Last Updated : 13 Feb, 2025 04:49 PM

1  

Published : 13 Feb 2025 04:49 PM
Last Updated : 13 Feb 2025 04:49 PM

மன்னன் கட்டளையும்... குச்சி முறுக்கும்... - இது புன்னைநல்லூர் ஸ்பெஷல்!

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் உள்ள வீடுகளில் மட்டுமே குடிசைத் தொழிலாக பெண்கள் குச்சி முறுக்கு செய்யும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ளனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ் |

திருப்பதிக்கு லட்டு, பழநிக்கு பஞ்சாமிர்தம் என்பது போல புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றால் குச்சி முறுக்கு வாங்கி வருவதை பக்தர்கள் காலம் காலமாக வழக்கமாகி கொண்டுள்ளார்கள். புன்னைநல்லூரிலேயே உற்பத்தி செய்து அங்கேயே விற்பனை செய்யப்படும் இந்த குச்சி முறுக்கு கோயில் வாசலை தவிர்த்து வேறு எங்கும் விற்பனை செய்யப்படுவதில்லை என்பது தான் இந்த குச்சி முறுக்கின் தனித்துவம்.

குச்சி முறுக்கின் கதை: சோழர்களுக்கு பிறகு கி.பி.1670-ம் ஆண்டுகளில் தஞ்சாவூரை ஆண்டுவந்த மராட்டியர் ஆட்சியில் வெங்கோஜி மகாராஜா சத்ரபதி என்பவர் 1680-ம் ஆண்டில் பாதயாத்திரையாக திருச்சியை அடுத்துள்ள சமயபுரத்துக்கு சென்று அங்குள்ள மாரியம்மனை தரிசனம் செய்தார். அங்கேயே மன்னன் இரவு நேரத்தில் தங்கி உறங்கும்போது மாரியம்மன் மன்னனின் கனவில் தோன்றி `தஞ்சாவூர் அருகே கிழக்கு திசையில் புன்னைகாட்டில் தான் வசித்து வருவதாகவும் தன்னை வந்து வணங்குமாறும்’ கூறி மறைந்தாள்.

அங்கிருந்து புறப்பட்ட மன்னன் தஞ்சைக்கு வந்ததும் முதல் வேளையாக தஞ்சாவூரிலிருந்து 6 கல் தொலைவில் புன்னைமரங்கள் நிறைந்திருந்த காட்டின் மத்திக்கு வந்தடைந்தார். அங்கு புற்றுமண் இருப்பதை கண்டு, வியந்து அந்த புற்றுமண்னை வணங்க ஆரம்பித்தார். அதன்பிறகு அங்கு புன்னைநல்லூர் என பெயரிட்டு மாரியம்மனுக்கு சிறிய குடில் அமைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆட்சிபுரிந்த துளஜாராஜாவின் மகளுக்கு கண்ணில் பூ விழுந்தது. அம்மன்னரும் புன்னைகாட்டில் உள்ள மாரியம்மனை வணங்கியபோது மகளின் கண்ணில் ஏற்பட்ட பூ தானாக மறைந்தது. மாரியம்மனின் மகிமையில் வியந்து போன துளஜாராஜா மாரியம்மனுக்கு கோயில் கட்ட தீர்மானித்து கட்டுமானப் பணிகளை தொடங்கினார். இந்த கட்டுமானப் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு கோயிலை கட்டி வந்தனர்.

அந்த நேரத்தில் தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யவும், சோம்பல் ஆகி விடாமல் இருக்கவும் கோயிலையொட்டி வசித்த ஒரு வயதான மூதாட்டி பச்சரிசி மாவைதிருகையில் அரைத்து அதனை புட்டாக செய்து தொழிலாளர்களுக்கு கொடுத்து வந்தார். சுவையாக இருந்ததால் தொழிலாளர்களும் விரும்பி உண்டு வந்தனர்.

ஒருநாள் எதேச்சையாக மன்னன் துளஜாராஜா தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதன் மர்மம் என்ன என கண்டுபிடிக்க வேண்டும் என கருதி நாள் முழுவதும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திலேயே மறைந்திருந்து கண்காணித்து வந்தார்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மட்டுமே
விற்பனை செய்யப்படும் குச்சி முறுக்கு.

மன்னன் கட்டளை: வழக்கம்போல் பசி நேரத்தில் மூதாட்டி பச்சரிசி புட்டு செய்து வந்ததும் தொழிலாளர்கள் வேலையை விட்டு ஓடோடி சென்று பாட்டியிடம் புட்டு வாங்கி சாப்பிட்டனர். இதை பார்த்த மன்னன் துளஜாராஜாவும் பாட்டியிடம் சென்று, தனக்கும் புட்டு தருமாறு கேட்டார். உடனே மன்னன் என்று அறிந்திராத பாட்டி புட்டை அவருக்கு கொடுத்தார். அதை சாப்பிட்ட மன்னன் இதில் என்ன அப்படியொரு சுவையென ஆச்சரியப்பட்டார்.

அன்று முதல் மன்னன் புட்டு வழங்கும் நேரத்தில் புன்னைநல்லூருக்கு மாறுவேடத்தில் வந்து பச்சரிசி புட்டை வாங்கி உண்டு வந்தார். இப்படி சில காலம் பச்சரிசி புட்டை மன்னன்தான் வாங்கி சாப்பிடுகிறார் என்பதை தாமதமாக புரிந்து கொண்ட மூதாட்டி, மன்னன் மீதிருந்த மதிப்பினாலும், அச்சத்தாலும் இனி பச்சரிசி புட்டு செய்யாமல் தொழிலாளர்கள் விரும்பும் தின்பண்டம் ஒன்றை செய்ய முடிவு செய்தார்.

இருப்பினும் பாட்டிக்கு தெரிந்தது எல்லாம் பச்சரிசியை கொண்டு பலகாரம் செய்யும் வித்தை மட்டும்தான். உடனடியாக பச்சரிசி மாவில் கொஞ்சம் உப்பை போட்டு அதில் மாவு பிசைந்து மோதிரம் சைசில் கைகளால் பிழிந்து முறுக்கு சுட்டு தொழிலாளர்களுக்கு கொடுத்தார்.

மன்னன் வழக்கம் போல் புட்டு வாங்க வந்து அன்று முறுக்குதான் கிடைப்பதை அறிந்து அதை வாங்கி சாப்பிட்டபோது, புட்டைவிட முறுக்கில் அதிக சுவை இருப்பதாக கூறி அந்த மூதாட்டியிடம் `நான் இந்நாட்டு மன்னன் உனக்கு இன்று முதல் கட்டளையிடுகிறேன் இனிமேல் நீ முறுக்கு தான் சுட வேண்டும்’ என உத்தரவிட்டார்.

அன்று முதல் சுடப்பட்ட மோதிர முறுக்கை கோயில் வாசலை தவிர வேறு எங்கும் விற்பனை செய்ய கூடாது என்ற கட்டளையும் சேர்த்தே பிறப்பித்து விட்டார். பின்னர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது மன்னன் விரும்பி உண்ட முறுக்கை மக்களும் வாங்கி உண்டனர்.

இந்த மோதிர வடிவிலான முறுக்கை விற்பனை செய்ய புன்னைமரக்காட்டில் அதிகம் இருந்த வாதமடக்கி என்றொரு மரத்தின் குச்சிகளில் இந்த முறுக்கை கோர்த்து அதை அழகாக வைத்து விற்பனை செய்ததால் இந்த முறுக்கு குச்சி முறுக்கு என பெயர் பெற்றது. மன்னன் இட்ட கட்டளை இன்று வரை மீறப்படாமல் கோயில் வாசலை தவிர வேறு எங்கும், எந்த ஊரிலும் இந்த குச்சி முறுக்கு விற்பனை செய்வது கிடையாது.

குச்சி முறுக்கை தயாரிப்பது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கிராம பெண்களுக்கு கை வந்த கலையாக உள்ளது. வழித்தோன்றலாக வந்த மூதாட்டி தன்னுடைய காலத்துக்கு பிறகும் மன்னன் இட்டகட்டளையை நிறைவேற்ற இந்த முறுக்கு செய்து விற்பனை செய்யும் தந்திரத்தை அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களுக்கும் சொல்லி கொடுத்துவிட்டு சென்றார்.

இன்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தாலும், கோயிலை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் 100 குடும்பத்தினர் காலங்காலமாக குச்சி முறுக்கு சுட்டு விற்பனை செய்து வருகின்றனர். முன்பெல்லாம் குச்சியில் கோர்த்து வாங்கிச் சென்ற முறுக்கு, காலத்தின் போக்கால் தற்போது பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

காலங்கள் மாறிவந்தாலும் புன்னைநல்லூரில் மட்டும் கட்டுகோப்பாக மன்னன் இட்ட கட்டளையை மீறாமல் கோயிலை சுற்றி மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த குச்சி முறுக்கு காலத்தின் அழியாத பொக்கிஷமாக இன்றளவும் விரும்பி உண்ணும் உன்னதமான பண்டமாகும் என்பது அங்கு சென்று வருபவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x