Published : 16 Sep 2024 04:47 PM
Last Updated : 16 Sep 2024 04:47 PM
மதுரை: வளரி பயன்படுத்திய 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த காவல் வீரன் நடுகல், மதுரை - திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் பழமையான சிலை ஒன்று இருப்பதாக அவ்வூரை சேர்ந்த சூரியராஜ் என்பவர் அளித்த தகவலின்படி நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் தர்மராஜா, சிலம்பரசன், தேன்மொழி அக்கல்லூரியின் உதவி பேராசிரியர் தாமரைக்கண்ணன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் அங்கு குழுவாக சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிற்பம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 18-ம் நூற்றாண்டு காவல் வீரன் நடுகல் சிற்பம் எனத் தெரிந்தது.
இது குறித்து உதவி பேராசிரியர் தாமரைக்கண்ணன், தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்களை களவு, கொள்ளையிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு காவல் வீரன் என்பவருக்கு உண்டு. சிறப்பாக காவல் காக்கும் வீரன், வீரம் மிகுந்த காவல் வீரனுக்கு நடுகல் சிற்பங்கள் எடுத்து அவர்களின் சந்ததிகள் வழி வழியாக இன்றும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
திருமால் கிராமத்தில் காணப்படும். இந்த சிற்பமானது மூன்றரை அடி உயரம், இரண்டு அடி அகலமுடைய ஒரு பலகை கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் மேல் நாசிக்கூடு போன்ற அமைப்பு காணப்படுகிறது. இதில், காவல் வீரன் சிற்பமானது இடதுபுறத்தில் சரிந்த கொண்டை, மார்பில் ஆபரணங்கள், கையில் காப்பு, வலது கையில் ஈட்டியை பிடித்தவாறும், இடது கையில் உடைவாள், வளரியை பிடித்தபடி வடிக்கப்பட்டுள்ளது. இவ்வீரனை நினைவுகூரவும், வீரத்தை பறைசாற்றும் வகையில் நடுகல் வடித்துள்ளனர்” என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT