Published : 18 Feb 2025 05:30 PM
Last Updated : 18 Feb 2025 05:30 PM
விருதுநகர்: கடந்த 1800 முதல் 1950-ம் ஆண்டுவரை விருதுநகர் மாவட்டத்தின் சமூக, பொருளாதார, பண்பாடு, தொழில் முன்னேற்றம் குறித்து ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு முதன்முறையாக 540 பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
‘விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகள் - ஒரு வரலாற்றுப் பயணம் (1800-1950)’ என்ற தலைப்பில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரலாற்று நூல் ஒன்று கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வுத்துறையைச் சார்ந்த கல்லூரிகளில் இருந்து அனுபவமிக்க பேராசிரியர்களை கொண்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மாவட்டமாகும். இப்பகுதி வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1800 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் விருதுநகர் மாவட்டம் பல மாற்றங்களைக் கண்டது. இக்காலத்தின் சில முக்கியமான அம்சங்கள் தற்போது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 1800-களில் விருதுநகர் பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் இப்பகுதியில் நிர்வாக மற்றும் வரி விதிப்பு முறைகளை அறிமுகப்படுத்தினர். நீர்ப்பாசன வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிறு தொழில்கள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழில்கள் வளர்ச்சி கண்டன. விருதுநகர் மாவட்டம் பஞ்சு மற்றும் பருத்தி துணிகள் உற்பத்தியில் சிறந்து விளங்கியது.
குறிப்பாக 1800-1950 காலகட்டத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. பல பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. விடுதலைப் போராட்ட இயக்கத்திலும் விருதுநகர் மாவட்டம் முக்கியப் பங்கு வகித்தது. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் விருதுநகர் பகுதியில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன.
தொழில்துறை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டன. 1900-களில் விருதுநகர் பகுதியில் கல்வி நிறுவனங்கள் அதிகரித்தன. இலக்கியம், கலை மற்றும் இசை போன்ற பண்பாட்டுத் துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டது.
இவ்வாறு 1800 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் விருதுநகர் மாவட்டம் பல மாற்றங்களைக் கண்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிராந்தியமாக உருவெடுத்தது. தற்போது விருதுநகர் மாவட்ட வரலாறு குறித்து 23 தலைப்புகளில் பேராசிரியர்கள் ஆய்வுப் பணியை மேற்கொண்டு கட்டுரைகளைக் கொண்டு ஆவணமாக தொகுக்கப்பட்டுள்ளது.
இதில், விருதுநகர் மாவட்ட இயற்கை அம்சங்கள், புராதனச் சின்னங்கள், நாட்டுப்புற தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், கட்டிடக் கலைகள், உள்ளாட்சி நிர்வாகம், பருத்தி மற்றும் பருத்தி வணிக நிறுவனங்களின் வளர்ச்சி, தொழில் நகரமாக மாறிய சிவகாசி, போக்குவரத்து வளர்ச்சி, கல்வி, சமூக சீர்திருத்த மற்றும் சுயமரியாதை இயக்கம், விடுதலைப் போராட்ட வரலாறு மற்றும் ஆங்கிலேயர் கால நினைவுச் சின்னங்கள் ஆகியவை குறித்து முதல் நிலைச் சான்றுகள் மற்றும் களப்பணி ஆய்வுகள் அடிப்படையில் வரலாற்று தகவல்கள் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கூறுகையில், மாவட்டத்தின் சமூக, பொருளாதார, தொழில் வளர்ச்சியை அவ்வப்போது ஆவணப்படுத்துவது முக்கியம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள் அவ்வப்போது இதை செய்துள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகு இதுபோன்று மாவட்டங்களில் ஆவணப்படுத்தப்படவில்லை. 1790-ல் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள் உருவாகின. அதன்பின், 1911-ல் ராமநாதபுரம் மாவட்டம் உருவானது. பின்னர், 1984-ல் விருதுநகர் மாவட்டம் உருவானது.
1790-ல் மாவட்ட நிர்வாகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சுதந்திரம் அடைந்த காலகட்டம் வரையில் சமூக, பொருளாதார, தொழில், பண்பாட்டு முன்னேற்றங்களை ஆவணப்படுத்துவது என்பது நிர்வாகத்தின் கடமை. இதுவரை எங்கும் இல்லாத வகையில் விருதுநகரில் தற்போது ஆவணப்படுத்தியுள்ளோம். 30 பேராசிரியர்கள் 18 மாதங்கள் இதற்காக முயற்சியெடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம்தான் இதை செய்துள்ளது. ஒரு மாவட்டத்தின் கலை, இலக்கிய, பண்பாடு, வரலாற்றை ஆவணப்படுத்தி தொகுப்பது மிக முக்கியமான பணி. கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 15 புத்தகங்கள் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT