Last Updated : 15 Jan, 2025 06:58 PM

 

Published : 15 Jan 2025 06:58 PM
Last Updated : 15 Jan 2025 06:58 PM

வெள்ளை சேலையில் கிராம பெண்கள் - சிவகங்கை அருகே 100 ஆண்டு பாரம்பரிய மாட்டுப் பொங்கல் விழா! 

சலுகைபுரத்தில் மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்த கிராம பெண்கள்.

சிவகங்கை: சிவகங்கை அருகே 100 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டுப் பொங்கல் விழாவை பாரம்பரிய முறையில் வெள்ளை சேலை உடுத்தி கிராமப் பெண்கள் கொண்டாடினர்.

சிவகங்கை அருகே சலுகைபுரம் முத்தரையர் சமூக மக்கள் பச்சைநாச்சி அம்மன், பாலடி கருப்பு, சிந்தாண்டி என 61 தெய்வங்களை வழிப்பட்டு வருகின்றனர். அவர்கள் மாட்டுப் பொங்கலுக்காக மார்கழி 1-ம் தேதியில் இருந்து விரதம் இருந்தனர். ஒரு வாரத்துக்கு முன்பு மாட்டுத் தொழுவம் அருகே ஒன்றுகூடி, இறைவன் அனுமதி கிடைத்ததும் விழாவுக்கான பிடிமண் கொடுக்கின்றனர். அதன்படி இந்த ஆண்டு ஜன.8-ம் தேதி விழா தொடங்கியது. ஒரு வாரம் இரவில் வீட்டுக்குச் செல்லாமல் தொழுவம் அருகிலேயே ஆண்கள் தங்கினர். பெண்கள் வீட்டிலேயே விரதம் இருந்தனர்.

அந்நாட்களில் கை வளையல், மெட்டி, கொலுசு உட்பட எந்த அணிகலணையும் பெண்கள் அணியவில்லை. இன்று மாட்டுப் பொங்கலையொட்டி சாமியாடிகள் வீடு, வீடாகச் சென்று அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து பெண்கள் வெள்ளைச் சேலை உடுத்தி, பொங்கல் பானைகளுடன் தெருக்களில் கூடினர். அதற்கு தேவையான பொருட்கள், விறகுகளை ஓலைப் பெட்டிகளில் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் எடுத்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் மந்தைச்சாவடியை சுற்றினர்.

அப்போது சாமியாடி அங்கிருந்தோரிடம் மடி ஏந்தினார். சாமி காணிக்கைகளை மக்கள் செலுத்தினர். பின்னர் அங்கிருந்து பெண்கள் ஊர்வலமாக பொங்கல் பானையுடன் மாட்டு தொழுவத்துக்கு வந்தனர். தொழுவம் முன், மண் அடுப்புகளில் பொங்கல் வைத்தனர். பொங்கல் வைத்ததும் அனைவரது பொங்கலையும் ஒன்று சேர்த்து 61 தெய்வங்களுக்கும் தனித்தனியாக தலைவாழை இலையில் படையல் வைத்து வழிபட்டனர். பின்னர் அவற்றை ஒன்றாக சேர்த்து உண்டனர். தொடர்ந்து மாடுகளுக்கு துண்டு கட்டிவிட்டு, உணவளித்து அவிழ்த்துவிட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் கூறும்போது, ''நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இவ்விழாவில் பெண்கள் விரதம் இருக்கும் நாட்களில் ஆடம்பரமாக இருக்க மாட்டர். குழந்தை வரம் கேட்டு வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வருவர். குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். வெண் பொங்கல்தான் வைப்போம்.

அனைவரது பொங்கலையும் ஒன்று சேர்த்து உண்பதால், பகைவர்களும் ஒன்று சேர்ந்துவிடுவர். மாடுகளை விழாவுக்கு முந்தைய நாளில் காட்டுக்குள் விட்டுவிடுவோம். அவற்றை சாமியாடி அழைப்பார். அவரது அழைப்பை ஏற்று மாடுகள் தானாக தொழுவத்துக்கு வந்து அடைந்துவிடும்'' என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x