Published : 01 Aug 2024 03:23 PM
Last Updated : 01 Aug 2024 03:23 PM
கும்பகோணம்: விநாயகர் சதுர்த்திக்காக நீர்நிலைகளில் எளிதாக கரையும் வகையில், மரவள்ளிக் கிழங்கு மாவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் கும்பகோணத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கும்பகோணம் வீரசைவ மடத்தில் ரசாயன பொருட்கள் கலப்பின்றி, இயற்கை பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காகிதகூழ் மொம்மை தொழிலாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் யு.குமார் கூறியது: ரசாயனங்களால் தயாரிக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தால் நீர் மாசுபடும். நீர்நிலை உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதைக்கருத்தில் கொண்டு, ரசாயன பொருட்கள் கலப்பின்றி, இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி சிலைகளை தயாரித்து வருகிறோம்.
இதற்காக சேலத்தில் இருந்து மரவள்ளிக் கிழங்கு மாவையும், கோயம்புத்தூரில் இருந்து காகித கூழையும் மொத்தமாக வாங்கி வந்து விநாயகர் சிலைகளை வடிவமைத்து, பல வண்ணங்களை பூசி விற்பனை செய்கிறோம். இந்தச் சிலைகளை ஆற்றில் கரைக்கும்போது, எளிதில் கரைவதுடன், காகிதக் கூழை நீர்நிலைகளில் வாழும் உயிரினங்கள் உணவாக உண்டுவிடும். நீர்நிலையும் மாசுபடாது. 1 அடி முதல் 9 அடி உயரம் வரை தயாரிக்கப்படும் சிலைகள், ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
நிகழாண்டு ரங்கநாதர் விநாயகர், சூரம்சம்ஹார விநாயகர், குழந்தை வரம் தரும் விநாயகர், சிவரூப விநாயகர் என 4 வகையான புதிய விநாயகர் சிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவை தவிர 30 வடிவங்களில் நூற்றுக்கும் அதிகமான சிலைகளை தயாரித்து வைத்துள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT