Published : 16 Jan 2025 07:31 PM
Last Updated : 16 Jan 2025 07:31 PM
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் "தமிழர் கலாச்சாரம் சிறப்பானது" என பெருமையாகக் கூறினர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இந்தாண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். இந்த ஆண்டு பிரான்ஸ், அமரிக்கா, மலேசியா. இலங்கை, ஸ்பெயின், ஆஸ்திரேலிய, தைவான், இஸ்ரேல், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்தனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த ஆண்டேயின் மனைவியுடன் ஜல்லிக்கட்டு பார்க்க வந்திருந்தார். அவர் கூறுகையில், ''நான் முதன்முதலாக ஜல்லிக்கட்டு பார்க்க வந்துள்ளேன். காளைகளும், காளையர்களும் மிகச்சிறப்பாக களமாடுகின்றனர். பார்க்கவே பரவசமாகவும், திரில காவும் இருந்தது'' என்றார்.
அமெரக்காவைச் சேர்ந்த ராயன் கூறுகையில், ''ஜல்லிக்கட்டை முதல் முதலில் பார்க்கிறேன். அழகாக இருந்தது. இது வீரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாகவே பார்க்கிறேன். அடுத்தடுத்த ஆண்டும் இப்போட்டியைக் காண வருவேன்'' என்றார்.
பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் கூறுகையில், ''தமிழகத்தில் இதுபோன்ற கலாச்சாரங்களைப் பார்க்கவே வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இது புது அனுபவத்தை தந்துள்ளது. இதுமாதிரி ஜல்லிக்கட்டு விழாக்களைப் பார்க்கும் போது தமிழர் கலாச்சாரம் நன்றாக உள்ளது'' என்றார்.
கன்னூர் ஸ்குவாடு: கேரளா காவல்துறையில் புகழ் பெற்ற சிறப்பு படை கன்னூர் ஸ்குவாடு. காவல் ஆய்வாளர் பேபி ஜார்ஜ் தலைமையில் செயல்பட்ட இந்த ஸ்குவாடு கேரளாவில் குற்ற வழக்குகளை கண்டுபிடிப்பதில் பிரபலமாக இருந்தது. கன்னூர் ஸ்குவாடு என்ற பெயரில் நடிகர் மும்முட்டி நடித்த படம் வெளியானது. இந்த ஸ்குவாடை சேர்ந்த கேரள காவல்துறையினர் 9 பேர் பேபி ஜார்ஜ் (தற்போது ஓய்வு) ஜல்லிக்கட்டை பார்க்க இன்று அலங்காநல்லூர் வந்திருந்தனர். பேபி ஜார்ஜ் கூறுகையில், ''அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் ஆசை. அது தற்போது தான் நிறைவேறியுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரத்துடன் தொடர்புடையது'' என்றார்.
பெங்களூர் பெண் ஒருவர், காளை படத்துடன், 'உன் தீரத்துக்கு என் திமிலே பதில்' என எழுதப்பட்ட பதாதையை எடுத்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT