுர அடிபரபளவில் பெங்களூர் பொறியாளர்களை கொண்டு ஷாப்பிங் காம்பளக்ஸ் கட்டப்படுகிறது. இதற்காக விரைவில் இந்த தியேட்டர் மூடப்படுகிறது. இதையொட்டி இன்று (பிப்., 21) ரசிகர்கள் கொண்டாடும் விதமாக திரையரங்கம் முன்பு செல்போனில் செல்பி எடுத்து கடைசியாக மலரும் நினைவுகளை பகிரும் வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மதுரையைச் சேர்ந்த சினிமா விமர்ச்சகர் கு. கணேசன் கூறுகையில், “மதுரையின் முக்கிய அடையாளங்கள் ஒன்று தியேட்டர்கள். சுமார் 1000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் உருவாக்கிய தியேட்டர்கள் தற்போது இடிக்கப்பட்டு வர்த்தக நிறுவனமாக மாறின. சில தியேட்டர்கள் செயல்படாமல் முடக்கிவிட்டன. மேலும், ஓடிடியில் , யூடியூப் வருகையாலும் தியேட்டர்களுக்கு சென்றால் செலவு அதிகம் என்பதாலும் மக்களிடம் ஆர்வம் குறைந்தது. இது போன்ற சூழலில் தியேட்டர்களை மூடுவதும், வர்த்தக மையமாக மாறுவதும் ஏற்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT