Published : 16 Jan 2025 07:26 PM
Last Updated : 16 Jan 2025 07:26 PM
கரூர்: கரூர் மாவட்டம் நடையனூரில் மனைவியுடன் தென்கொரிய இளைஞர் பொங்கல் கொண்டாட்டிய இளைஞர் கபடி விளையாடி, நடனமாடி மகிழ்ந்தார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்துள்ள நடையனூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (28). பொறியியல் பட்டதாரி. பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றியபோது தென்கொரிய நாட்டைச் சேர்ந்த மின்ஜூன்கிம் என்ற இளைஞருடன் இணையதளம் மூலம் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு தென்கொரியாவில் வசித்து வந்தனர். இதற்கிடையில் விஜயலட்சுமி கர்ப்பமானார். அதனால் பெற்றோரை பார்க்க சொந்த ஊருக்கு வர விரும்பினார். இதனால் இரு மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி சொந்த ஊர் திரும்பியபோது மனைவியுடனே மின் ஜூன்கிம் நடையனூர் வந்தார். பிரசவம் வரை மனைவியுடனே இருக்க விரும்பி மனைவியுடனே நடையனூரில் கடந்த 2 மாதங்களாக தங்கியுள்ளார். பொங்கல் கொண்டாடிய தம்பதியினர். தமிழ் கலாச்சாரம், பண்பாட்டில் ஆர்வமும் கொண்ட மின்ஜூன்கிம் பொங்கல் பண்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்.
மாட்டு பொங்கலை முன்னிட்டு நேற்று வீட்டில் தம்பதியினர் பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு படையலிட்டு ஊட்டி விட்டனர். அதன்பின் பொங்கல் விழாவை காண ஊருக்குள் சென்ற மின்ஜூன்கிம் மனைவி விஜயலட்சுமியிடம் கற்றுக்கொண்ட அரைகுறை தமிழுடன் அப்பகுதியினருக்கு அழகுத்தமிழ் பொங்கல் தமிழ் வாழ்த்துகள் தெரிவித்து இளைஞர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். மேலும் அப்பகுதியில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று விளையாடினார். மேலும் நடன போட்டியில் பங்கேற்று ஜெயிலர் படத்தில இடம் பெற்ற காவாலா பாடலுக்கு நடனமாடினார்.
இதுகுறித்து விஜயலட்சுமி கூறும்போது, ''வெளிநாட்டில் பிறந்து அந்த கலாச்சாரத்தில் வளர்ந்த போதும் தமிழர்களின் பண்டிகைகள் என் கணவருக்கு மிகவும் பிடித்தவை. நான் பிரசவத்திற்காக ஊருக்கு வந்த நிலையில் பிரசவம் வரை என்னுடன் நடையனூரில் இருப்பதாக அவரும் வந்துவிட்டார். பொங்கல் பண்டிகை குறித்து கேள்விப்பட்ட அவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆவலாக இருந்தார். வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்த அவர் இங்குள்ள சூழ்நிலை அனுசரித்து இருக்கிறார். தொடக்கத்தில் நமது உணவு முறைகளை ஏற்றுக்கொள்ள சிரமப்பட்டவர் தற்போத அதனையும் ஏற்றுக் கொண்டு விட்டார்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT