Last Updated : 09 Jan, 2025 05:08 PM

1  

Published : 09 Jan 2025 05:08 PM
Last Updated : 09 Jan 2025 05:08 PM

காகித கவர்களில் மருந்துகள் வழங்கும் முறை - சேலம் மருத்துவமனையில் வரவேற்பு!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் நோயாளிகள் மாத்திரைகளை எளிதில் கண்டறிந்து உண்ணும் வகையில் அதன் விவரங்கள் அடங்கிய காகித கவரில் வைத்து வழங்கப்படுகிறது. | படம்: எஸ்.குரு பிரசாத் |

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் காகித கவர்களில் மருந்துகள் வழங்கும் முறை புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு நோயாளிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. சேலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் புற நோயாளிகள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், உள்நோயாளிகளாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயர் சிகிச்சை பெற வேண்டி வருகின்றனர்.

அதேபோல, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை உள்பட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மருத்துவமனையின் மருந்தகங்களில் மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது. ஒரு வாரத்துக்கு தேவையான மருந்து மாத்திரைகளை நோயாளிகள் பெற்றுச் செல்கின்றனர்.

இதனால், தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்று மருந்து, மாத்திரைகளை வாங்கிச் செல்கின்றனர். அரசு மருத்துவமனை மருந்தகங்களில் வழங்கும் மருந்து, மாத்திரைகள் எவ்வித காகித கவர்களிலும் வழங்காமல் மாத்திரை அட்டைகளாக வழங்கப்பட்டு வந்தது.

இதனால், கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகள் பலரும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளுக்கான மாத்திரைகள் எவை, எவை என பிரித்து அறிந்து கொள்ள முடியாமல் சிரமம் அடைந்து வந்தனர். சமீபத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

அப்போது, நோயாளிகள் மருந்து அட்டைகள் தனித்தனியாக பெற்றுச் செல்வதில் உள்ள சிரமத்தை எடுத்துக் கூறினர். இதையடுத்து, அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி, மருந்து, மாத்திரைகள் தனித்தனி காகித கவர்களில் சாப்பிடுவதற்கு முன்பு, சாப்பிட்ட பிறகு, காலை, மதியம், இரவு என அச்சிடப்பட்டு, மாத்திரை சாப்பிடும் வேளைகளை குறித்து வழங்கிட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று முதல் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் ஒட்டுமொத்தமாக வழங்காமல், தனித்தனி காகித கவர்களில், மருந்து சாப்பிடும் வேளைகளை குறித்து மருத்துவ ஊழியர்கள் வழங்கி வருகின்றனர். இந்த நடவடிக்கையால் நோயாளிகள் எளிதாக குறிப் பிட்ட நேரத்தில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வசதி ஏற்பட்டுள்ளது. இது நோயாளிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சேலம் அரசு மருத்துவ மனையில் காகித கவர்களில் மருந்து, மாத்திரைகள், அதனை சாப்பிடும் வேளைகளை குறித்துக் கொடுப்பதால், வயதானவர்கள் பலரும் எந்தெந்த மாத்திரை எப்பொழுது சாப்பிட வேண்டும் என அறிந்து, அதற்கேற்ப மாத்திரை உட்கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறையை சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பின்பற்றினால், கிராமப்புற நோயாளிகள் பெரிதும் பயன் அடைவர், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x