Last Updated : 18 Jun, 2024 05:14 PM

 

Published : 18 Jun 2024 05:14 PM
Last Updated : 18 Jun 2024 05:14 PM

வாசுதேவநல்லூர் - திருமலாபுரத்தில் முதல்கட்ட அகழ்வாய்வு பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியை ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் இன்று (ஜூன் 18) தொடங்கிவைத்தார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரம் கிராமத்தில் உள்ள குலசேகரப்பேரி கண்மாய் அருகில் சாலை அமைப்பதற்காக மண் தோண்டப்பட்டபோது தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருமலாபுரம் உட்பட 8 இடங்களில் அகழாய்வு பணியை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இதையடுத்து திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியை ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் கூறும்போது, “திருமலாபுரம் கிராமத்தில் குலசேகரப்பேரி கண்மாய்க்கு மேற்கில் இந்தத் தொல்லியல் மேடு சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சாலை அமைப்பதற்காக மண் எடுக்கும்போது சுமார் 4 அடி ஆழத்தில் தொல்லியல் எச்சங்கள் வெளிக்கொணரப்பட்டன. கற்பதுகை, முதுமக்கள் தாழிகள், வெண்மை நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மண் கிண்ணங்கள் மற்றும் மூடிகள், கருப்பு- சிவப்பு பானை, சிவப்பு நிற பானை, கருப்பு நிற பானை, மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை, ஈமத்தாழிகள் என அதிக எண்ணிக்கையில் தொல்லியல் எச்சங்கள் இங்கு கிடைத்தன.

ஈமத்தாழியின் வெளிப்புறத்தில் இரண்டு சிறிய கூம்பு வடிவ புடைப்புகளும் அதன் கீழாக ஒரு வட்டத்துக்குள் இரண்டு கோடுகள் ஒன்றையொன்று குறுக்கிடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஈமத்தாழியின் வெளிப்புறத்தில் இரண்டு சிறிய கூம்பு வடிவ புடைப்புகளுக்கு நடுவிலிருந்து மூன்று கோடுகள் தனிதனியாக பிரிந்து செல்லும் வகையிலும் அமைந்துள்ளது. ஒருசில தாழிகள் மண் தோண்டப்பட்ட குழிகளின் பக்கவாட்டில் உடைந்த நிலையில் காணப்பட்டன. இந்த தோற்றத்தைக் காணும்போது தாழிகள் மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மேற்பகுதியில் கூழாங்கற்கள் பரப்பப்பட்டிருந்ததை அறியமுடிகிறது. மனித எலும்புகளும் கிடைத்துள்ளன.

செம்பினாலான கிண்ணம், இரும்பினாலான ஈட்டி, வாள், குறுவாள், கத்தி போன்ற பொருட்கள் இங்கு கிடைத்த முக்கிய தொல்பொருட்களாகும். குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், மட்பாண்ட ஓடுகள் என அதிக எண்ணிக்கையில் இங்கிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன” என்றார்.

இந்நிகழ்ச்சியில், தென்காசி தொகுதி எம்பி-யான டாக்டர் ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்தையா பாண்டியன், துணைத் தலைவர் சந்திரமோகன், திருமலாபுரம் அகழாய்வு இயக்குநர் க.வசந்தகுமார், அகழாய்வு பொறுப்பாளர் த.காளீஸ்வரன், தென்காசி மாவட்ட தொல்லியல் அலுவலர் க.சக்திவேல், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, சிவகிரி வட்டாட்சியர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x