Published : 22 Jan 2025 05:59 PM
Last Updated : 22 Jan 2025 05:59 PM
யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் புதுச்சேரியை சேர்க்கும் வகையில் இதுவரை 245 கட்டிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மரபைக் கொண்ட பாரம்பரிய கட்டிடங்களும் இடம் பெற்றுள்ளன. புதுச்சேரியில் இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில், 114 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டுஅதற்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் புதுச்சேரியை சேர்க்கும் வகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் விடுபட்ட மேலும் 131 பாரம்பரிய கட்டிடங்களை இரண்டாம் கட்ட பட்டியலில் சேர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றொரு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பழமையான கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள், தனியார்கள் கட்டிடங்களும் இடம் பெற்றன. இந்த இரண்டு பட்டியல்களிலும் சேர்த்து இதுவரை 245 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இப்பணி தொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பிரெஞ்சு மக்கள் அதிகம் வாழ்ந்த புல்வார்டு பகுதியில் பிரெஞ்சு கட்டிடங்களுக்கு மத்தியில் உள்ள தமிழ் மரபைக் கொண்ட பாரம்பரிய கட்டிடங்களும் தற்போது கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 18 கட்டிடங்கள் முதற்கட்டமாக அடையாளம்காணப்பட்டு, புதுச்சேரி அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பாரம்பரிய கட்டிடங்களின் 3-வது பட்டியலும் விரைவில் வெளியிடப்படும்.
புல்வார்டு பகுதி மட்டுமின்றி இதர பகுதிகளிலும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில், வில்லியனூர் மாதா ஆலயம் உள்பட பல்வேறு வழிபாட்டுதலங்கள், ஏஎப்டி, சுதேசி, பாரதி ஆலைகள் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை பல உள்ளன. இந்தக் கட்டிடங்களை இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து கணக்கெடுக்க உள்ளன" என்றனர்.
தேவை பராமரிப்பு நிதி: பாரம்பரியத்தைக் காக்க விரும்பும் தன்னார்வலர்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்வதில் இங்குள்ள பழமையான பாரம்பரிய கட்டிடங்கள் முதன்மையானவை. இவற்றை அரசு பழமை மாறாமல் கட்டி புதுப்பிக்கிறது. அதே நேரத்தில் இவற்றின் பராமரிப்பும் மிக முக்கியம். இதற்கு நிதி இல்லாததால் அவை பராமரிக்கப்படுவதில்லை. அதற்கு வரும் பட்ஜெட்டில் அரசு சிறப்பு நிதி ஒதுக்கி பராமரித்தால் சுற்றுலா பயணிகளை அதிகம் புதுச்சேரியை நோக்கி ஈர்க்கும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT