Last Updated : 19 Feb, 2025 07:13 PM

 

Published : 19 Feb 2025 07:13 PM
Last Updated : 19 Feb 2025 07:13 PM

‘சுயமைதுனம்’ இழுக்கென கருதுதல் தகுமோ? - ஓர் உளவியல் தெளிவுப் பார்வை

‘சுயமைதுனம்’ இயல்பானதே என்று பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளும் தெளிவுபடுத்தியிருந்தாலும் கூட அதனைப் பற்றிய பேச்சுக்களில் தயக்கம் நீடிப்பதுடன், அதை ஓர் இழுக்கானதாகவே இன்றளவும் பார்க்கும் போக்கு தொடர்கிறது. சுயமைதுனம் தொடர்பான பேச்சுக்கள் ஏன் பலரையும் அவ்வாறாக அசவுகரியமாக, இழுக்கானதாக உணரவைக்கின்றன, இல்லை பேசப்படக் கூடாத பேச்சாக உணர வைக்கின்றன என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அன்றைக்கும், இன்றைக்கும் பாவச் செயலாக பார்க்கப்படும் ‘சுயமைதுனம் / சுய இன்பம்’ குறித்து இந்தக் குறுங்கட்டுரையில் வெளிப்படையாகப் பேச முயற்சிப்போம், ஒரு தெளிவு பிறப்பதற்காக..

சுய இன்பம், சுயமைதுனம், கைப்பழக்கம் எனப் பல பெயர்களைக் கொண்ட இந்தப் பழக்கத்துக்கு, ஆங்கிலத்தில் மாஸ்டர்பேஷன் (Masturbation) என்று பெயர். வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால் சுயமைதுனம் தொடர்பாக பல்வேறு கலாச்சாரங்களிலும் பல்வேறு கருத்துகளும், கட்டுக்கதைகளும் புதைந்து கிடக்கின்றன. எகிப்து நாட்டின் கலாச்சாரத்தின்படி சுயமைதுனத்தை புனிதமாகக் கருதுகின்றனர். பண்டைய கிரேக்க கலாச்சாரம் அதனை இயல்பானதாகக் கருதினாலும் அதைச் சுற்றி ஏதும் புனிதத்தை கட்டமைக்கவில்லை. ரோமானியர்களோ ஆண் - பெண் பாலியல் உறவே இயல்பானது. சுயமைதுனம் நீச்சமானது என்று கூறுகின்றனர்.

ஐரோப்பாவில் மத்தியக் காலத்தில் சுயமைதுனம் பெரும் பாவச் செயலாக, தீங்கு விளைவிக்ககூடியதாக முத்திரை குத்தப்பட்டது. ஆனால் 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆல்ஃப்ரெட் கிஸ்னி, ஷெர் ஹிடே போன்ற பாலியல் நிபுணர்கள் சுயமைதுனம் மீதான பாவ, புண்ணியக் கதைகளை புறந்தள்ளி சமூகத்தில் அந்தப் பழக்கம் மீதிருந்த எதிர்மறையான பார்வையை அகற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இருந்தாலும் கூட ஏஐ யுகமாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்திலும் சுயமைதுனம் தொடர்பான சமூக இழிவுப் பார்வை முற்றிலுமாக விலகிவிடவில்லை. சுயமைதுனம் அசுத்தமானது, அவமானமானது என்ற முத்திரகைகள் இருக்கின்றன. இந்த இழிவான பார்வைக்கு மதம் சார்ந்த சில கோட்பாடுகள் சிலவும் காரணமாக இருக்கின்றன. மறுபுறம் உடல் அறிவியல் தொடர்பான போதிய பாலியல் விழிப்புணர்வுகள் இல்லாததும் காரணமாக இருக்கின்றன.

சந்ததிக்கான பலனில்லை... - பாலுறவின் முக்கிய அர்த்தமாகக் கருதப்படும் சந்ததி விருத்தி ஏதுமில்லை என்பதே சுயமைதுனம் தவறான, இழிவான பழக்கமாகப் பார்க்கப்படுவதற்கு மூலம். இந்த அவநம்பிக்கையே இதனை இயற்கைக்கு அப்பாற்பட்ட பழக்கமாகக் கருதச் செய்கிறது. இவ்வாறாக ஒருவர் சுயமைதுன உணர்வைக் கட்டுப்படுத்தும் போது அது அவருக்கு உளவியல் சிக்கல்களைக் கூட ஏற்படுத்தக் கூடும். சுயமைதுனம் ஒருவருக்கு குற்ற உணர்வையும், அவமான உணர்வையும் ஏற்படுத்தச் செய்யவும் இத்தகைய அவநம்பிக்கையே காரணம்.

உண்மை அதுவல்ல..! - பொதுவான பார்வை சுயமைதுனத்துக்கு எதிரானதாகவே இருக்க பாலியல் தெரபிஸ்ட் மற்றும் உளவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் இப்பழக்கம் குறித்து, “சுயமைதுனம் தொடர்பாக நான் என்னிடம் சிகிச்சைக்கு வருவோரிடம் வெளிப்படையாகப் பேசிப் புரியவைத்தது, அவர்களுடைய மன நிம்மதிக்கு பெருமளவில் உதவியிருக்கிறது. நாம் இதைப் பற்றி அதிகமாக வெளிப்படையாகப் பேசப் பேச, இதன் மீதான அவமானகரமான சிந்தனை அடையாளங்கள் அழிக்கப்படும்.

சுயமைதுனம் என்பது ஒருவர் தனது உடலைப் பற்றி அறிந்து கொள்ள, ஏற்றுக் கொள்ள ஒருவித கல்வி உத்தியும் கூட என்றால், நீங்கள் ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்துவீர்கள். இது வெறும் இன்பம் சார்ந்தது மட்டுமல்ல. இது உடல் அறிவியலை, உடல் அமைப்பை, அதன் தேவைகளைப் புரிந்து கொள்ள உதவும். எனவே, பாலுறவால் பரவும் நோய்கள், கர்ப்பம் தரித்தல் போன்ற அச்சங்கள் இல்லாமல் பாதுகாப்பான முறையில் பாலியல் இன்பத்தைப் பெற சுயமைதுனம் ஒருவகையில் ஒரு சிறந்த வடிகாலகவே இருக்கிறது. நம் உடல் மீது நமக்கான உரிமையை நாம் உணர்ந்து கொள்ள உதவும்.

செக்ஸ் தெரபியில், சுயமைதுனம் எப்போதுமே மிகப் பெரிய தெரபியாக பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் கலவியில் ஏற்படும் உச்சகட்ட உணர்வை அடைய சிரமப்படுவதாக ஆலோசனைகளுக்கு வருவோருக்கு சுயமைதுனத்தை பயிற்சியாக மேற்கொள்ள பரிந்துரைக்கவும் செய்யப்படுகிறது. இதனை ஸ்டார்ட் - ஸ்டாப் டெக்னிக் என்று கூறுகின்றனர். இதனால் எரக்டைல் டிஸ்ஃபங்ஷன் எனப்படும் விரைப்புப் பிரச்சினை, முன் கூட்டியே விந்து வெளியேறுதல் (ப்ரீமெச்சூர் இஜாகுலேஷன்) போன்ற பிரச்சினைகளை சரி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், இத்தகைய பயிற்சி மூலம் தங்களின் செக்ஸுவல் பெர்ஃபார்மன்ஸ் (அதாவது பாலுறவு செயல்திறன்) பற்றி யாரும் எந்த விமர்சனங்களையும் முன்வைக்க மாட்டார்கள் என்பதால் பாலுறவு சார்ந்த மனத் தயக்கங்களை, பதற்றங்களை இது போக்குகிறது.” என்றார்.

ஸ்ட்ரெஸ் பஸ்டர்... - இன்றைய காலக்கட்டத்தில் யாரைக் கேட்டாலும் எனக்கு ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். மன அழுத்தத்தைப் போக்க சுயமைதுனம் உதவும் என சில ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. மேலும், சிலருக்கு இது நல்ல தூக்க ஊக்கியாகவும் இருப்பதாகக் கூறுகின்றனர். சுயமைதுனம் செய்யும்போது ஆக்ஸிடாசின் என்ற காதல் ஹார்மோன் சுரப்பதாகவும், எண்டோர்பின் சுரப்பதாகவும், இதனால் மனம் அமைதி கொள்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு மாதத்தில் 21 அல்லது அதற்கும் மேற்பட்ட முறை விந்து வெளியேறும் வாய்ப்பைப் பெறும் ஆடவருக்கு ப்ராஸ்டேட் கேன்சர் எனப்படும் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் 31 சதவீதம் வரை குறைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

எல்லை தான் என்ன? - சுயமைதுனத்தை புனிதமாகவும், புதிராகவும் கருத வேண்டாம். சரி... ஆனால், அதற்கு வரையறை ஏதும் உள்ளதா என்ற கேள்விகளும் எழலாம். பாலியல் தெரபிஸ்டுகள் இதற்கும் விளக்கம் தருகிறார்கள்.

மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட நிச்சயமாக சுயமைதுனம் சிலருக்கு பேருதவியாக இருக்கிறது. இது ஆரோக்கியமான பழக்கம்தான். ஆனால் அது மட்டுமே தான் ஒருவரின் உணர்வுகளுக்கான ஒற்றை வடிகாலாகும் பட்சத்தில் அது கட்டாயமாகி ஒருவித நடத்தைக் கோளாறாகலாம். இதன் மூலம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது இது அன்றாட வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். இதுபோன்ற நேரங்களில் பூர்த்தி செய்யப்படாத எல்லாத் தேவைகளையும் நோக்கி இந்தச் செய்கை கட்டாயமாகிப் போகலாம்.

இந்த நேரத்தில் தான் உளவியல் சிகிச்சை அவசியமாகிறது. ஏனெனில் உளவியல் சிகிச்சை என்பது பாலியல் ரீதியான நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிப்பதாக மட்டுமே அல்லாது அனைத்தையும் உள்ளடக்கிய சிகிச்சையாக இருக்கும். உணர்ச்சிகளை நிர்வகிப்பதற்கு சுயமைதுனத்தையும் தாண்டி பரந்த அளவிலான உத்திகள் இருக்கின்றன என்பதையும் புரியவைக்கிறது. எனவே சுயமைதுனத்தைப் பொறுத்தவரை நன்மை, தீமை என்ற அணுகுமுறையைக் கடந்து எது எல்லை, எது நிர்பந்த உணர்ச்சி என்பதை அறிந்து அணுகலாம். விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

வெளிப்படையான புரிதலை நோக்கி நாம் நகரும்போது, ​​சுயமைதுனம் என்பது குற்ற உணர்ச்சியாகவோ, வெட்கப்பட வேண்டிய செய்கையாகவோ அல்லாது சுய வெளிப்பாட்டின் இயல்பான வடிவமாக அங்கீகரிக்கப்படலாம். அதுவரை இது சுயத்தை விரும்புதலின் சக்திவாய்ந்த அடையாளமாகவே திகழட்டும்.

உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன் இணையதளம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x