Last Updated : 11 Dec, 2024 09:10 PM

2  

Published : 11 Dec 2024 09:10 PM
Last Updated : 11 Dec 2024 09:10 PM

‘Brain Rot’ என்றால் என்ன? - செக் லிஸ்ட் உடன் ஓர் உளவியல் கைடன்ஸ்

மக்களே... சமூக வலைதளங்களில் ஒருநாள் கூட ரீல்ஸ், போஸ்ட் பார்க்காமால் இருக்கவே முடியாதா? இன்ஸ்டாகிராமில் அதிகப்படியான நேரம் ரீல்ஸ் பார்ப்பவரா? அடிக்கடி ஸ்க்ரால் செய்துகொண்டே இருப்பவரா? இப்படி இருப்பவர்கள் ‘பிரெயின் ராட்’ (Brain Rot) பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என கூறப்படுகிறது. இதைதான் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ‘Word of the Year for 2024’ ஆக குறிப்பிட்டுள்ளது. ‘பிரெயின் ராட்’ பற்றிய விவரங்களை இங்கே சற்று விரிவாக காணலாம்.

டிஜிட்டல் யுகம்: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் மிகப் பெரிய ஆதிக்கத்தை மக்கள் மத்தியில் செலுத்துகின்றன. வயது வரம்பு இன்றி அனைத்து தரப்பினரும் சமூக ஊடகங்களை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக உலகளவில் சமூக உரையாடல்கள் பெருமளவில் குறைந்து வருகிறதே என்ற கவலையும் உண்டு. அதே சமயம், டிஜிட்டல் உரையாடல்கள் பெருகிவிட்டன.

இந்த நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி பிரஸ் 2024-ஆம் ஆண்டின் கவனம் ஈர்க்கும் சொல்லாக ‘பிரெயின் ராட்’ (Brain Rot) என்ற சொல்லை அறிவித்துள்ளது. அதிலிருந்து அனைவரும், ‘பிரெயின் ராட்’ என்றால் என்ன என்று கூகுளில் அர்த்தம் தேட ஆரம்பித்துவிட்டனர். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மூச்சு விடுவது, தண்ணீர் குடிப்பது, உணவு உண்பதற்கு அடுத்தப்படியாக பலரது வாழ்வில் சமூக ஊடகங்கள் ஒன்றிபோய்விட்டது. குறிப்பாக, 6 வயது குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை பெரும்பாலானோரும் தினமும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ரீல்ஸ்களில் அதிகப்படியாக நேரம் செலவிடுகின்றனர். இவ்வாறு சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் பட்சத்தில் அவர்களின் உடல்நலனும், மனநலம் ஒருசேர பாதிக்கப்படுவதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையை குறிக்கக்கூடிய ‘பிரெயின் ராட்’ என்ற வார்த்தையை இந்த ஆண்டின் முக்கியமான வார்த்தையாக ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி பிரஸ் சேர்த்துள்ளது.‘பிரெயின் ராட்’ என்பது ஒரு நபரின் மன அல்லது அறிவுசார் நிலை மோசமடைவதைக் குறிக்கும் வார்த்தையாகும்.

‘பிரெயின் ராட்’ என்றால் என்ன? - ‘பிரெயின் ராட்’ பற்றி தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் ஒரு நபரின் மனநலம் அல்லது அறிவு சார்ந்த தன்மை மந்தமாவதும், அது தடுக்க இயலாத ஒன்றாக கருத்தக்கூடியதும் என்றும் இதற்குப் பொருளாக சொல்லப்படுகிறது. இது, பயனற்ற அல்லது முக்கியமற்ற விஷயங்களை அதிகப்படியாக பார்ப்பதன் விளைவாக ஏற்படும் நிலை என்று கருதப்படுகிறது. ப்ரெயின் ராட் என்ற வார்த்தை இணையம் உருவாக்கப்படுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது. ‘பிரெயின் ராட்’ எனும் வார்த்தையை 1854-ம் ஆண்டிலேயே ‘வால்டன்’ என்கிற புத்தகத்தில் எழுத்தாளர் ஹென்றி டேவிட் தாரோ ஆவணப்படுத்தியிருக்கிறார்.

2024-ல் மக்கள் அதிகம் பயன்படுத்திய வார்த்தை இதுதான். ஆக்ஸ்போர்டு அமைப்பு நடத்திய வாக்கெடுப்பில் 37 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதில் அதிக வாக்குகளை ‘பிரெயின் ராட்’ என்கிற வார்த்தை பெற்றிருக்கிறது. இதனையடுத்து 2024-ம் ஆண்டுக்கான வார்த்தையாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 2023-க்கும் 2024-க்கும் இடைப்பட்ட காலத்தில் ‘பிரெயின் ராட்’ சொல்லின் பயன்பாடு மட்டும் 230% அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த வார்த்தை சமூக ஊடகங்களை பயன்படுத்தும், ஜென் ஸி தலைமுறை மற்றும் ஜென் ஆல்ஃபா தலைமுறையினர் மத்தியில் பிரபலமானது.

உளவியலாளரும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான ஆண்ட்ரூ பிரசிபில்ஸ் என்பவர் இது குறித்து கூறும்போது, “இணைய உலகம் மீதான நமது வெறுப்பை பிரதிபலிக்கவே இந்த வார்த்தையை பயன்படுத்துகிறோம். சமூக ஊடகங்கள் பற்றிய நமது குமுறல்களை வெளிப்படுத்த நாம் பயன்படுத்தும் வார்த்தை இது. உண்மையில் ப்ரெயின் ராட் என்ற ஒரு பாதிப்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை” என்கிறார்.

மனநல ஆலோசகர் ஜான்சி ராணி கருத்து: இது குறித்து மனநல ஆலோசகர் ஜான்சி ராணியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்: அப்போது அவர் கூறியது: “ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி பிரஸ் 2024-ஆம் ஆண்டின் கவனம் ஈர்க்கும் வார்த்தையாக ‘பிரெயின் ராட்’ என்ற வார்த்தையை அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த வார்த்தை ஜென்ஸி தலைமுறை மற்றும் ஜென் ஆல்ஃபா தலைமுறையினர் மத்தியில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. வீடியோக்களை அதிகமாகப் பார்ப்பது, அடிக்கடி சமூக ஊடகங்களை ஸ்க்ரால் செய்தல் உள்ளிட்ட அதிகப்படியான டிஜிட்டல் மீடியாவின் பயன்பாடுகளை இவ்வாறு கூறலாம்.

இன்றைய இளைஞர்கள் எய்ம்லெஸ் ஸ்கராலிங் (aimless Scrolling Habit) பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர். எந்தவித பயனுமில்லாத போஸ்டுகளை, ரீல்ஸ்களை பார்ப்பதென்பது அவர்களுக்கு ஓர் அன்றாட பழக்கமாகவே மாறிபோனது. இது அவர்களுக்கு பல்வேறு விதமான சிக்கலை உண்டாக்கும்.

பொதுவாகவே, இளைஞர்களுக்கு ஹார்மோன் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால், மன அழுத்தம், அதிகமாக கோபம் வருவது போன்ற பிரச்சினை இருக்கும். குறிப்பாக படிப்பில் கவனம் செலுத்த முடியாதது. இரவில் நல்ல உறக்கம் இருக்காது. இந்நிலையில், அதிகமான நேரம் போனில் ஸ்க்ரால் செய்து போஸ்டுகளை பார்ப்பதால், கவனச்சிதறல் இன்னும் அதிகரிக்கிறது. இதனால் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகவே மாறுவார்கள். பெற்றோர் என்ன அட்வைஸ் செய்தாலும், அவர்களுக்கு அது பெரிதாக மனதளவில் பதியாது.

மனநல ஆலோசகர் ஜான்சி ராணி

வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் இப்பழக்கத்துக்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது தற்காலிகமாக மட்டும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. பெற்றோர்களே அதிகமான நேரத்தை ஆன்லைனில்தான் செலவிடுகின்றனர். இதில் எங்கே குழந்தைகளை குறை சொல்வது... பெற்றோர்களைப் பார்த்துதான் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள். படிப்படியாக தான் இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

தொடர்ந்து ஆன்லைனில் நேரம் செலவிடுவதால், தலைவலி, வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதை மருத்துவரிடம் சென்று பரிசோதித்தாலும், சரியான காரணம் தெரியவராது. இந்நிலை மோசமடைந்தால், தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்வார்கள். சுய சுத்தம் என்பது இருக்காது. சமூகத்துடன் ஒத்து காணப்பட மாட்டார்கள். இந்நிலையில், இருந்து தங்களை விடுவிக்க முயற்சித்து, போதை பொருளுக்கும் அடிமையாகிவிட வாய்ப்புள்ளது.

அந்தக் காலத்தில் பெற்றோர்கள், குழந்தைகளை அடித்து வளர்ப்பார்கள். ஆனால், இப்போது குழந்தைகளை கண்டித்தும் வளர்த்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் பெற்றோர் முதலில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எப்படி சமூக இணைய ஊடகங்களை அர்த்தமுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்பதை கற்பிக்க வேண்டும். மெதுவாகவே இதில் இருந்து விடுபட முடியும். நடைபயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல், யோகா செய்வது, புத்தகங்கள் படிப்பது உள்ளிட்ட நல்ல ஆரோக்கியமான பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

சமுக வலைதளங்களில் இருந்து ஒரு பிரேக் எடுத்து கொள்ள வேண்டும். இதை (digital detox) என்று சொல்வார்கள். எந்த வேலையும் செய்திருக்க மாட்டோம். ஆனால் கடுமையான உடல்சோர்வை ஏற்படுத்தும். மேலும், கவனசிதறல், மனச்சோர்வு, உற்பத்தித் திறன் குறைபாடு ஆகியவற்றை ஏற்படும்.

முந்தைய காலகட்டங்களில் அனைத்து தேவைகளுக்கும், பொழுதுபோக்குக்கும் போனையே சார்ந்து இல்லை. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது, இப்படி சமுக வலைதளங்களில் அதிகளவு நேரம் செலவிட்டால் அது ஆபத்துக்கு வழிவகுக்கும் என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் சற்று கவனத்துடன் இந்த விஷயங்களை அணுகுவார்கள். கட்டுப்பாட்டோடு, சுய ஒழுக்கத்தோடு இருந்தால், ஒரு மாதம் முதல் 6 மாதத்துக்குள் நல்ல தீர்வைப் காண முடியும்” என்று அவர் கூறினார்.

’அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை ஒருபோதும் மறந்துவிட கூடாது. நவீன உலகில், தொழில்நுட்பம் நம்மை எப்போதும் இணைத்திருப்பதைப் போல் உணர வைத்தாலும், உண்மையான மனித தொடர்பின் ஆழத்தை அது நிரப்ப முடியாது. தேவைக்கு மட்டும் சமூக ஊடகங்களை சார்ந்திருப்பது நல்ல ஆரோக்கியமான சமுதாயத்துக்கு வித்திடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x