Published : 22 Jan 2025 06:52 PM
Last Updated : 22 Jan 2025 06:52 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆஞ்சநேயர் சிற்பத்துடன் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடியில், ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி என்கிற 14-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த 2 கோயில்கள் உள்ளன. இதில், பழைய ரயில் பாதைக்கு அருகே மலை அடிவாரத்தில் உள்ள ராமசாமி கோயிலின் அருகே கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டது.
அங்கு 18 அடி உயரமுள்ள பாறையில், 8 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் மலரையும், ஒரு கையை தலைக்கு மேல் துாக்கி அடிக்கும் பாவனையில் ஆஞ்சநேயர் காட்டப்பட்டுள்ளார். இடுப்பில் குறுவாள் வைத்துள்ளார். அந்த பாறையில் ஆஞ்சநேயருக்கு இடது பக்கம் 7 வரிகளைக் கொண்ட தமிழ் கல்வெட்டு கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் கூறியதாவது: “மிக மெல்லியதாக செதுக்கப்பட்ட இக்கல்வெட்டில், இராய திம்மநேயிடு, திருப்புருகம் தேவப்ப ராயர் தா, நம் சாஸனம், காக்கிறவர், வைகுந்த, பேறு பரமபதம் என பொறிக்கப்பட்டுள்ளது. 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கல்வெட்டில், இராயதிம்மநேயிடு என்னும் பெயர்கொண்ட இந்த அனுமாரின் உருவத்தை தேவப்பராயர் என்பவர் ஏற்படுத்தி இதில் தொடர்ந்து பூசை நடக்க தானமும் தந்துள்ளார். இதைக் காப்பாற்றுகிறவர் இறந்தபின் வைகுந்தத்துக்கு செல்வார் என இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகளில் வழக்கமாக இந்த தானத்தை மீறுபவர்கள். கங்கைக்கரையில் உள்ள பசுவை கொன்ற பாவத்துக்கு உள்ளாவான் என்று தான் முடியும். ஆனால் இக்கல்வெட்டில் மட்டும்தான் இதை காப்பவன் சொர்க்கத்துக்கு செல்வான் என குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார். ஆய்வுப் பணியில், ஓய்வு பெற்ற அரசு அருங்காசியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், பாலாஜி, மல்லப்பாடி சங்கீத், தொல்லியல் மாணவர் திவித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT