Last Updated : 26 Dec, 2024 05:05 PM

 

Published : 26 Dec 2024 05:05 PM
Last Updated : 26 Dec 2024 05:05 PM

‘வானம், நீலம், வான்கா, ராஜா..’ - எண்ணமெல்லாம் வண்ணம் கொண்ட ஓர் ஓவியர்!

ஓவியர் ஊக்ரா

கரோனா காலத்துக்குப் பின் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையை பழக்கப்படுத்திக் கொண்ட எனக்கு புதிய ஊர் மாற்றமும் ஏற்பட்டது. கோவையில் நான் வசிக்கும் பகுதியில் 4 வீடுகள் இருந்தால் நடுவே ஒரு சிறு அல்லது குறு தொழில் நிறுவனம் இருக்கும். ஒரு பக்கம் செய்திச் சேனல் ஒலியோடு மறுபுறம் டிங், க்ளிங், டங், சர்ர்ரென்ற ஃபேக்டரி ஒலியுடன் மொத்தமாக கேக் தயாரிக்கும் பேக்கரியிலிருந்து எஸ்ன்ஸ் வாசமும் சேர, கூடவே சினிமாப் பாடல்களின் ஒலி சன்னமாகக் கேட்கும். ஷிஃப்டில் இருக்கும் வயதுக்கு ஏற்போர் போல இசையமைப்பாளர்கள் மாறுவார்கள் போல! பாடல்களின் ப்ளே லிஸ்ட் அப்படி யோசிக்க வைக்கும்.

ஆனாலும் பெரும்பாலும் ராஜாவின் பாட்டுகள் இசைக்கப்படும். ஒரு ராஜா ரசிகையாக, காற்றில் வரும் ராஜாவின் கீதங்களைக் கேட்டுக் கொண்டே பணி செய்வது எனக்கு ஒரு சுகமான அனுபவம். அந்த ரசனையால் தான் சமூக வலைதளத்தில் ஒருவருடைய ஓவியப் பகிர்வுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ராஜாவின் பாடல்களுக்கு ஓவியம் மூலம் ஒரு புதிய விஷுவல் எஃபெக்ட் கொடுத்திருந்தார் அந்த பெண் ஓவியர். அவரை அணுகிப் பேசியபோது வானம், கடல், நீல வண்ணம், இளையராஜா, வின்சென்ட் வான்கா என சுவாரஸ்யமாக, துள்ளலாகப் பேசினார்.

எண்ணமெல்லாம் வண்ணமம்மா... - ஓவியங்களில் இருந்த ராஜாவின் பாடல் வரிகளைப் பார்த்து நான் தேடிப் பிடித்த அந்த பெண் ஓவியரின் பெயர் ஊக்ரா என்ற ஆழி தூரிகை. பெயரில் இருந்து தான் பேச்சு ஆரம்பித்தது. அது என்ன ஊக்ரா என்று கேட்க. ‘ஊக்ரா’ என்பது ரஷ்யாவில் ஓடும் ஒரு நதி. அந்த நதியின் பெயரை என் பெற்றோர் எனக்குச் சூட்டினர் என்றார். ஆழி தூரிகை என்பது அவருக்குள் வாழும் ஓவியருக்கு அவரே வைத்துக் கொண்ட பெயர்.

“கையில் பென்சில் கிடைத்ததும் குழந்தைகள் கண்களில் தென்படும் பெரிய காகிதம் வீட்டின் சுவர்கள் தான். எல்லா குழந்தைகளைப் போல நானும் சிறு வயதில் சுவரெல்லாம் கிறுகியிருக்கிறேன். ஆனால் என்னை என் பெற்றோர் திட்டவோ, கண்டிக்கவோ செய்யவில்லை. அந்த சுதந்திரம் பின்நாளில் நேர்த்தியாக வரைகிறேனே என்று நானே உணர ஆரம்பித்த போது அர்த்தம் பெற்றது. ஓவியம் பிடிக்கும் என்றாலும் ஓவியம் வரைதலையே தொழிலாக மேற்கொள்ளும் அளவுக்கான பொருளாதார சூழல் இல்லை என்பதால் நான் படித்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஒட்டியே ஒரு வேலையைத் தேடினேன். இருந்தபோதும் எண்ணமெல்லாம் வண்ணம் பின்னரே ஓடியது.

இதற்கிடையில் நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு பிறந்தநாள் மற்ற விழாக்களில் பரிசாக படங்களை வரைந்து கொடுப்பதாக இருந்தேன். பெரிய அளவில் அங்கீகாரம் ஏதும் கிடைத்ததில்லை. ஆரம்பத்தில் ஓவியம் வரைதலை நான் ஒரு தொழிலாகக் காணவில்லை. எனது எண்ணங்களை வெளிக்கொண்டு வரும் ஊடகமாகவேக் கருதினேன். 2018-ல் கொஞ்சம் தொழில் ரீதியாக ஓவியங்களை அணுகினேன். பின்னர், 2019-ல் என் சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்றேன். அப்போது தான் ஒரு திருப்பம் வந்தது.

கோவிட் தந்த திருப்பம்... - நான் தூத்துக்குடி திரும்பிய நேரம் கோவிட் பெருந்தொற்று காலமும் ஊரடங்கும் அமலுக்கு வந்தது. அந்த ஊரடங்கில் என் தூரிகைகள் புத்துணர்ச்சி பெற்றன. நித்தமும் வண்ண ஓவியங்கள் தான். முதல் ஊரடங்குக்குப் பின்னர் அங்கிருந்தே கமிஷன் அடிப்படையில் சில ஓவியப் பணிகள் வந்தன. அப்படி ஒருவருக்கு ஓர் ஓவியம் வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்து அவர்கள் வீட்டுச் சுவரில் ஒரு படத்தை வரைந்து தரச் சொன்னார்கள். அப்படியே தொட்டு, தொட்டு அதுபோன்று நிறைய பணிகளைச் செய்தேன். அது எனக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது" என்றார்.

நீல நிறத்தின் மீது.. - நீங்கள் வரையும் படங்களில் கடல், வானம், நீலம் அதிக இடம் பிடித்திருப்பது ஏன்? என்ற கேள்விக்கு,நான் கடல்புரத்தில் தான் பிறந்தேன். இப்போது சென்னையிலும் கடலை ஒட்டிய பகுதியில் தான் வசிக்கிறேன். சிறுவயதில் இருந்தே கடலும், வானமும் என மனதுக்கு நெருக்கமானவை. அதன் நீலம் நிறமும், விஸ்தாரமான பரப்பும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தாக்கம் எனது ஓவியங்களிலும் பிரதிபலிக்கிறது.

எனக்கு தனிநபர்களை ஓவியமாக வரைவதில் பெரிய விருப்பமில்லை. எனக்கு நிலத்தின் மீது, கடலின் மீது, வானத்தின் மீது தான் காதல். அதுதான் என் படங்களில் நிறைய பிரதிபலிக்கும். இப்போது எனது லேண்ட்ஸ்கேப் பெயின்டிங்களால் ஈர்க்கப்பட்ட சில வாடிக்கையாளர்கள் போர்ட்ரைட் ஓவியங்கள் கேட்கும்போது மட்டும் செய்வேன்.

‘ராஜாவின் பாடல் ஓவியத்தின் பக்கம்..’ 2020ல் எனக்கு இளையராஜா பாடல் வரிகளுக்கு ஓவியம் வரைய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனக்கு கலை வடிவங்களிலேயே மிகவும் பிடித்தது இசை தான். ஆனால் எனக்கு இசைக்கருவிகள் இசைக்கவோ, பாடவோ வரவில்லை. அதனால் எனக்குத் தெரிந்த ஓவியக் கலையை வளர்த்துக் கொண்டேன். நான் கொஞ்சம் பொறுமைசாலி. அந்த குணத்தால் ஓவியத்துக்கு தேவைப்பட்ட காலத்தைக் கொடுக்க முடிந்தது. அதுவே எனக்குக் கைவந்த கலையாகிவிட்டது.

நான் இளையராஜாவின் தீவிர ரசிகை. சிறு வயதிலிருந்து அப்பா என குடும்பத்தினர் ராஜா பாடல்களைக் கேட்பதைக் கேட்டு கேட்டு ஈர்க்கப்பட்டு என்னுள்ளும் ராஜா ரசிகை உருவானாள். அப்படித்தான் ராஜாவின் பாடல்களுக்கு ஓவியம் தீட்ட ஆரம்பித்தேன். பெரும்பாலும் நிலப்பரப்பை காட்சிப்படுத்துதல் மூலமே ராஜா பாடல்களை வரைந்தேன். அந்த பார்ப்பவர்கள் அதன் வழியாக ராஜாவின் பாடலுடன் தங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டும் என விரும்பினேன். அதற்கு வரவேற்பும் இருந்தது.

ஆனால் ராஜாவின் எல்லாப் பாடல்களையும் தெரிந்தவர்களால் மட்டுமே அவ்வாறு தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும் என்ற சிறிய தடங்கல் இருந்தது. அதனால் கடந்த ஆண்டில் நான் என் மனதில் தோன்றும் நிலப்பரப்பில் ராஜாவின் பாடலை அதிலிருந்த நடிகர்கள், நடிகைகளோடு வரைய ஆரம்பித்தேன். அதன் வீச்சு நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. பின்னர் அதையே காலண்டராக கஸ்டமைஸ் செய்து கொடுக்கும்போது அநேக வரவேற்பு கிடைத்தது. இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இன்னும் சில இசையமைப்பாளர்களின் பாடல்களயும் லேண்ட்ஸ்கேப் ஓவியங்களாகக் கொடுத்து வருகிறேன். இது எல்லோருக்கும் அபிமானமான வடிவமாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வணிக ரீதியாக வளம் பெற இதை பின்பற்றுகிறேன்.

அதேவேளையில், ரீல்ஸ் செய்பவர்கள் போல் ட்ரெண்டில் இருப்பவற்றை நான் ஓவியமாக்குவதில்லை. இளையராஜாவின் மாஸ்டர்பீஸ்களை எடுத்து, வான்காவின் ஒப்பற்ற ரசனையை கலந்து என் ஓவியத்தின் மூலம் ஒரு விளக்கத்தைத் தர முற்படுகிறேன். என் ஓவியங்களுக்கு ராஜாவின் பாடல் ஆதார ஸ்ருதி என்றால், வானத்து நீலமும், சில நட்சத்திரங்களும், மஞ்சள் பூக்களும் வான்கா என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தால் உருவான தாளம்.

என் வெற்றிக்கு சமூக வலைதளத்துக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்வேன். சமூக வலைதளங்கள் வாயிலாகத் தான் எனக்கு ஆர்டர் வந்தது. அதன் மூலமாகத் தான் எனக்கு ஊடக வெளிச்சமும் கிடைத்தது.

‘நாம் வெறும் தூசு; நமது பிரச்சினைகளும் அப்படியே..’ - வான்கா எனக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யம் தான். என் சக ஓவியத் தோழமைகள் வான்கா, ஃப்ரீடா பற்றி பேசுவதைக் கேட்டு வான்காவை தேடினேன். அப்போதுதான் நான் ஏற்கெனவே சேகரித்து வைத்திருந்த தி ஸ்டாரி நைட் ஓவியம் வான்காவின் கைவண்ணம் என்பதே தெரிந்தது. அதன்பின்னர் நான் வான்கா பற்றி அதிகம் தேடினேன். ஒரு மனநல காப்பகத்திலிருந்து கொண்டு வானத்தில் நிறைந்திருந்த வின்மீன்களை ரசித்து எழுதிய கோணம் எனக்கு பிரம்மிப்பாக இருந்தது.

எனக்கு விவரம் தெரிந்தபின்ன வானமும், வின்மீனும், ‘நாம் ஒன்றுமில்லை. வெறும் துகள்’ என்ற புரிதலைத் தந்தது. எனக்கு வானம் எப்போதும் ஆறுதல் தரும். நாமும் ஒன்றுமில்லை; நமக்கு வரும் பிரச்சினைகளும் ஒன்றுமில்லை. அது சரியாகும் என்ற நம்பிக்கையை தந்தது.

அந்தப் புரிதலையும் வான்காவின் ஸ்டாரி நைட்டையும் ஒப்பிட்டுக் கொண்டேன். மனநலக் காப்பகத்தில் எத்தனை அழுத்தத்தில் இருந்த வேளையில் இயற்கையால் ஒருவனை ரசிகனாக்க முடிகிறதென்பதை நினைத்து வியந்தேன், எத்தகைய துன்பத்திலும் கலையைக் கைவிடாத வான்கா என்னை ஆச்சரியப்படுத்தினார். அதனால் அவரை என் படத்தில் எப்படியாவது பிரதிபலிக்கத் தொடங்கினேன். இப்போது வானம், நீலம், வான்கா, ராஜா எல்லாம் சேர்ந்து இன்று என் எண்ணமெல்லாம் வண்ணமாகிவிட்டது” என்று ஓவியமாகப் பேசி முடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x