Published : 25 Jan 2025 06:09 PM
Last Updated : 25 Jan 2025 06:09 PM

8 ஆண்டுகளில் 40,000 மரங்கள்: தரிசு நிலத்தை பசுமைக் காடாக மாற்றியவரின் உத்வேகக் கதை!

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் தரிசு நிலமாக இருந்த இடத்தில், 8 ஆண்டுகளில் 40,000 மரங்களை வளர்த்து சாதனை படைத்த ஓர் இயற்கை ஆர்வலரின் உத்வேக கதையைப் பற்றி பார்ப்போம். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம், இந்தூரில் அமைந்துள்ளது கேஷர் பர்வத் (மலைப்பகுதி). இது இயற்கையை விரும்புவோருக்கு ஒரு கனவு இடமாக மாறியுள்ளது. இப்பகுதியில், காஷ்மீரில் அதிகமாக காணப்படும் குங்குமப்பூ, வில்லோ மரங்கள், தாய்லாந்தின் டிராகன் பழங்கள், ஆஸ்திரேலியாவின் அவகோடா பழங்கள், இத்தாலியின் ஆலிவ் மற்றும் மெக்சிகோவின் பேரீச்சம்பழங்கள் என அனைத்தும் கிடைக்கும்.

ஒரு காலத்தில் புல் கூட வளராத அதே மலையில், இவை அனைத்தும் தற்போது செழித்து வளர்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? இந்தப் பெருமை தற்போது, உலக ஆராய்ச்சியாளர் சங்கங்களின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் சங்கர் லால் கார்கைச் சேரும் (Founder and Director of World Researchers Associations (Dr Shankar Lal Garg)).

ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரான டாக்டர் சங்கர் லால் கார்க் மற்றும் அவரது குடும்பத்தினர் 2015-ஆம் ஆண்டில், பள்ளி - கல்லூரி தொடங்க இந்தூரின் மோவ் நகரில் நிலத்தை வாங்கியிருந்தனர். ஆனால், அப்பகுதி வெறும் தரிசாக பாறைகள் நிரம்பியதாக இருந்தது. இதனால், அந்த முடிவு கைகூடி வராத காரணத்தினால், அந்த நிலத்தை விவசாய நிலமாக மாற்ற முடிவு செய்தார். சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், தனது பயணத்தை கடும் போராட்டங்களுக்கு மத்தியில் தொடங்கினார்.

கார்க், முதலில் அரச மரங்களையும், எலுமிச்சை மரங்களையும் நடத் தொடங்கினார். படிப்படியாக, மரங்களின் எண்ணிக்கையும், வகைகளும் அதிகரித்தன. எட்டு ஆண்டுகளில் (ஜூலை 2016 முதல் ஆகஸ்ட் 2024 வரை) அவர் 40,000 மரங்களை நட்டார். பிறகு படிப்படியாக, பாறை நிறந்த பகுதியில் காஷ்மீரின் குங்குமப்பூ, கல்பவிருட்சம், குங்குமப்பூ, ருத்ராட்சம், ஆப்பிள், டிராகன் பழம், ஆலிவ், லிச்சி, ஆப்ரிக்க துலிப்ஸ் தேக்குமரம், சந்தன மரம், ஈட்டி மரம், சில்வர் ஓக், மூங்கில், வில்லோ மற்றும் ஏலக்காய் மரங்கள் என 500-க்கும் மேற்பட்ட இனங்களை நட்டார்.

இதில், 15,000 மரங்கள் 12 அடிக்கு மேல் உயரம் கொண்டவை எனக் கூறப்படுகிறது. அங்கு அதிகப்படியான குங்குமப்பூ வளர்வதாக தெரிவித்த அவர், தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பநிலையின் சமநிலை ஆகிய பல்வேறு சிக்கல்களை சந்தித்தாக கூறியுள்ளார். இந்த அடர்ந்த காடு, 30 வகையான பறவைகள், 25 வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் குள்ளநரி, முயல்கள், தேள், காட்டுப்பன்றிகள், கழுதைப்புலிகள் போன்ற காட்டு விலங்குகளுக்கு தாயகமாக உள்ளது.

இந்தப் பகுதியை பார்வையிட வருபவர்களிடம், அவர் எந்த கட்டணமும் வசூலிப்பது இல்லை. இங்கு கருத்தரங்கம் மற்றும் தியானக் கூடம் ஒன்றையும் அவர் நிறுவி உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு என பிரத்யேக தோட்டம் மற்றும் மைதானத்தையும் உருவாக்கி உள்ள அவர், மேலும் 10,000 மரங்களை நட்டு தனது பெரிய இலக்கை அடைய இருப்பதாக தெரிவித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x