Published : 20 Aug 2024 06:33 AM
Last Updated : 20 Aug 2024 06:33 AM

யூடியூபில் சமையல் வீடியோக்கள் வெளியிட்டு மாதம் ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கும் ஓட்டுநர்

ராஜேஷ் ரேவானி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரேவானி. கடந்த 20 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். லாரி ஓட்டுவதில் சிறந்த அனுபவம் பெற்ற ராஜேஷ் இந்தியாவின் பல சாலைகளில் லாரி ஓட்டி சென்றுள்ளார்.

அப்படி சரக்குகளை ஏற்றிச் செல்லும்போது சாலைகளில் லாரியை நிறுத்திவிட்டு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். தான் சமைக்கும் உணவு குறித்து ஒரு நாள் யூடியூபில் பதிவேற்றினார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக் கவே தொடர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டார். இதில் அவர் பிரபலமானார். இதுகுறித்து ராஜேஷ் ரேவானி ஒரு பேட்டியில் கூறியதாவது:

எனது தந்தையும் லாரி ஓட்டு நர்தான். எங்கள் குடும்பத்தில் மொத்தம் 5 பேர் இருக்கிறோம். என் தந்தையின் வருவாய் மட்டும்தான். அவருடைய வருமானம் போதாமல் கடன் வாங்குவோம். இப்போது நானும் லாரி ஓட்டுகிறேன். லாரி ஓட்டி செல்லும்போது விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. ஒரு முறை என் கை முறிந்துவிட்டது. எனினும் குடும்பத்தை காப்பாற்ற தொடர்ந்து லாரி ஓட்டுகிறேன்.

மாதம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிப்பேன். அப்போதுதான் ‘ஆர் ராஜேஷ் விளாக்ஸ்’ என்ற யூடியூப் சேனல் தொடங்கினேன். தற்போது 1.86 மில்லியன் பேர்இதில் சந்தாதாரர்களாக உள்ளனர். இப்போது புது வீடு கட்டி வருகிறேன். நான் வெளியிடும் வீடியோக்களை எத்தனைப் பேர் பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து மாதந்தோறும் சுமார் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம்வரை வருவாய் கிடைக்கும். ஒரு முறை ரூ.10 லட்சம் கிடைத்தது.

முதலில் எனது குரலை மட்டும் பதிவு செய்து சமையல் வீடியோ வெளியிட்டேன். அதை பார்த்தவர்கள், எனது முகத்தை காட்ட சொல்லி கமென்ட் போட்டிருந்தனர். அதன்பின்னர் எனது மகன்தான் என்னுடைய முகத்தை காட்டி வீடியோ எடுத்தான். அந்த வீடியோவை வெளியிட்டபோது ஒரே நாளில் 4.5 லட்சம் பார்த்தனர். தற்போது லாரி ஓட்டுநராகவும் யூடியூபராகவும் சமாளிக்கிறேன். இதற்கு என்னுடைய குடும்பத்தார் மிகுந்த ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கின்றனர். இவ்வாறு ராஜேஷ் ரேவானி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x