Published : 31 Jul 2024 06:38 PM
Last Updated : 31 Jul 2024 06:38 PM
பாரிஸ்: காதல் கவித்துவமானது என்பதை பல்வேறு காவியங்கள் நமக்கு சொல்லியுள்ளன. அதில் புதுவரவாக இணைந்துள்ளார் இத்தாலி நாட்டின் தடகள வீரர் ஜியான்மார்கோ தம்பேரி. கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது திருமண மோதிரத்தை சீன் நதியில் அவர் தவற விட்டுள்ளார். அதை எண்ணி எண்ணி ஏங்கிய அவர் தனது காதல் மனைவிக்காக உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், “அன்பே... என்னை மன்னிக்கவும். விளையாட்டு உலகின் மிக முக்கிய நிகழ்வான ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இத்தாலியின் மூவர்ண கொடியை என்னால் இயன்றவரை உயர்த்தி பிடிக்க விரும்பினேன். அந்த முயற்சியில் எதிர்பாராத விதமாக என் விரலில் இருந்த மோதிரம் அப்படியே பறந்து சென்றது. அதை நான் பார்த்தேன். எப்படியும் படகின் உள்பக்கம் விழும் என்று தான் நினைத்தேன். ஆனால், அது மறுபக்கம் விழுந்துவிட்டது.
அதற்கு தண்ணீர் தான் சிறந்த இடம் என்பது போல சென்றது. எந்நாளும் அது இந்த காதல் நகரத்தின் ஆற்றங்கரையில் இருக்கும். இதன் பின்னணியில் நீண்ட கவித்துவம் இருக்கும் என நினைக்கிறேன். உனக்கு விருப்பம் இருந்தால் நீயும் உனது மோதிரத்தை இதே ஆற்றில் வீசலாம். அது இரண்டும் இணை பிரியாமல் இருக்கும். நான் உன்னை நேசிக்கிறேன் அன்பே. வீடு திரும்பும் போது நிச்சயம் இன்னும் பெரிய தங்கத்துடன் நான் வர இது நல்லதொரு தொடக்கமாக இருக்கலாம்” என ஜியான்மார்கோ தம்பேரி (Gianmarco Tamberi) தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர். தனது பதக்கத்தை கத்தாரின் முடாஸ் எஸ்ஸா பார்ஷிம் உடன் பகிர்ந்து கொண்டவர். உலக தடகள சாம்பியன்ஷிப், உலக இண்டோர் சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக், ஐரோப்பிய சாம்பியன்ஷிப், ஐரோப்பிய விளையாட்டு போன்றவற்றில் தம்பேரி தங்கம் வென்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT