Published : 23 Oct 2024 04:54 PM
Last Updated : 23 Oct 2024 04:54 PM
திருச்சி: மழைக்காலம் தொடங்கிவிட்டாலே வைரஸ்களுக்கு கொண்டாட்டம் தான். இதனால், சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான் இதற்குக் காரணம்.
பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தி, சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன. இவை வராமல் தடுக்கவும், வந்தால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் சா.காமராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: வழக்கமாக மழைக்காலம் தொடங்கும்போதுதான் பலருக்கும் வைரஸ் காய்ச்சல் ஏற்படும். ஆனால், இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பே பலருக்கும் வைரஸ் காய்ச்சல் பரவத் தொடங்கிவிட்டது. தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், காய்ச்சல், மூட்டு வலி, மலக்கட்டு, சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேற்கண்ட நோய்கள் வராமல் இருக்க, தண்ணீரை கொதிக்க வைத்து, இளஞ்சூடாக குடிக்க வேண்டும்.
இப்போது மட்டுமல்ல, எப்போதும் இதைப் பின்பற்றினால் மஞ்சள் காமாலை நோய், சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள், பசியின்மை, வாந்தி, மலக்குடல் ரத்தம் உறைதல், வெரிகோஸ்வெயின், இதய பாதிப்பு, சளி, இருமல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.மேலும், மழைக்காலத்தில் காய்கள், கீரை வகைகள், பழங்களை வெந்நீரில் நன்கு கழுவி, சுத்தப்படுத்தி சமைக்க, உண்ண பயன்படுத்த வேண்டும். ஈரமான துணிகளை உடுத்தக் கூடாது. மழைக்காலத்தில் ஏ.சி பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
மழைக்காலத்தில் மீன், நண்டு, இறால், கருவாடு, முட்டை, பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள், பழைய சோறு, பழைய குழம்பு, குளிர்பானங்கள், பிஸ்கட், கேக் வகைகள், பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உணவு, தின்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. அப்படி செய்தால் உடல் குளிர்ச்சியடைந்து சளி, இருமல், காய்ச்சல் வர வாய்ப்புண்டு.
ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலத்தில் இனிப்பு வகைகள், கீரை, வாழைப்பழம், கொய்யா, வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் டெங்கு காய்ச்சல் பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுகள் உற்பத்தியாகும் என்பதால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம்.
என்ன மருந்து? - சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் இருந்தால் தாளிசாதி சூரணம் பயன்படுத்தலாம். இதை 1- 12 வயது குழந்தைகளுக்கு கால் டீஸ்பூனும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரை டீஸ்பூனும் எடுத்து, தேன் விட்டு குழைத்து 3 வேளை எடுத்துக் கொள்ளலாம். சளி, இருமலுடன் மூச்சுத்திணறலும் இருந்தால், சுவாசக் குடோரி மாத்திரையை குழந்தைகளுக்கு 1, பெரியவர்களுக்கு 2 என 3 வேளை எடுத்துக் கொள்ளலாம்.
தோலில் அரிப்பு, தடிப்பு, படைக்கு பரங்கிப்பேட்டை சூரணம் அல்லது திரிகடுக சூரணத்தை குழந்தைகளுக்கு 250 மில்லி கிராம் வீதமும், பெரியவர்களுக்கு 500 மில்லி கிராம் வீதமும் 3 வேளை தேனில் கலந்து, உணவுக்குப் பின் கொடுக்கலாம். மலச்சிக்கலுக்கு திரிபலா சூரணத்தை இரவு தூங்கச் செல்லும்போது வயதுக்கு ஏற்பட 5 கிராம் முதல் 10 கிராம் பொடியை இளவெந்நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது திரிபலா சூரணம் 2 மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.
ரத்தம் உறைதல், வெரிகோஸ்வெயின், இதய நோய்க்கு, சிறிதளவு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி இடித்து சாறு எடுத்து 5 மில்லி சாறுடன் தேன் கலந்து, காலை, மாலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கபசுர குடிநீர் சூரணம், நிலவேம்பு குடிநீர் சூரணம் குடிக்கலாம்.
இருமல் இருந்தால் தாளிசாதி வடகம் மாத்திரை அல்லது அதிமதுரம் மாத்திரை தலா 1 எடுத்து வாயில் சப்பி சாப்பிடலாம். ஆடாதோடை மணப்பாகு வாங்கி 5 மி.லி முதல் 15 மி.லி வீதம் 3 வேளை குடிக்கலாம். இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT