Last Updated : 06 Sep, 2024 05:46 PM

 

Published : 06 Sep 2024 05:46 PM
Last Updated : 06 Sep 2024 05:46 PM

மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தை நாடிவரும் வெளிநாட்டு பயணிகள்!

கோவை: மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணிகள் தமிழகத்துக்கு அதிகளவில் வரும் நிலையில், கோவையில் மருத்துவ சுற்றுலா நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை சுற்றுலா துறை மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இதய நோய், புற்றுநோய், நுரையீரல், நரம்பியல், கண் சிகிச்சை பெற வருகின்றனர்.

இந்தியாவிலேயே மருத்துவ சுற்றுலாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. சர்வதேச சுகாதார சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதால், மாநிலம் எப்போதும் மருத்துவ நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான முக்கிய மையமாக இருந்து வருகிறது. குறிப்பாக வேகமாக வளர்ந்துவரும் கல்வி, மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட கோவை நகருக்கு மருத்துவ சுற்றுலா மூலம் சிகிச்சை பெற ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 12,500 மருத்துவ மனைகள் உள்ளன. சுமார் 10 லட்சம் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், 48 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 50-க்கும் அதிகமான படுக்கைகள் கொண்ட 300 அரசு மருத்துவமனைகள், 700 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. 50-க்கும் கீழ் படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவ மனைகள் 7500, அரசு மருத்துவ மனைகள் 2400 உள்ளன.

தவிர 1,491 இந்திய அமைப்பு மருத்துவ மனைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆயுர் வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மையங்கள் உள்ளன. மாநிலத்தில் 84 மருந்து கல்லூரிகள் மற்றும் சுமார் 400 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.

மருத்துவச் சுற்றுலாவின் முக்கியத்து வத்தைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாத் துறை, மருத்துவமனைகளுடன் இணைந்து, தமிழ்நாடு சுற்றுலா வளாகத்தில் மருத்துவ சுற்றுலாத் தகவல் மையத்தை அமைத்துள்ளது. மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஒரு முக்கிய குழு மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மருத்துவ சுற்றுலா முறையை மேற்பார்வையிடுகிறது.

ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சுற்றுலாவுக்கு வருகின்றனர். தமிழகத்தில் குறைந்த கட்டணத்தில், சிறந்த மருத்துவம் கிடைக்கிறது. தமிழக மருத்துவ சுற்றுலா கையேட்டில், பதிவு செய்யப்பட்ட மருத்துவமனை விவரங்கள் உள்ளன. இடைத்தரகர்கள் தயவு இல்லாமல், வெளிநாட்டினர் நேரடியாக சிகிச்சை விவரங்களை பெறலாம் என சுற்றுலா துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ சுற்றுலா மாநாடு: இந்தியாவிலேயே முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இதில் வங்கதேசம், நேபாளம், சவுதி அரேபியா, ஓமன், மியான்மர், இலங்கை, மொரீசியஸ், மாலத்தீவுகள், வியட்நாம் உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கோவையில் பல்வேறு மருத்துவ தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ சுற்றுலா மாநாடு ரூ.1 கோடியில் நடத்தப்படும் என கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவையில் மருத்துவ சுற்றுலா மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா துறை செய்து வருகிறது.

இதுகுறித்து சுற்றுலா துறை அதிகாரிகள் கூறும்போது, “சென்னையைத் தொடர்ந்து கோவையில் மருத்துவ சுற்றுலா மாநாடு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. முன்னதாக, கோவை மாவட்டத்தில் உள்ள 25 முக்கிய சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள், செயற்கை கருத்தரித்தல் மையங்கள் மற்றும் பொள்ளாச்சி, ஆனைகட்டியில் செயல்படும் சுகாதார ஆரோக்கிய மையங்கள் மற்றும் ஆயுர்வேதம், சித்தா, நேச்சுரோபதிக்கென செயல்படும் மையங்கள் 10 என மொத்தம் 35 மருத்துவமனைகள் பட்டியலை எடுத்துள்ளோம்.

கோவையில் மருத்துவ சுற்றுலா மாநாடு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளோம். மருத்துவ மனைகள், பயண ஏற்பாட்டாளர்கள், ஹோட்டல் நிர்வாகத்தினர் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து வரும் ஜனவரியில் மாநாட்டை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x