Published : 13 Aug 2024 07:55 PM
Last Updated : 13 Aug 2024 07:55 PM
உதகை: டெல்லியில் நடக்கும் சுதந்திர தின விழாவில் விருது பெற நீலகிரி மாவட்டத்தில் இருந்து கிராம செவிலியர் உட்பட இருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 2047-ம் ஆண்டு வளர்ந்த பாரதம் என்ற கருப்பொருள் இந்த ஆண்டு பின்பற்றப்படுகிறது. மேலும், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்திலும் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த வகையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம சுகாதார செவிலியர் மற்றும் இளைஞர் ஒருவர் என இருவர் மத்திய அரசு சார்பில் டெல்லியில் நடக்கும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு விருது பெற உள்ளனர். இதன்படி, மருத்துவத் துறையில் குறிப்பாக சிக்கலான உடல்நிலை பிரச்சினை உள்ள தாய்மார்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களுடைய பிரசவம் வரை கூடுதல் கண்காணிப்பைச் செலுத்திய வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த அரவேணு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஜமுனா என்பவர் விருது பெற தேர்வாகியுள்ளார்.
இதேபோல் நேரு யுவகேந்திரா அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் மற்றொரு பிரிவில் விருது பெற தேர்வாகியுள்ளார். இவர்கள் விருது பெற புதுடெல்லி சென்று வர தேவையான ஏற்பாடுகள் மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT