Published : 24 Jan 2025 06:48 PM
Last Updated : 24 Jan 2025 06:48 PM
“கும்பமேளாவில் பாசி விற்ற மோனலிசா என்ற இளம் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலானதைப் பார்த்தேன். இந்தியாவின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் வைரல் வீடியோக்களால் ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது சிலிர்ப்படையச் செய்தது. அதேவேளையில், நாளடைவில் அந்தப் பெண்ணை ஒரு போகப்பொருள் போன்று அனைவரும் அணுகிய விதமும், அவரைப் பலரும் சுற்றிவளைத்து நுணங்கி ஆராய்ந்ததும் வேதனையைத் தந்தது. நம் சமூகம் ஒரு பெண்ணை அவருடைய திறமைகள், தனித்துவம் ஆகியனவற்றை கொண்டு மதிப்பீடு செய்வதில்லை. மாறாக, அவரின் புறத்தோற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அவரை குறைமதிப்பிடுகிறது என்பது மனதை நொறுங்கச் செய்கிறது.
பெண்களின் புறத் தோற்றத்தை புறந்தள்ளிவிட்டு அவர்களின் சிந்தனைகள், உணர்வுகள், இலக்குகள் கொண்டு மதிப்பீடு செய்ய இச்சமூகம் பழகிக் கொள்ள வேண்டும் என்பதையே மோனலிசாவை சுற்றிய நிகழ்வுகள் நிலைநிறுத்துகின்றன. நாம் கூட்டாக இணைந்து பெண்களுக்கு மரியாதை, அவர்கள் மீதான நேர்மறை சிந்தனை, அவர்களையும் உள்ளடக்கிய சமூகத்தை நிறுவதல் போன்றவற்றிற்கு குரல் கொடுப்போம். பெண்கள் தங்களைப் பற்றிய சமூக முன்முடிவுகளுக்கோ அல்லது சமூக கட்டமைப்புகளுக்கோ அஞ்சாமல் வாழக்கூடிய நிலையை உலகில் உருவாக்குவோம். நமக்காக, நம் பெண்களுக்காக, நம் சந்ததியினருக்காக நாம் இதனைச் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.”
- இது ஒரு பெண்ணின் பெண்ணியவாதமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இது, பங்கித் தாக்கர் என்ற நடிகர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்து. பெண்ணியம் பேச பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பெண்ணியவாதிகள் கூட முழுமையாகத் தொடாத பல முக்கியமான விஷயங்களை பங்கித் தாக்கர் தனது பதிவில் தொட்டுள்ளதாகவே உணர்கிறேன்.
பேரும், புகழும் கூடவே பாலியல் துன்புறுத்தலும்... - மோனலிசாவை தெரியாதவர்கள் இருந்தால்... யார் இந்த மோனலிசா போஸ்லே என்று அறிமுகமே தேவையில்லாத அளவுக்கு அவர் எல்லா தளங்களிலும் வியாபித்துக் கிடக்கிறார். டிரெண்டிங் நியூஸ் கன்டென்ட்டாக இருக்கிறார். இருந்தாலும் அவர் யார் என்றே யாரேனும் தேடினால் இதோ சில தகவல்கள்...
மோனலிசா போஸ்லே (இந்தப் பெயரும் நெட்டிசன்கள் கொடுத்ததுதான்) மத்தியப் பிரதேச மாநில இந்தூரைச் சேர்ந்த இளம் பெண். சமூக வலைதளங்கள் சொல்வதன்படி பார்த்தால் இவருக்கு வயது 16-ல் இருந்து 18-க்குள் இருக்கலாம். இவரது குடும்பத் தொழில் ருத்ராட்ச மாலைகள், பாசி மாலைகள் விற்பது. உத்தரப் பிரதேச கும்பமேளாவுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அங்கே பாசி மாலைகளை விற்றுக் கொண்டிருந்தவர் யூடியூபர்களின் கண்களில் பட இப்போது அவர் பாலிவுட்டில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்கிறது சமூக வலைதளத்தின் லேட்டஸ்ட் அப்டேட். மோனலிசாவுக்கு அவர் சற்றும் எதிர்பாராத பேரும், புகழும் கிடைத்த்து மகிழ்ச்சியளித்திருக்கலாம். ஆனால், கூடவே அவருக்கு நேர்ந்த அத்துமீறல்கள் எத்தனை வேதனை அளித்திருக்கும்.
‘அசவுகரியத்தை ஏற்படுத்துவதும்..’ - “பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதும், விரும்பத்தகாத செயல்களை செய்வதும், சொல்வதும் கூட ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்தான்” என்று அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம், ஐடி நிறுவனப் பெண்கள் மூன்று பேர் தங்கள் உயரதிகாரிக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பையே கூட மோனலிசாவுக்குப் பொருத்திப் பார்த்தால் ஐடி வேலையோ, பாசி மாலை விற்கும் வேலையோ அவரவருக்கு அவரவர் தொழில் பெரிது. மோனலிசாவுக்கு கூட்டம் நிறைந்த திருவிழாக்கள் தான் தொழில் களம். அத்தகைய இடத்தில் தான் அவர் இத்தனை அசவுகரியத்துக்கு ஆளாகியுள்ளார்.
ஒரு வீடியோவில் மோனலிசாவை வீடியோ எடுக்கவும், செல்ஃபி எடுக்கவும் பலரும் துரத்த அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றி அவர் மீது பெரிய சால்வையைப் போர்த்துகின்றனர். எத்தகைய அவலம் இது. சுவையான இனிப்பை ஈ மொய்ப்பது போல் அழகாக இருக்கிறார் என்பதற்காக மோனலிசாவை துரத்தி அவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திய ஆண்கள், யூடியூபர்கள், செய்தியாளர்கள் என அனைவர் மீதும் நியாயப்படி வழக்கு போட்டிருக்க வேண்டுமல்லவா?
अब मुझे अपना क्या पता, अब अपना जीवन नहीं जी सकती और उस स्वतंत्रता का आनंद नहीं ले सकती जो मुझे इतने वर्षों से मिली हुई है।
— Monalisa (@monibhosle8) January 21, 2025
यह व्यवहार गलत है #MonalisaBhosle #monalisa #MahaKumbh2025 #MahaKumbh #KumbhMela2025 #मोनालिसा_प्रयागराज_संगम #मोनालिसा pic.twitter.com/MRSv7Sc1tZ
ஓடினாள்... ஓடினாள்... - சமூக அவலங்களைக் குறிப்பிட்டு ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி “என் தங்கை கல்யாணி ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்..” என்று பேசியிருப்பார். அதேபோல் தான் பாசி மாலை விற்று கும்பமேளா கூட்டத்தில் கல்லா கட்டிவிடலாம் என குடும்பத்தோடு வந்த மோனலிசாவை ஒரே ஒரு வீடியோ “என் குடும்பத்துக்காகவும், என் பாதுகாப்புக்காகவும் நான் இந்தூருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். முடிந்தால், அடுத்த மகா கும்பமேளாவிற்கு நான் திரும்பி வருவேன்” என்று ஓடவைத்துள்ளது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த மாஸ்க் போட்டார். ஆனால், அவர் கண்கள் காட்டிக் கொடுக்க அதையும் மறைக்க முக்காடு போட்டார். முக்காடு போட்டாலும் கூட அதை விலக்கி முகத்தைப் பார்க்க முயன்ற கூட்டத்தால் அஞ்சி இப்போது சொந்த ஊருக்கே கிளம்பிவிட்டார். அவர் பிரபலம் அடைந்தாரே, அவருடன் செல்ஃபி எடுக்க வந்த யாராவது ஒரு பாசி மாலையை வாங்கி அவர் தொழில் இலக்குக்கு ஊக்குவித்தார்களா என்றால் இல்லை. அதைத்தான் நடிகர் பங்கித் தாக்கரும் தனது பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார். பெண்களை அவர்களின் இலக்குகள், திறமைகள் கொண்டு மதிப்பிடுங்கள் என்று.
சரியான வாதம் ஆகாது... - சிலர் சமூக வலைதளங்களில் ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். “எங்கோ குக்கிராமத்தில் இருந்த மோனலிசாவுக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இத்தனை கேமராக்கள் அவரைக் காட்சிப்படுத்தி இருக்காவிட்டால் அவர் ஆயுளுக்கும் பாசி மாலை தான் விற்றிருப்பார். இனி அவர் பாலிவுட் என்ன டாப் மாடல்களைக் கடந்து வோக் பத்திரிகை முகப்புப் படத்தில் கூட வரலாம். எனவே, மோனலிசாவுக்கு நேர்ந்ததை ஒரு செலிப்ரிட்டிக்கு நேரும் அன்புத் தொல்லையாகவே பார்க்க வேண்டும்” என்று ஒரு நெட்டிசன் நீண்ட போஸ்ட்டை பதிவு செய்துள்ளார். இந்த வாதம் எள்ளளவும் ஏற்பதற்கு உகந்தது அல்ல. ஒருவேளை அந்தப் பெண் அவர் வீட்டுப் பெண்ணாக இருந்தால் அப்போதும் அவர் இதே நிலைப்பாட்டை எடுத்திருப்பாரா என்று கேட்கத் தோன்றுகிறது.
மோனலிசா பாலிவுட்டுக்கு செல்லலாம், மாடல் உலகிலும் கோலோச்சலாம். அங்கே மட்டும் பெண்களை போகப் பொருளாகப் பார்க்காமலா இருக்கிறார்கள். இங்கே ஒரு திடலில் நடந்த அத்துமீறல் அங்கே தொழில் என்ற போர்வையில் ‘ப்ரொஃபஷனல் எதிக்ஸ்’ என்ற போர்வையில் நடைபெறும். மோனலிசாவுக்கு முதலில் நடிப்பில் ஆர்வம் இருக்கிறதா என்றே தெரியாது. அதற்குள் ஓர் இயக்குநர் மோனலிசாவை தேடிப் பிடித்து நடிப்பு சொல்லிக் கொடுத்து கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்க வைப்பேன் என்று கூறியிருக்கிறார். ஒரு தேர்ந்த நடிகை போதும், அந்தப் பாத்திரத்துக்கு. அதற்கு மோனலிசா தான் வேண்டுமா? மோனலிசாவின் திறமையல்ல அவரின் அழகு மட்டும் தான் அந்த இயக்குநர் முதலீடாகப் பார்க்கிறார். பெண்கள் இப்படித்தான் பல தளங்களில் பார்க்கப்படுகிறார்கள்.
திரைத்துறையிலிருந்து திருத்தம் வரட்டும்... - சொல்லப்போனால் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் இன்னும் பல ’‘வுட்’களும் பெண்களை போகப் பொருளாக உருவகப்படுத்துவது சமீப காலமாக இன்னும் அதிகரித்துள்ளது. குத்துப் பாடல்களைத் திணித்து உடை, அங்க அசைவு, ஃப்ரேம் என அனைத்திலும் ஆபாசத்தை அள்ளித் தெளித்துவிட்டு பி, சி சென்டர் ரசிகர்கள் கேட்கிறார்கள் என்று பழி போடுகிறார்கள். உண்மையில் பி,சி சென்டர் ஆடியன்ஸ் இதைத் தான் ரசிக்க வேண்டும் என்று திரைத்துறையினரே ஒரு வரைமுறையை உருவாக்கி அதற்கு தீனி போட்டு வளர்க்கிறார்கள்.
திரைத்துறை சார்ந்த பெண்கள் முன்பு போல் இல்லை. படித்துவிட்டு வருகிறார்கள். பாலியல் சீண்டல்களை தட்டிக் கேட்கிறார்கள், ப்யூட்டி ஸ்டாண்டர்ட்ஸை உடைக்கிறார்கள், லேடி சூப்பர்ஸ்டார் ஆகிறார்கள், சம வேலைக்கு சம கூலி வேண்டும் என்று கூட குரல் கொடுக்கிறார்கள். எல்லாம் வரவேற்கத்தக்கது தான். ஆனால் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வது போல் கதைக்கு ஒவ்வாத கிளாமர், தேவையில்லாத ஆணி போன்ற குத்துப் பாடல்கள் போன்றவற்றிற்கு ஏன் ஒப்புக் கொள்கிறார்கள். எதிர்த்துப் பார்த்தால் மார்க்கெட் ஒன்றும் போய்விடாது.
சினிமா அதுவும் இந்திய சினிமா மிகப் பெரிய மாஸ் மீடியா. அங்கே சொல்வதும், காட்டுவதும் நீங்காமல் நின்றுவிடும். அப்படி நிலைநிறுத்தப்பட்டதுதான் பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பதில் தவறில்லை என்ற போக்கு. இயல்பாக்கப்பட்ட அந்தக் குற்றத்தை திரைத்துறை திருத்திக் கொண்டால் எதிர்காலத்தில் மோனலிசா போன்ற இளம் பெண்கள் சுதந்திரமாக உலா வருவார்கள். நள்ளிரவில் நகைகளுடன் பெண்கள் உலா வருவதெல்லாம் இருக்கட்டும். பட்டப்பகலில் தனக்கு சேதமில்லாமல் மோனலிசாக்கள் உலாவரட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT