Published : 13 Jan 2025 07:09 PM
Last Updated : 13 Jan 2025 07:09 PM

தூத்துக்குடியில் மக்களே நிதி திரட்டி சீரமைத்த நூலகம் திறப்பு!

தூத்துக்குடியில் பொதுமக்கள் நிதி திரட்டி சீரமைத்த நூலகத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொதுமக்கள் நிதி திரட்டி ரூ.7.5 லட்சம் செலவில் சீரமைத்த நூலகத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேற்று திறந்து வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி 34 -வது வார்டுக்கு உட்பட்ட தேவகி நகரில் செயல்பட்டு வந்த ஊர்புற நூலக கட்டிடம் சேதமடைந்து உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து இந்த நூலகத்தை மக்கள் பங்களிப்பில் முழுமையாக சீரமைக்க 34-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரபோஸ் முயற்சி மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து நூலகத்தை சீரமைக்க பல்வேறு தரப்பினரும் நிதியுதவி வழங்கினர். அவ்வாறு திரட்டப்பட்ட ரூ.7.5 லட்சம் நிதியில் நூலக கட்டிடம் முழுமையாக சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. மேலும், கழிப்பறை கட்டிடம், சுற்றுச்சுவர், நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு தேவையான மேஜைகள் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன.

இதையடுத்து சீரமைக்கப்பட்ட நூலகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. 34-வது வார்டு உறுப்பினர் எஸ்.சந்திரபோஸ் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் லே.மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது பேசிய மேயர், ‘‘நூலகத்தை மக்கள் இணைந்து சீரமைத்ததை பாராட்டுகிறேன். தூத்துக்குடி மாநகராட்சியில் 11 நூலகங்கள் இயங்குகின்றன. அவற்றை சரியான இடங்களில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மார்ட் நூலகம் அமைக்கப்படும். மாநகராட்சி பகுதியில் 206 பூங்கா இடங்கள் உள்ளன.

இதில் 42 இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்றி அனைத்து பூங்காக்களையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். விழாவில் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், நூலகத்தை சீரமைக்க நிதியுதவி வழங்கியவர்கள், பொதுமக்கள், நூலக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x