Published : 14 Oct 2024 07:23 PM
Last Updated : 14 Oct 2024 07:23 PM
மதுரை; அருவிமலையில் பழங்கால குகைத்தளம் உள்ளதால் இந்த மலையை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை பண்பாட்டு குழுவினர் நேற்று மனு அளித்தனர். மதுரை மாவட்டத்தில் 16 மலைக்குன்றுகளில் இதுவரை சமணர் கற்படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 8 மலைக்குன்றுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையாலும் 7 மலைக்குன்றுகள் இந்திய அரசு தொல்லியல்துறையாலும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவித்து பாராமரிக்கப்படுகிறது.
இந்நிலையில், மதுரை அருவிமலையில் உள்ள குகைத்தளத்தில் 12-க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் கொண்ட குகைத்தளம் மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினரால் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் அறிவு செல்வம் மற்றும் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவு செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்து அருவிமலை கற்படுகைகளை உறுதி செய்தனர். 30 பேர் தங்குமளவில் இந்த குகைத்தளம் உள்ளது. அதனால், அருவிமலையை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை பண்பாட்டு குழுவினர் மனு அளித்தனர்.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் அறிவு செல்வம் மற்றும் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவு செல்வம், இயற்கை பண்பாட்டு குழு தமிழ்தாசன் கூறுகையில், ‘‘அருவிமலை குகைத்தளத்தில் 12க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இக்குகைத்தளம் மணல்மேவி பராமரிப்பின்றி இருக்கிறது. மேலும் சிவன் கோயில் கடந்து மலை மேல் உள்ள முனீஸ்வரன் கோயில் செல்லும் வழியில் இருப்பாறை சந்திக்கும் இடுக்கு பகுதியை ‘பள்ளிக்கூடம்’ என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
இப்பாறை இடுக்கு அருகில் தரையில் கல்வெட்டுகள் இருந்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனை தொல்லியல் துறை கண்டறிய வேண்டும். மேலும் அருவிமலை சிவன் கோயில் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. கல்வெட்டுகள் காணப்படும் அதிட்டானம், கற்தூண் அங்குமிங்குமாக சிதறிக்கிடக்கிறது. அருவிமலை வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT