Last Updated : 15 Sep, 2024 09:04 PM

 

Published : 15 Sep 2024 09:04 PM
Last Updated : 15 Sep 2024 09:04 PM

ஜப்பான் பெண்ணை காதலித்து தமிழ் முறைப்படி கரம்பிடித்த தமிழக இளைஞர்!

தமிழக கலாச்சாரப்படி ஜப்பான் பெண்ணான மியூகிக்கும், தமிழக இளைஞரான ராஜேஷுக்கும் திருமழிசையில் திருமணம் நடைபெற்றது.

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே திருமழிசையில் இன்று ஜப்பான் பெண் ஒருவர், தமிழக கலாசாரப்படி, தமிழக இளைஞரை கரம்பிடித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் கங்காதரன். இவர், கடந்த 25 ஆண்டுகளாக, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே திருமழிசை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கங்காதரனின் மகன் ராஜேஷ், பொறியியல் படிப்பு படித்து விட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டுக்கு சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ராஜேஷ்க்கு, சக ஊழியரான ஜப்பான் நாட்டை சேர்ந்த, பொறியாளர் மியூகிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து, இருவரும் தங்கள் குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆகவே, காதலர்கள் இருவரும் தங்களின் விருப்பத்தை தெரிவித்து, பெற்றோரின் சம்மதத்தை பெற்றனர். அப்போது, மியூகி, தமிழக கலாசாரப்படிதான், ராஜேஷை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.

ஆகவே, திருமழிசையில் ராஜேஷ் - மியூகி திருமணத்தை நடத்த, ராஜேஷின் தந்தை முடிவு செய்தார். அந்த முடிவின் படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திருமழிசை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராஜேஷ்-மியூகி திருமணம் நடைபெற்றது.

பட்டுப்புடவை மற்றும் பட்டு சட்டை-வேட்டி சகிதம் தமிழக கலாச்சாரப்படி நடைபெற்ற இத்திருமணத்தில், மணமகன் ராஜேஷ், மணமகள் மியூகி கழுத்தில் தாலி கட்டினார். இவ்விழாவில், பங்கேற்ற, ஜப்பான் நாட்டை சேர்ந்த மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பட்டு வேட்டி, பட்டுப் புடவைகளில் ஜொலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x