Published : 06 Jan 2025 04:44 PM
Last Updated : 06 Jan 2025 04:44 PM

நூற்றாண்டை கடந்த மக்கள் சேவையில் ஏனங்குடி ஆரம்ப சுகாதார நிலையம்!

ஏனங்குடி ஆரம்ப சுகாதார நிலையம்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஏனங்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நூறு ஆண்டுகளைக் கடந்தும், மக்களின் நோய் தீர்க்கும் சேவையை தொடர்ந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும், ஏழை, எளியோர் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.

அந்தவகையில் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் சராசரியாக 100-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வருகின்றனர்.

அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு நோயின் தன்மைக்கேற்ப உள்நோயாளிகள் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த மருத்துவமனை கடந்த 25.1.1912 அன்று தொடங்கப்பட்டது.

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் பழமை வாய்ந்தது. ஆரம்பத்தில் ஒரு மருத்துவர், 5 படுக்கைகள், ஒரு சிகிச்சை அரங்கம் இருந்துள்ளன. பின்னர் குழந்தைகள், மகப்பேறு, அவசர சிகிச்சை, கண் சிகிச்சை, புறநோயாளிகள் கட்டிடம் என வளர்ந்து கொண்டே வந்தது.

தற்போது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இன்று வரை அதிகளவில் நோயாளிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். 100 ஆண்டுகள் பழமையான இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு சுமார் 5 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. குறைந்த வசதிகளுடன் தொடங்கப்பட்டு இன்று கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக திகழ்கிறது. தற்போது திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு தொடர்ந்து மக்களின் நோய் தீர்க்கும் பணியில் நீடித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x