Published : 16 Jan 2025 09:11 PM
Last Updated : 16 Jan 2025 09:11 PM
வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே சேவும்கம்பட்டி கிராமத்தில் வாழைப் பழங்களை சூறைவிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா இன்று (ஜன.16) நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான சோலைமலை அழகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 3-ம் தேதியன்று திருவிழா நடைபெறுகிறது. பொங்கல் விழா முடிந்ததும் நடைபெறும் இந்த திருவிழாவில் சேவுகம்பட்டியை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வேலைநிமித்தமாக வெளியூர்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவரும் வந்து இந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர்.
இன்று காலை சோலைமலை அழகர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வாழைப்பழம் சூறைவிடும் நிகழ்ச்சிக்கு மக்களை அழைக்கும் விதமாக கிராமத்தில் உள்ள தெருக்கள் தோறும் அறிவிப்பு செய்யப்பட்டது.இதையடுத்து மக்கள் கூடைகளில் வாழைப் பழங்களை நிரம்பிக்கொண்டு கோயில் நோக்கி ஊர்வலமாக வரத்துவங்கினர்.
தாங்கள் கொண்டுவந்திருந்த வாழைப்பழ கூடைகளை கோயிலில் வைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கோயில் மாடத்தில் இருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த வாழைப் பழங்களை சூறைவிட்டனர்.கோயில் வளாகத்தில் குழுமியிருந்த பக்தர்கள் வாழைப் பழங்களை பிடித்து, அதை சுவாமியின் பிரசாதமாக எடுத்துச்சென்றனர்.
தங்கள் விவசாயம் செழிக்கவும், தொழில் வளரவும் வேண்டிக் கொண்ட உள்ளூர், வெளியூர் மக்கள் தங்கள் காரியம் கைகூடியதைடுத்து வாழைப் பழங்களை சூறைவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.வாழைப்பழம் சூறைவிடும் நிகழ்ச்சியை பல நூற்றாண்டுகளாக தங்கள் முன்னோர் காட்டிய வழியில் நடத்திவருவதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT