Published : 23 Jun 2024 06:17 PM
Last Updated : 23 Jun 2024 06:17 PM

அழகிய தமிழ்ப் பெயருடன் பெயிண்ட் ரகங்கள் - திருப்பூர்காரர் அசத்தல்

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் ஈ.சீனிவாசன். அடுமனை, பழமுதிர் நிலையம், மக்கள் சந்தை என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட தொழில்களை வெற்றிகரமாக செய்தவர். கடந்த 2021-ம் ஆண்டு திருப்பூரில் 'செண்பகம் பெயிண்ட்ஸ்' என்ற பெயரில் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தை தொடங்கினார். வழக்கமான வியாபார யக்திகளை வழக்கமான வியாபார யுக்திகளை களைந்து, பெயிண்ட்களுக்கு இவர் வைத்த பெயர்கள் தான் பலரையும் ஈர்க்கவும், ரசிக்கவும், சிலாகிக்கவும் வைக்கிறது.

புகழ், இனியன், அழகி, எழில், செவ்வந்தி என தமிழ்ப்பெயர்களை வண்ணங்களுக்கு சூட்டி அழகு பார்த்தார். அதிலும் முதன்மை பூச்சுக்கு காப்பான், தடுப்பான், வெண்பா என தமிழில் அழகோவியம் வரைகிறார். அதேபோல் டிஸ்டம்பர் என்பதை 'பிசின் சுண்ணம்' என்றும், பட்டி மாவை 'சுவர் மெழுகி' என தமிழில் சொல்லி நெஞ்சில் வண்ணம் வார்க்கிறார். வெளிப்புற கண்ணாடி பூச்சு, வெளிர் கண்ணாடிப்பூச்சு, உட்புறச்சுவர் அழகு பூச்சு, சுவர் மெழுகி என பெயர்களை பெயிண்ட் டப்பாக்களில் அச்சிட்டு விற்பனை செய்கிறார்.

திருப்பூர் தென்னம்பாளையம் அருகே கடை நடத்தி வரும் ஈ.சீனிவாசன் கூறும் போது, "வாயில் இல்லாத மொழி வாழாது" என்பார் கவிஞர் காசிஆனந்தன். பெயிண்ட் என்றால் அனைவரும் ஆங்கிலத்தில் தான் சொல்வார்கள். அதனை நமது மொழியில் சொல்லிப் பார்ப்போம் என்று ஆரம்பித்தோம். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தொடங்கி, சென்னை, கடலூர், மதுரை, தேனி, புதுச்சேரி, கோவை, சேலம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் இன்றைக்கு, தமிழ்ப் பெயரால் ஈர்க்கப்பட்டு, எங்களிடம் வர்த்தகம் செய்கிறார்கள். எனது மனைவி உமாராணி நிர்வாகத்தை மேற்கொள்கிறார்.

எங்களுக்கு புகழேந்தி மற்றும் இனியன் என இருமகன்கள். தந்தை ஈஸ்வரமூர்த்தி. தாய் அலமேலு. திமுகவில் திருப்பூர் தொழிற்சங்கம் ஆரம்பிக்க முக்கியமானவர்களில் ஒருவராக இருந்தவர். இதனால் இயல்பாகவே தமிழார்வம் நிறைந்த குடும்பம். தமிழ் பெயர் உள்ள எங்களது பெயிண்ட் வேறு மாநிலங்களுக்கு விற்கப் படும்போது, அவர்களது தாய்மொழியில் பெயர்சூட்டி கலன்களில் அச்சிட்டு தர தயாராக உள்ளோம்.

எங்களிடம் சுத்த தமிழ்ப் பெயர்கள் கொண்ட பெயிண்டை வாங்கி பயன் படுத்திய பெரும் நிறுவனங்கள், உணவ கங்கள், மருத்துவமனைகள், தனியார் கல்லூரிகள் என அனைவரும் வாடிக்கை யாளர்களாக தொடர்கின்றனர். வண்ணங் களில் 2800 வகைகள் உள்ளன. அந்த வண்ணங்களின் ரகங்களையும், ஓலைச்சுவடி போல் பாதுகாக்கிறோம்" என்கிறார் இயல்பாக சிரித்தபடி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x