Last Updated : 11 Sep, 2024 05:48 PM

1  

Published : 11 Sep 2024 05:48 PM
Last Updated : 11 Sep 2024 05:48 PM

ஆன்லைன் கேம்ஸ்: மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் கண்காணிக்க தலைமைச் செயலர் அறிவுரை

இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாகுதல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகள் இளைய சமுதாயத்தின் முக்கியப் பிரச்சினையாக மாறி வருவதாகவும், மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், இது குறித்த விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாகுதல் குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று (செப்.11), சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள மாநகராட்சி நிர்வாக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த முகாமை, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: “தொழில்நுட்பம் என்பது இருபுறமும் கூரான வாள் போன்றது. அதை ஆக்கபூர்வமாகவும், தீயவழிகளிலும் பயன்படுத்தலாம். இணைய வழி சாதனங்கள் தொழில் சார்ந்த பயன்பாடு என்பதை தாண்டி ஒரு பொழுதுபோக்குக்காக பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை நாம் தடுக்க இயலாது. காலப்போக்கில் இன்னும் அதிகரிக்கும்.

ஆனால், இந்த இணையவழி சூதாட்டம், விளையாட்டுகளின் தீமை கருதித்தான் அதை தடுக்கும் வகையில், நாட்டில் முதல் முறையாக ஆன்லைன் விளையாட்டு சட்டத்தை தமிழக அரசு உருவாக்கியது. இதுபோன்ற சட்டம் வேறு மாநிலங்களில் இல்லை. இணைய வழி விளையாட்டுக்களின் மீதான மோகம், அடிமைத்தனம் மிக அதிகளவில் குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது மனநிலை சார்ந்த குறைபாடாக மாறுகிறது. இதை தவிர்ப்பது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையும் அளிக்கவும் வேண்டும். கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், இணையவழி கல்விக்கு மாறிய போதுதான், இந்த பழக்கம் அதிகமானது.

என் மகனுக்கு கூட நான் கைபேசி தந்தது இல்லை. கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புக்கு கைபேசியை தரவேண்டியது இருந்தது. தற்போது, ஆன்லைன் விளையாட்டு மோகம் படு வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய இளைய சமுதாயத்தினர் முன் இது ஒரு முக்கியமான பிரச்சினையாக உருவாகியுள்ளது. மனிதன் கூட்டமாக வாழப் பழகியவன். இயற்கைக்கு மாறாக, அவனை இணையவழி விளையாட்டுக்கள் மாற்றுகின்றன. நிழல் உலகில் அவர்கள் வாழ்வது போன்ற சூழலை உருவாக்குகிறது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாணவர்களின் வளர்ச்சியை இணைய வழி விளையாட்டுகள் வெகுவாக பாதிக்கிறது.

சீனா, ஜப்பானில் ஆன்லைன் விளையாட்டுக்கள் இளைஞர்கள், இளஞ்சிறார்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசும் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரத்தில், பெற்றோர், ஆசிரியர்கள் கடமை முக்கியமானது. மாணவர்களின் நடத்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு விளையாட்டு மிகவும் முக்கியம். அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவித்து, சமூக ஊடக பயன்பாட்டில் இருந்து அவர்களை விலகியிருக்க செய்ய வேண்டும். கைபேசிகளை மாணவர்களுக்கு முடிந்தவரை கொடுக்காமல் இருப்பது நல்லது.

மாணவர்கள், இளைஞர்கள், புதிய தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று அவர் பேசினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது. ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்,” என்றார்.

முன்னதாக பேசிய உள்துறை செயலர் தீரஜ்குமார், “இணையவழி விளையாட்டுகளை விளையாடுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2018- ம் ஆண்டு 18 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு 42 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், ஆண்டுதோறும் 30 சதவீதம் அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள் சுனாமி போல உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் 67 சதவீதம் ஆசிரியர்களின் தகவல் படி ஆன்லைன் விளையாட்டுகளால் பள்ளி மாணவர்களுக்கு கண் பிரச்சினை ஏற்படுகிறது,” என்றார்.

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் முகமது நஜிமுத்தின் பேசும்போது, “இந்த இணையவழி விளையாட்டுகள் தற்போது பெரும் சவாலாக உள்ளது. தமிழகம் தான் இதனை கட்டுப்படுத்த முதலில் ஆணையம் அமைத்தது. ஆணையம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சென்னையைத் தொடர்ந்து, கோவை மதுரை திருச்சி ஆகிய நகரங்களில் இதே போன்ற முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அளித்த அறிக்கையில், இணையவழி விளையாட்டுகளின் பாதிப்பு குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆணையம் ஆய்வு செய்த நிலையில், பாதிப்பின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. மாணவர்கள் இரவு நேரங்களில் தான் இது போன்ற விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணித்து, அன்பாக பேசி பாதிப்புகளை புரிய வைக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறும்போது, “உயர்நீதிமன்ற உத்தரவால் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை தடுக்க முடியவில்லை. தொடர்ந்து தடுக்க முயற்சிக்கிறோம். தேவையற்ற விளம்பரங்கள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார். இந்த நிகழ்ச்சியில், ஆணைய உறுப்பினர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சாரங்கன் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x