Published : 27 Jan 2025 08:18 PM
Last Updated : 27 Jan 2025 08:18 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மறைந்த தங்களது தாயின் நினைவாக முழு உருவச் சிலையுடன் மணி மண்டபத்தை மகன்கள் கட்டியுள்ளனர். இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் வ.உ.சி நகர் கணிக்கர் தெருவைச் சேர்ந்த முத்து மனைவி ராஜாத்தி (55). இவர் கடந்தாண்டு ஜன.26 அன்று உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது மகன்கள் ரவி ராவுஜி, ஹரி ராவுஜி, சுதன் ராவுஜி ஆகிய 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். ராஜாத்தி தனது பிள்ளைகளுடன் சிறிய வீட்டில் வாழ்ந்தார். ராஜாத்தியின் 3 மகன்களும் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்கின்றனர். தாயின் நினைவாகவும், தாய் இந்த இவ்வுலகில் எவ்வளவு முக்கியமானவர் என்பதை மற்றவர்களும் உணரும் வகையில் கணிக்கர் தெருவில் புதிய வீடு கட்டி, வீட்டின் முன் ராஜாத்தியின் முழு உருவத்தில் ஃபைபர் சிலையுடன் கூடிய மணிமண்டத்தை மகன்கள் மூவரும் சேர்ந்து கட்டியுள்ளனர்.
இதன் திறப்பு விழாவை அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில், மகன்கள் மற்றும் குடும்பத்தினர், அவரது சமூகத்தினர் சேர்ந்து நடத்தினர். இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் சில அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து ராஜாத்தியின் மூத்த மகன் ரவி ராவுஜி கூறும்போது, “எங்களையெல்லாம் நன்றாக பார்த்துக் கொண்டிருந்த எங்களது அம்மா திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த கலியுக காலத்தில் பெற்றோர்களை பலர் முதியோர் இல்லங்களிலும், ஆசிரமங்களிலும் சேர்ப்பதும், அவர்களை கொடுமைப்படுத்துவதும் நடக்கிறது. ஷாஜஹான் தனது காதலின் நினைவாக தாஜ்மஹாலை கட்டினார்.
எங்களது அம்மாவின் நினைவாக நாங்கள் இந்த மினி தாஜ்மஹாலை கட்டியுள்ளோம். அடுத்தாண்டு முதல் அம்மாவின் நினைவு நாளில் ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்ய உள்ளோம். அம்மாவின் நினைவாக புதிதாக கட்டிய வீட்டின் முன்பே அவரது முழு உருவ 6 அடி உயர ஃபைபர் சிலையும், மணி மண்டபமும் கட்டியுள்ளோம். ஒவ்வொரும் பெற்றோரை மதிக்க வேண்டும். அவர்களை கடைசிவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT