Last Updated : 21 Dec, 2024 07:08 PM

1  

Published : 21 Dec 2024 07:08 PM
Last Updated : 21 Dec 2024 07:08 PM

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 400 கிலோ ‘மெகா சைஸ்’ கொப்பரை குலா மீன்!

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் வலையில் 400 கிலோ எடை கொண்ட 'மெகா சைஸ்' கொப்பரை குலா சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 50-க்கும் அதிகமான நாட்டுப் படகுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். மீனவர்கள் மீன் பிடித்துவிட்டு இன்று (டிச.21) பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர். மீனவர்கள் வலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள், அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவு கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.

இந்நிலையில் பாம்பனைச் சேர்ந்த சாம்சன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் 3 மீட்டர் நீளமுடைய 400 கிலோ எடை கொண்ட கொப்பர குலா என்றழைக்கப்படும் வாள் மீன் (SWORD FISH) மீன் ஒன்று சிக்கியது. பாம்பன் நாட்டுப் படகு மீனவர் வலையில் சிக்கிய 400 கிலோ எடை கொண்ட கொப்பர குலா மீனை கேரளா மீன் வியாபாரி ஒருவர் கிலோ ரூ.140 என ரூ.56 ஆயிரம் கொடுத்து வாங்கி சென்றார். ஒற்றை மீன் 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதால் நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொப்பர குலா மீனுக்கு கேரள மாநில அசைவ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மீனை அரை கிலோ, ஒரு கிலோ என வெட்டி எடை போட்டு விற்பனை செய்து விடுவேன் என கேரள வியாபாரி தெரிவித்தார்.

வாள் மீன்கள் நீண்ட, தட்டையான கத்தி போன்ற நீண்ட மூக்கை கொண்டது. இவை வேகமாக இடப்பெயர்ச்சி செய்யக்கூடியவை. இந்த வகை மீன், அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதியில் வாழக்கூடியது. வழக்கமாக 3 மீ நீளம் மற்றும் அதிகபட்சம் 4.55 மீ நீளம் மற்றும் 650 கிலோ எடை வரை வளரக் கூடியது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x