Published : 27 Sep 2024 04:46 PM
Last Updated : 27 Sep 2024 04:46 PM
மெம்பிஸ் ஶ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் மற்றும் இந்திய கலாச்சார மையம் சென்ற வாரம் நடத்திய ஊத்துக்காடு வேங்கடகவி கலை விழாவில், நியூயார்க், மிச்சிகன், இல்லிநாய் , விஸ்காந்சின், மற்றும் பல அமெரிக்க நகரங்களிலிருந்து வந்திருந்த பல இளம் கர்நாடக இசைக் கலைஞர்கள் தனித்தனியாக ஊத்துக்காடு கவியின் சாகித்தியங்களை சுருதி சுத்தமாகப் பாடி ரசிகர்களை அசத்தினார்கள். பக்கவாத்தியக் கலைஞர்களும் சிறப்பாக வாசித்தார்கள்.
ஊத்துக்காடு ஶ்ரீ வேங்கட கவி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகா கவி. எண்ணற்ற பக்தி பாடல்களை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் இயற்றியள்ளார். அவருடைய கிருஷ்ணர் பாடல்கள் தனித்துவம் வாய்ந்தவை. இந்த மகா கவியின் இசை விழாவில்,விஸ்காந்சினைச் சேர்ந்த மூத்த கர்நாடக இசைக் கலைஞர் வநிதா சுரேஷ், பிரபல வாய்பாட்டு மற்றும் சித்திர வீணைக் கலைஞர் பார்கவி பாலசுப்பிரமணியம் இணைந்து கலைஞர்களையும், பாடல்களையும் தேர்வு செய்து, அனைவரையும் மெம்பிஸ் நகரில் ஒருங்கிணைத்தார்கள்.
மெம்பிஸ் கலாச்சார மைய்யத்தைச் சார்ந்த தலைவி விஜயா, உப தலைவர் டாக்டர் பிரசாத் துகிராலா, உறுப்பினர்கள் முரளி ராகவன், ரஜனி பகடாலா, பாலாஜி, செந்தில் கண்ணன், பாண்டியன் மற்றும் பலர் இந்த விழாவை மெம்பிஸ் ஶ்ரீவெங்கடேஸ்வரா கோயிலில் அரங்கேற்றினார்கள். சியாட்டல் பிரமீளா, அட்லாண்டா பிரசன்னா, பெங்களூரு செளம்யா, பார்கவி பாலசுப்ரமணியம், மற்றும் அமெரிக்கா வாழ் அவரது சிஷ்யைகள் பலர் தனித்தனியே கச்சேரி செய்தார்கள்.
தனிநபர் கச்சேரிகளைத் தொடர்ந்து, எல்லாக் கலைஞர்களும் ஒன்றுகூடி, ஶ்ரீ வேங்கட கவியின் பல சப்த ரத்தினங்களை, ஓர் இசை மாலையாக, அந்த தெய்வீகக் கலைஞருக்கு சமர்பித்தார்கள். ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சங்கீத சாம்ராட் ஶ்ரீரவிகிரணின் சித்ர வீணைக் கச்சேரி இந்த விழாவுக்கு ஏற்றம் கொடுக்கும் வகையில் அமைந்தது.
ஶ்ரீ வேங்கட கவி பாடல்கள் மற்றும் அன்னமாச்சார்யா, புரந்தரதாஸா, சுவாதித்திருநாள், எம்.டி.ராமநாதன் மற்றும் முன்னணி படைப்பாளர்கள் பாடல்களை புதுப்புது கோணங்களில் வாசித்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
நிறைவாக, வாஷிங்டன் வாழ் குச்சுபிடி கலைஞர் டாக்டர் யாமினி சரிபள்ளி, ஶ்ரீ வெங்கட கவியின் ‘ மரகத மணிமய’ என்ற கண்ணனின் பாடலுக்கு , அபாரமாக நடனமாடினார். வந்திருந்த கலைஞர்கள் எல்லோரையும், டாக்டர் பிரசாத்தும், டாக்டர் விஜயாவும் கவுரவித்து வாழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT