Published : 21 Aug 2024 06:57 AM
Last Updated : 21 Aug 2024 06:57 AM

அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த பெண் நடத்துநருக்கு குவியும் பாராட்டு

ஹைதராபாத்: ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளில் அரசுப் பேருந்தில் அண்ணனை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தில் இருந்த பெண் நடத்துநரே அந்தப் பெண்ணுக்கும் சுகப் பிரசவம் பார்த்துள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. தெலங்கானா மாநிலத்திலும் இப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டம், வனபர்த்தியில் உள்ள தனது சகோதருக்கு ராக்கி கயிறு கட்ட சந்தியா எனும் நிறைமாத கர்ப்பிணி தெலங்கானா அரசுப் பேருந்தில் ஏறினார்.

நாச்சஹள்ளி எனும் இடத்தில் பேருந்து செல்லும்போது, சந்தியாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இது செவிலியராக பணியாற்றிய அனுபவம் கொண்ட பெண் நடத்துநர் பாரதிக்கு தெரிய வந்தது. உடனே பேருந்தை நிறுத்திய பாரதி, பயணிகளை வெளியேற்றிவிட்டு சந்தியாவுக்கு பிரசவம் பார்த்தார். இதில் சந்தியாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மேலும் சுகப் பிரசவம் என்பதால் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தாயும் சேயும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரும் தற்போது நலமுடன்இருப்பதாக மருத்துவமனைதரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

இந்த சம்பவம் குறித்த செய்தியை தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சஜ்ஜனார் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். அவசர காலத்தில் பேருந்தில் சுகப் பிரசவம் பார்த்தபெண் நடத்துநர் பாரதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x