Published : 23 Oct 2024 03:54 PM
Last Updated : 23 Oct 2024 03:54 PM

நோபல் பரிசாளர்களும் நீலகிரி மாவட்டமும்!

ஹெலன் கெல்லர், பாலி தாமஸுடன் உதகைக்கு 1955-ம் ஆண்டு வந்த நோபல் பரிசு வென்ற சி.வி.ராமன்.

உதகை: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நோபல் பரிசு வென்றவர்களுடன் நீலகிரி மாவட்டத்துக்கு நீண்ட தொடர்பு உள்ளது.

நோபல் பரிசுபெற்ற வெற்றியாளர்களில் குறைந்தது 4 பேர், குறிப்பாக இலக்கியத்துக்கான பரிசு பெற்றவர்கள், நீலகிரி மலைகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். 1913-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர், 1918-ல் ஆண்டு 15 நாட்கள் நீலகிரியில் தங்கினார். அவருடன் தீனபந்து, ஆண்ட்ரூஸ் ஆகியோரும் வந்திருந்தனர்.

அப்போது, சில இளம் இறையியலாளர்கள், கிழக்கு இலக்கியம் மற்றும் கலையில் ஆர்வத்தையும், ரசனையையும் உருவாக்கி வளர்க்கும் நோக்கத்துடன், தாகூரின் மறுமலர்ச்சி சங்கம் உருவாக்கப்பட்டது. 1930-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் சி.வி.ராமன் ஆவார். அறிவியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஆசிய மற்றும் ஆங்கிலேயர் அல்லாதவர்.

இவரது மகன், பேராசிரியர் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன், வானியல் இயற்பியலாளராக இருந்தார். உதகையிலுள்ள வானொலி வானியல் மையத்தில் சிறிது காலம் அவர் பணியாற்றினார். புகழ்பெற்ற காதுகேளாத, பார்வையற்ற கல்வியாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஹெலன் கெல்லருடன், 1955-ம் ஆண்டு உதகைக்கு சி.வி.ராமன் வந்தார். ஹெலன் கெல்லர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இதேபோல், ஹெர்மன் ஹெஸ்ஸி ஜெர்மன் நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர் மற்றும் ஓவியர் ஆவார். இவர் 1946-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். கௌதம புத்தர் காலத்தில் சித்தார்த்தாஎன்ற மனிதனின் சுய கண்டுபிடிப்பின் ஆன்மிக பயணத்தை கையாளும் சித்தார்த்தா, அவரது புகழ்பெற்ற படைப்புகளில் அடங்கும்.

அவரது தந்தை ஜோஹனஸ் ஹெஸ்ஸி, கேத்தியில் உள்ள பாசல் மிஷனில் பணியாற்றினார். ஹெர்மன் ஹெஸ்ஸியின் தாய் ஹெர்மன் குண்டர்ட்டின் மகள் ஆவார். மலையாள இலக்கணத்தையும், மலையாளம் - ஆங்கில அகராதியையும் அவர் தொகுத்தார்.

மெக்சிகன் கவிஞரும், ராஜதந்திரியுமான ஆக்டேவியோ பாஸ், 1990-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1962-ல் இந்தியாவுக்கான மெக்சிகோ தூதராக நியமிக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில், ‘ஒட்டக்கமண்ட்’ என்ற நீண்ட கவிதையை எழுதினார். இக்கவிதை வெறும் பயணக் கவிதையாக மட்டுமின்றி, மனித - இயற்கை உறவின் ஆழமானவர்ணனையாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x