Published : 20 Jan 2025 04:15 PM
Last Updated : 20 Jan 2025 04:15 PM
உதகை: கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஜான் சலீவன் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள், நவீன உதகை நகரை நிர்மாணித்தனர். ‘ஸ்டோன் ஹவுஸ்' எனப்படும் முதல் கல் பங்களா ஒன்றை எழுப்பி, பல்வேறு கட்டுமானங்களையும் உருவாக்கினர்.
உதகை நகராட்சி மார்க்கெட் பகுதியிலுள்ள சிறிய குன்றின் மீது முதல் காவல்நிலையம் ஒன்றை கட்ட திட்டமிட்டு, 1850-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன. 1860-ம் ஆண்டு முதல் காவல் நிலையம் செயல்பட தொடங்கியது. இதுவே உதகையின் முதல் காவல் நிலையம். 1900-ம் ஆண்டு தொடக்கத்தில், கேரளாவில் தீவிரமாக இயங்கி வந்த ‘மாப்ளா புரட்சி’ குழுவினரின் தாக்குதலுக்கு இந்த காவல் நிலையம் உள்ளானது. 1921-ல் நடத்தப்பட்ட தாக்குதலில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் என 4 பேர் கொல்லப்பட்டனர்.
அதை த்தொடர்ந்தும் செயல்பட்டு வந்த காவல் நிலையத்தை, 2005-ம் ஆண்டு இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கட்டிடத்தை இடிக்கக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியது.
இதை ஏற்று, அந்த கட்டிடத்தின் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டப்பட்டு, 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது உதகை பி-1 காவல்நிலையம். பாரம்பரியம் கொண்ட அந்த கட்டிடத்தை காவல்துறையின் வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில், காவல் துறையினரின் குழந்தைகளை பராமரிக்கும் மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகளை கவரும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என வண்ண, வண்ண ஓவியங்களால் தயாராகி வரும் இந்த பழமையான காவல் நிலைய கட்டிடம், குழந்தைகள் பராமரிப்பு மையாக விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த கட்டிடம் 175 ஆண்டுகளை கடந்தாலும், உறுதி தன்மையுடன் உள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT