உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது தீபாவளி. ஒளி, வண்ணங்கள், பட்டாசுகள், இனிப்புகள் ஆகியவற்றுடன் கொண்டாடப்படும் பண்டிகை இது.
எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது, விழிப்புடன் இருப்பது ஆகியவற்றின் மூலம் தீபாவளியை மகிழ்ச்சியும் பாதுகாப்பும் மிக்க பண்டிகையாகக் கொண்டாடலாம்.
முடிந்தால், பட்டாசுகளைத் தவிர்த்துவிட்டு சுத்தமான, பசுமையான தீபாவளியைக் கொண்டாடுங்கள். பட்டாசுகளைத் தவிர்ப்பதன் மூலம் நாம் தீக்காயங்களையும் பிற உடல் பாதிப்புகளையும் தடுத்துவிடலாம் என்பது மட்டுமல்ல; காற்று மற்றும் ஒலி மாசு, சி.ஓ.பி.டி, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆபத்து மிக்க புகைமூட்டம் ஆகியவற்றையும் தவிர்த்துவிடலாம். பண்டிகைக் காலங்களில் தீக்காயங்களை மட்டுமல்லாமல் அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுதல், மது அருந்துதல் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவையும் தன்னளவில் பல்வேறு உடலநலப் பிரச்சினைகளை விளைவிக்கக்கூடியவை.
பட்டாசுகள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- பட்டாசு வெடிக்கும்போது செயற்கை இழையால் நெய்யப்பட்ட துணிமணிகளையும். தளர்வான ஆடைகளையும் உடுத்திக்கொள்வதைத் தவிர்க்கவும். இவை எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடியவை.
- லைட்டர்கள், வத்திக்குச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு பட்டாசு பற்றவைப்பதைத் தவிர்க்கவும்.
- மூடிய வெளிகள், உள்புறப் பகுதிகள், மரங்களாலும், மின் கம்பிகள், வயர்களால் சூழப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவும்.
- வாகனப் போக்குவரத்து நிகழும் சாலைகளில் பட்டாசு வெடிக்கவே கூடாது.
- பட்டாசைக் கையில் வைத்துக்கொண்டு பற்றவைக்கக் கூடாது.
- பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டு பட்டாசு வெடிக்கவும்.
- மனிதர்கள், விலங்குகள் மீது பட்டாசுகளை வீசக் கூடாது.
- குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது உடன் இருந்து கண்காணிக்க வேண்டும்.
- கண்களுக்குள் செலுத்தப்படும் சொட்டு மருந்து, சுவாசத்தை சீராக்குவதற்கான இன்ஹேலர்கள், தீக்காயங்களுக்கான கிரீம்கள் போன்றவற்றை உள்ளடக்கிய முதலுதவிப் பெட்டி, ஒரு வாளி தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- நிதானமும் முடிவெடுக்கும் சிந்தனையும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால் மது அருந்திய நிலையில் பட்டாசு வெடிக்கக் கூடாது.
- விபத்து நேர்ந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
- முட்டையின் வெள்ளைக்கரு, தோசை மாவு, ஐஸ் கட்டிகள், மீன் தோல் போன்றவற்றைத் தடவுதல் போன்ற பிறரிடமிருந்து கேள்விப்பட்ட மருத்துவத் தீர்வுகளை முயன்று பார்க்கக் கூடாது. இவை காயங்களின் பாதிப்பை அதிகரிக்கக்கூடியவை. விரைவான மருத்துவ கவனம் விரிவான நிவாரணத்தைத் தருவதோடு பிற சிக்கல்களைத் தடுக்க உதவும்.
தீக்காய மேலாண்மை:
- பட்டாசு வெடிக்கும்போது தெரியாமல் நிகழும் தீ விபத்து, தோல் காயங்களையும், கண்களையும் சுவாசத்தையும் பாதிக்கும் ஊறுகளையும் விளைவிக்கும்.
- உலர் வெப்பத்தால் தீண்டப்படுவது எவ்வளவு நேரம் அந்தத் தீண்டுதல் நிகழ்ந்துள்ளது, எந்த அளவுக்கு ஆடைகளில் தீப்பற்றியுள்ளது,
- கொடுக்கப்பட்ட முதலுதவியின் செயல்திறன் ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு அளவிலான தீக்காயங்களை ஏற்படுத்தும். எந்த அளவுக்கு அடர்த்தியாக தோல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் தீக்காயங்கள் மேலோட்டமானவை என்றும் ஆழமானவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
முதலுதவி: தீப்பற்றிய பகுதியை குளிர்ச்சியான நீரில் முக்கி எடுக்க வேண்டும். அல்லது நீரில் முக்கி எடுக்கப்பட்ட துணியை வைத்து தீப்பற்றிய பகுதியை மூட வேண்டும். பெரிய அளவில் தீப்பற்றி இருந்தால் ஒரு உடலைச் சுற்றி போர்வையை போர்த்த வேண்டும். நகைகளைக் கழற்றிவிட வேண்டும். தீப்பற்றிய பகுதி பெரியதாக இருப்பது, கண்கள், கைகள் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட தீக்காயம், குழந்தைகள், முதியோருக்கு ஏற்பட்ட தீக்காயம் ஆகியவற்றுக்கு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் .
தீக்காயங்களுக்கான மருத்துவமனையில் மேலாண்மை பின்வரும் நோக்கங்களைக் கொண்டவை:
- நீரேற்றத்தை மீட்டு அதிர்ச்சியைத் தடுத்தல்
- உரிய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி வலியைக் குறைத்தல்
- தீக்காயங்கள் குணமாவதற்கு மருந்து தடவி கட்டுப் போடுதல்
- ஆழமான தீக்காயங்களுக்கு தோல் ஒட்டுதல் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்
- நீங்காத வடுக்கள், தோல் சுருங்குதல் போன்ற இரண்டாம் நிலை சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு உரிய மருத்துவ நடவடிக்கைகள், மீண்டும் பழைய நிலைக்கு மீள்வதற்கான மறுவாழ்வு நடவடிக்கைகள்.
- கட்டுரை: டாக்டர் எஸ்.பகவத் குமார்
WRITE A COMMENT