Published : 13 Jan 2025 06:54 PM
Last Updated : 13 Jan 2025 06:54 PM
மதுரை: தமிழத்தில் பெருங்கற்காலம் என்பது கி.மு. 1,000 முதல் கி.பி. 200 வரை இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் ஈமக்குழிகளை பெரிய கற்களை கொண்டு அமைத்ததன் அடிப்படையில் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது.
கற்திட்டை, கற்பதுக்கை, கல்வட்டம், நெடுங்கல் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு ஊராட்சியில் உள்ள மேலவளவு, ராசினாம்பட்டி, கைலம்பட்டி ஆகிய ஊர்களில் 50 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகின்றன. கைலம்பட்டி குதிரோடு பொட்டல் பகுதியில் காணப்படும் கற்பதுக்கை ஒன்றை பட்டசாமி என்றும் ராசினாம்பட்டி சோமகிரி கோட்டைபகுதியில் காணப்படும் நெடுங்கல் ஒன்றை முனியாண்டி என்று மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இக்கோயில் அருகில் கல்வட்டம், கற்பதுக்கையின் பலகை கற்கள் காணப்படுகின்றன. தொல்லியல் அறிஞர் ஜெகதீசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் உள்ள பெருங்கற்காலச் சின்னங்களை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை வரலாற்று ஆர்வலர் தமிழ்தாசன் கூறியதாவது: மேலவளவு கிராமத்தில் சோமகிரிமலை குன்றுக்கும், முறிமலை குன்றுக்கும் இடையில் உள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது பறம்பு கண்மாய். அதன் கலுங்கு பகுதி அருகேயுள்ள பாறையில் 2 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
பிற்கால பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பறம்பு கண்மாய் வெட்டி அதற்கு கலுங்கு அமைத்து கொடுத்த செய்தியை கி.பி. 1,238-ம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது. அதன் பின் கி.பி. 1415-ம் ஆண்டு விஜயநகர மன்னன் மல்லிகார்ச்சுனராயரின் மகன் விருப்பாச்சிராயரின் கல்வெட்டில் திருநாராயண சம்பான் என்பவன் கண்மாய் பராமரிப்புக்காக கொடுத்த காணிக்கை பற்றி குறிப்பிடுகிறது.
இக்கல்வெட்டுகளில் இவ்வூர் வடபறப்பு நாட்டு அழகர் திருவிடையாட்டம் பறம்பான திருநாராயண மங்கலம் என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வூரின் பெயர் திருநாராயணமங்கலம் என்றும் கல்வெட்டு குறிப் பிடுகிறது. சோமகிரி மலையடிவாரத்தில் உள்ள மலையபீர் தர்ஹாவில் காணப்படும் நாவல் மரத்தின் அடியில் கிபி 14-ம் நூற்றாண்டு சுல்தானின் காசு கிடைத்துள்ளது.
சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள், கிபி 13,14,15-ம் நூற்றாண்டு தொல்பொருட்கள் 200 ஆண்டுகள் பழமையான கோட்டைகள் என தொடர்ச்சியான வரலாற்று சான்றுகள் விரவிக் கிடக்கும் மேலவளவு பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT